தரணி ராசேந்திரன் இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள படம் ‘ஞானச்செருக்கு’. ஓவியர் வீரசந்தானம், வ.ஐ.ச.ஜெயபாலன், தமிழ்மாறன் உள்ளிட்டோர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
இயக்குநரான அனுபவங்களையும், ஞானச்செருக்கு உருவான விதம் பற்றியும் பகிர்ந்துகொண்ட தரணி ராசேந்திரன், “திருவாரூர்க்காரனான நான், பொறியியல் படித்தாலும் சினிமா ஆர்வத்தால் ஒளிப்பதிவு பக்கம் என் கவனம் திரும்பியது, ஒளிப்பதிவு குறித்த டிப்ளமோ கோர்ஸ் முடித்தேன்..
சினிமாவில் உதவி இயக்குநராக சேர்வதில் ஏற்படும் காலதாமதங்களைத் தவிர்க்கும்பொருட்டு, குறும்படங்களை எடுத்து, அதன் மூலமே நிறையக் கற்றுக்கொண்டேன்.
பெரிய படமெடுக்கும் நம்பிக்கை வந்தபோது ஓவியர் வீரசந்தானத்துடன் நட்பு ஏற்பட்டது. என் கதையின் நாயகனாக நடிக்க வீரசந்தானம் பொருத்தமான தேர்வாக இருந்தார்.
இந்தக்கதையைப் படமாக எடுப்பது அபத்தமான முயற்சி என்று பலர் கூறினர். முதலில் அரைமணி நேரப்படமாக எடுத்து பார்ப்போம் என்று நினைத்தேன்.. ஆனால், ஒரு தயாரிப்பாளரிடம் இந்த கதையை கூறியபோது, அதை ஒரு பெரிய படமாக எடுக்கும் அளவிற்கு டெவலப் செய்யுங்கள் என்று ஊக்கப்படுத்தினார்.
எல்லாவற்றையும் முடித்த நேரத்தில் அவரால் அந்த படத்தை தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.. அந்த படத்தில் என்னுடன் இருந்த பலரும் அந்த சமயத்தில் விலகிவிட்டனர்.. அதன் பின்னர் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக பணம் போட்டு இந்த படத்தை எடுத்து முடித்தோம். இன்னும் சரியாக சொல்வதென்றால் க்ரவ்டு பண்டிங் / குழு நிதி முறையில் தான் இந்த படம் உருவானது.
இந்த விஷயம் ஓவியர் வீரசந்தானத்துக்கு தெரியாது ஆனால் படப்பிடிப்பு நடத்த தேவையான பணம் இல்லை என்று தெரிய வந்தபோது என்னை அழைத்து திட்டினார். பின்னர் அவரை எப்படியோ சமாதானப்படுத்தி எனது சம்பளம் எனது மாமாவின் பெர்சனல் லோன்/ தனி நபர் கடன் ஆகியவற்றைக் கொண்டு மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாக படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்..
ஓவியர் வீரசந்தானம் கூட, தனக்கு ஏதாவது சம்பளம் கொடுக்க வேண்டும் என நினைத்தால் அதையும் இந்த படத்திற்கு பயன்படுத்திக்கொள் என்று சொல்லி விட்டார்.
இத்தனை கால இடைவெளியில் தாமதமாக இந்த படம் உருவானாலும் கால மாற்றம் இதன் கதையில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் டப்பிங் முடிந்த நிலையில் ஓவியர் வீரசந்தானம் மறைவு என்னை ரொம்பவே பாதித்தது..
அதன்பிறகு சிறிய இடைவெளி விழுந்தாலும், மீண்டும் புதிய குழுவினருடன் இந்த படத்தின் வேலைகளை முடித்தேன்.. இந்த படம் வெளியாவதற்கு முன்பு இந்த படத்தின் மதிப்பு பற்றி வெளியே தெரிய வேண்டும், அதன்பிறகு அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன்….” என்றார் ஒரே மூச்சில்.
விருதுகளுக்கு அனுப்பினீர்களா..?
நான் எடுத்துள்ளது வணிக ரீதியில் வெற்றிபெறத்தக்க படம்தான் என்றாலும், ஞானச்செருக்கை திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினேன்.. கிட்டத்தட்ட நாற்பது நாடுகள் சிறந்த படமாக இதை அங்கீகரித்துள்ளன.. இந்த படத்திற்கு இதுவரை 7 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன.
நம்மூரில் யாருக்காவது படத்தைப் போட்டுக்காட்டினீர்களா../
இயக்குநர் இமயம் பாரதிராஜா இந்த படத்தை பார்த்துவிட்டு என்னை கட்டிப்பிடித்து பாராட்டியது, மிகப்பெரிய விருது பெற்றது போல இருந்தது. எழுத்தாளர்கள், முக்கியமான அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த படத்தைப் பார்த்து பாராட்டி உள்ளார்கள்.
படத்தில் பாடல்கள் இருக்கின்றனவா..?
இது வெகுஜன படம்தான்.. இந்த படத்திலும் மூன்று ராப் பாடல்கள் இருக்கின்றன..
படத்தின் கதைக்கரு என்ன..?
80 வயதில் உள்ள கலைஞனின் எழுச்சிதான் இந்த படம்.. இந்த சமூகம், அதிகார வர்க்கம் ஒரு கலைஞனை எப்படி பார்க்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தால் மிகப்பொருத்தமாக இருந்திருக்கும், அவரது படங்கள் போன்றே விறுவிறுப்பான படம், ஞானச்செருக்கு.
படத்தை திரையரங்கு கொண்டு செல்வதில் சவால்களைச் சந்தித்தீர்களா..?
நல்ல படத்தை திரையிடக்கூடாது என்று எந்த தியேட்டர்காரர்களும் நினைப்பதில்லை... நல்ல படம் என்பதை அவர்களிடம் நாம் தான் சரியாக கொண்டு செல்லவேண்டும்.. அவர்களுக்கும் வியாபாரம், குடும்பம் என்றெல்லாம் இருக்கிறது அல்லவா..? அதனால் அவர்களை நாம் குறை சொல்ல வேண்டியதில்லை.
ஞானச்செருக்கினையடுத்து தங்களது பயணம் எவ்வாறு அமையும் என்று நினைக்கிறீர்கள்..?
இதற்கடுத்த எனது படங்கள் முழுக்க முழுக்க கமர்ஷியலாகவும், அதேசமயம் எனக்கான அடையாளமாகவும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன்.
ஃஃபார்ச்சூன் ஃப்ரேம்ஸ் Fortune Frames சார்பில் செல்வராம் மற்றும் வெங்கடேஷ் இந்த படத்தை விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.