அமலா பாலுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்த மைனா படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்த ஜோன்ஸ் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் அதோ அந்த பறவை போல. மென்பொருள் துறையிலிருந்து திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் அருண் ராஜகோபாலின் ஆக்ஷன் அட்வெஞ்சர் திரில்லர் கதையை இயக்கியிருக்கிறார் அறிமுகம் கே ஆர் வினோத்.
தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், இயக்குநர் திருமலை ஆகியோர் முன்னிலையில் நடிகரும் நாடக உலகின் பிதாமகனுமான எஸ் வி சேகர் அதோ அந்த பறவை போல படத்தின் டிரையலரை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய எஸ் வி சேகர், “ பொதுவாக சினிமாக்களுக்கு சென்சார் தேவையில்லை. நாம் விரும்புகிறோமோ இல்லையோ வீட்டிற்குள்ளாகவே வரும் தொலைக்காட்சிக்குத்தான் சென்சார் தேவை. குறிப்பாக சில விளம்பரங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்கும் போது பெரியவர்களுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகின்றன. இன்னும் சில நாட்களில் தொலைக்காட்சியில் செய்தியில் இருந்து விளம்பரங்கள் வரை ஒளிபரப்புவதற்கான ஒழுங்குமுறைகள் அமல்படுத்தப்படவிருக்கின்றன.
இரண்டு சங்கங்களிலும் பலகோடிகள் முறைகேடு நடந்திருப்பதையடுத்து, தேர்தலில் நின்று ஜெயித்த நடிகர் சங்க மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளின் அதிகாரம் பறிக்கப்பட்டு, அரசின் பிரதிநிதிகள் அவற்றை நிர்வகிக்கின்றார்கள். பத்திரப்பதிவு துறையில் இருந்து வந்த அதிகாரிகளாக இருப்பதால், அவர்களுக்கு சங்க நிர்வாகத்தைப் பற்றி ஆலோசனை கூற நான் உள்ளிட்ட 9 பேர் இருக்கின்றோம். எங்களால், எந்த ஒரு உத்தரவும் பிறப்பித்து சங்கத்தை வழி நடத்த இயலாது. தமிழ் சினிமா தவிர உலகில் அனைத்து சினிமாத்துறைகளும் நன்றாகவே இருக்கின்றன. ஆந்திராவில், குறிப்பிட்ட வாரத்தில் இரண்டு பெரிய படங்கள் வெளியாகின்றன என்றால், அதே வாரத்தில் இரண்டு சிறிய படங்களுக்கும் திரையரங்குகள் கொடுக்கப்படவேண்டும் என்று சட்டமே இருக்கின்றது.
சினிமா தெரிந்துகொண்டு சினிமா எடுப்பவர்கள் தோற்றுப்போக மாட்டார்கள். தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலும் அறியப்படும் நடிகை அமலா பாலை இந்தப்படத்தில் தேர்ந்தெடுத்ததிலேயே அவர்கள் சினிமா தெரிந்தவர்கள் என்பது தெரிகிறது. அமலா பால் மிகவும் துணிச்சலான சிறந்த நடிகை. சரியான நேரம் பார்த்து படத்தை வெளியிடுங்கள், வெற்றி பெற வாழ்த்துகள்..” என்றார்.
ஆஷிஸ் வித்யார்த்தி, சமீர் கோச்சார் ஆகியோருடன் தொலைக்காட்சி பிரபலமான சிறுவன் பிரவீன் அதோ அந்த பறவை போல படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறான்.