சீமான், புகழ், சுபப்பிரியா, தியேட்டர் லேப் ஜெயராஜ் ஆகியோர் நடிக்க மு.களஞ்சியம் இயக்கியிருக்கும் படம் முந்திரிக்காடு. கவி பாஸ்கர், இளைய கம்பன் எழுதிய பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளம் அறிமுகம் ஏகே பிரியன். இந்தப்படத்தின் பாடல்கள் வெளியிட்டுப் பேசிய மூத்த அரசியல்வாதி நல்லக்கண்ணு தமிழகத்தில் ஆணவக்கொலைகளே இல்லாமல் போகவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தக்கதையை எங்களது பொதுக்கூட்டங்களில் பலதடவை நாடகமாக அரங்கேற்றியிருக்கிறோம். பாண்டிச்சேரி, ஈரோடு என்று தமிழகத்தின் பல பகுதிகளில் அரங்கேற்றிய இந்த நாடகம் பொருளாதார ரீதியாகவும் வசூலைக் குவித்தது. அதாவது, நாடகம் போடும் செலவை ஈடு செய்தது. அதைப்போலவே இந்தப்படமும் வணிகரீதியாக வெற்றி பெறவேண்டும். களஞ்சியத்தைப் பார்க்கும் போதெல்லாம் படத்தைப் பற்றி கேட்பேன்மா. சீமான், சசி, ராஜு முருகன் எல்லாம் இந்தக்கதைக்கு நெருக்கமானவர்கள். சோகமான விஷயங்கள் என்றால் வருத்தப்படுவதும், பருவ வயதில் காதலிப்பதும் இயல்பான விஷயங்கள். காதலித்தவன் செத்தாலும் காதல் நிற்கும். இந்தப்படம் ஆரம்பிக்கும் போது இருந்ததை விட இப்போது தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகள் அதிகமாக நடக்கிறது. படம் , வெறுமனே பார்த்து ரசிக்கத்தானா..? அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இந்தப்படம் சீக்கிரம் வெளிவந்து அதில் பேசியிருக்கும் நல்ல கருத்துக்கள் மக்களிடம் சென்று சேர வேண்டும், ஆணவக்கொலைகள் குறையவேண்டும்" என்றார்