நடிகை சந்தோஷின் ப்ளஷ் அலங்கார மையம் சார்பாக ஒப்பனை மற்றும் முடிதிருத்துதல் என்கிற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் இன்று சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடந்தது.
நடிகைகள் நமீதா, சியாமளா, ரட்சிதா, பிரியங்கா ஆகியோருடன் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு தன்னம்பிக்கையுடன் போராடி வாழ்க்கையில் ஜெயித்த டெல்லியைச் சேர்ந்த லட்சுமி அகர்வால் மற்றும் வெண்புள்ளி என்கிற தோல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டாலும் வெற்றிகரமான மாடலாகவும் திரைப்படத்துறையில் உதவி இயக்கு நராகவும் இருக்கும் ரம்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இவர்களுடம் ஒப்பனைக் கலையில் ஆர்வமும் அந்தத்துறையில் சாதித்துக் கொண்டிருக்கும் பல ஒப்பனைக் கலைஞர்களும் கலந்துகொண்டனர்.
சில வருடங்களுக்கு முன்னால், கடையில் உள் வாடகைக்கு எடுத்து நடிகை சந்தோஷியால் நடத்தப்பட்ட ப்ளஷ், இன்று சென்னையில் இரண்டு மதுரையில் ஒன்றாக மூன்று பிரிவுகளுடன் செயல்பட்டு, பல நூறு பெண்களைச் சொந்தக்காலில் நிற்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ” லட்சுமி அகர்வாலுக்கு நான் ஒப்பனை செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டேன். தீபிகா படுகோனே நடிப்பில் இவரது சுயசரிதை படம் அடுத்தமாதம் வெளியாக இருக்கும் நிலையில், டேல்லியில் இருந்து வந்து கலந்துகொண்டிருக்கிறார்…” என்று பேசினார் சந்தோஷி.
வெண்புள்ளி குறைபாடு கொண்ட ரம்யா பேசும்போது, “ நான் தினமும் என்னை கண்ணாடியில் பார்த்து ரசிப்பேன்… நமக்கு நாம் எப்படியோ அப்படி இருந்தால் போதும்..” என்றார்.
ஆசிட் வீச்சால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையிலும் தன்னம்பிக்கையுடன் வளர்ந்து இன்று அவரைப்பற்றிய சுய சரிதை பாலிவுட்டில் படமாக்கப்படும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் லட்சுமி அகர்வால் பேசும்போது, “ ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட நான் பாதிக்கப்பட்டவள் என்று சொல்லமுடியாது. ஒரு முறை தான் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டேன், ஆனால், ஒவ்வொரு முறையும் மக்கள் என்னைப் பார்த்துக் கிண்டல் செய்யும் போது நிறையவே பாதிக்கப்பட்டேன்… நாம் மற்றவர்களுக்காக எதையும் மாற்றிக் கொள்ளவேண்டியதில்லை...” என்றார்.
லட்சுமி அகர்வாலின் ஹிந்தி பேச்சை பெருந்தன்மையுடனும் ஆவலுடனும் தமிழில் மொழி பெயர்த்த நமீதா, “ நான் பிரபலங்கள் சாதனையாளர்கள் கலந்துகொண்ட பல விழாக்களில் பங்கெடுத்துள்ளேன். ஆனால், லட்சுமி அகர்வால் மற்றும் ரம்யா கலந்துகொண்ட இந்த மேடையில் கலந்துகொண்டதைத் தான் உண்மையாகவே மிகவும் பெருமையாக நினைக்கின்றேன். சந்தோஷியின் ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரால், பல பெண்கள் இன்று சுயதொழில் முனைவோர்களாக வலம் வருவதில் மகிழ்ச்சி..” என்றார்.