-K.Vijay Anandh
தற்பொது, இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார் எஸ் ஜே சூர்யா. அந்தப்படத்தில் அவருக்கு அமிதாப் திலகம் இடுவது போன்ற ஒரு காட்சி. அந்தக் காட்சியில் திலகம் இட்ட நெற்றியுடன் ஒரு காட்சி எடுத்த பிறகே , திலகம் இடும் காட்சியை குளோஸ் அப்பில் எடுக்கவேண்டியிருந்திருக்கிறது. ஒப்பனைக் கலைஞர் திலகம் இட நெருங்கியதைப் பார்த்த அமிதாப், அவரை விலகுங்கள் என்று சொல்லிவிட்டுத் தானே மறுபடியும் எஸ் ஜே சூர்யா நெற்றியில் திலகமிட்டிருக்கிறார்.
மான்ஸ்டர் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் அதை நினைவு கூர்ந்த எஸ் ஜே சூர்யா, “ அமிதாப் எனக்கு இட்ட திலகத்தை வெற்றித்திலகமாகவே பார்க்கின்றேன். ஏனென்றால், அவர் எனக்குத் திலகம் இட்ட அடுத்த விநாடியில், தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, எனக்கு போன் செய்து, மான்ஸ்டர் படத்தின் வெளியீட்டுத்தேதி உறுதியானதைத் தெரிவித்தார்.
எலி என்பது பிள்ளையார் வாகனம்., அதிலிருந்தே எனக்கு ஆசிர்வாதம் ஆரம்பித்தது. பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தான் இப்படத்தின் கதாநாயகன். மூன்று தயாரிப்பாளர்களும் கதையைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து அனைத்தையும் தரமானதாக வரவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் அவர்களின் படைப்புகள் வெளியாகும்.
ஒரு நாள் எஸ்.ஆர்.பிரபு, ஒரு கதை இருக்கிறது கேட்கிறீர்களா? என்றார். கதை சொல்லவந்த நெல்சன், நீங்கள் ஒரு எலி என்று ஆரம்பித்ததும் எப்படி இருக்குமோ? என்று நினைத்தேன். கதையைக் கேட்டதும் பிடித்திருந்தது. இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் சிறந்த உழைப்பாளி.
குழந்தைகளுக்கும்... செல்ல பிராணிகளுக்கும் எப்போதும் ஒரு நெருங்கிய உறவு இருக்கும். இப்படத்தில் எலியை வைத்து எடுத்திருக்கிறார்கள். குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள். ‘அந்தி மாலை’ பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பிரியா பவானி ஷங்கர் அழகான, திறமையான மற்றும் தனித்துவமான நடிகை. நிச்சயம் வித்யாபாலன் மாதிரி வருவார்.
சில காட்சிகள் எலிக்குத் தகுந்தாற்போல் முகபாவனை வரவில்லை என்று மீண்டும் நடித்தது வித்தியாசமாக அனுபவமாக இருந்தது.
இயக்குநர் ஒவ்வொரு காட்சி கண் இப்படி இருக்க வேண்டும், கன்னம் இப்படி இருக்க வேண்டும் என்று நுட்பமாக நடிக்க வைத்தார். அதிலும் காதும் நடிக்க வேண்டும் என்று கூறிவார்.
எஸ்.ஜே.சூர்யா நடித்து முதல் முறையாக ‘யு’ சான்றிதழ் பெற்ற படம் ‘மான்ஸ்டர்’
வாழ்க்கையில் மற்றவர்களுக்கு கதாநாயகனாக இருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால், எனக்குள் நான் கதாநாயகனாகத்தான் இருக்கிறேன். இப்படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இதேபோல் என் வாழ்க்கையை சீராக அமைத்து கொள்வேன்…” என்றார்.