பொங்கலன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் பட்டாஸ். தனுஷ், சினேகா நடித்திருக்கும் இந்தப்படத்திற்காக நாயகனுக்கு இணையாக படத்தில் கையாளப்பட்ட உலகின் தொன்மையானதும் தமிழர்களின் தற்காப்பு கலையுமான அடிமுறை யைக்கற்றுக்கொண்டு, மிகவும் பிரமாதமாக நடித்து அசத்தியிருப்பார், சினேகா. இந்தியன் படத்தின் பெண்கள் பதிப்போ என்று எண்ணத் தோன்றுமளவிற்கு, மகனைத் தேடிக்கொண்டு வரும் சினேகாத் தன் வழியில் குறுக்கிடும் வில்லன்களை அடிமுறையால் துவம்சம் செய்வார்.
இதோ, அதோ அந்த பறவை போல படத்தின் மையக்கதாபாத்திரமேற்று நடித்திருக்கும் அமலா பால், இஸ்ரேல் நாட்டின் தெருச்சண்டை என்று அறியப்படும் கிரவ் மகா வை முறைப்படி கற்றுக் கொண்டு, படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் தூள் பறத்தியிருக்கிறார். அமலாபால், நிச்சயமாக தமிழ்சினிமாவில் சூப்பர் ஸ்டாரினிகளுள் ஒருவராக அறியப்படுபவர். இன்று அவர் இருந்தால் போதும் படம் வியாபாரம் ஆகிவிடும் என்கிற நம்பிக்கையைத் தயாரிப்பாளர்களுக்கும், அவரை மையமாக வைத்து கதையெழுதினால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர்களையும் ஒரு சேர நினைக்க வைத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.
ஆடையில் புரட்சி காட்டியவர், தற்பொழுது அதோ அந்த பறவை போல படத்தில் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார்.
Mixed Martial Arts , அதாவது பல்வேறு தற்காப்பு கலைகளையும் கலந்து சண்டை போடுவது என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவான Krav Maga வை சென்னையில் ஸ்ரீராம் என்பவர் சொல்லிக் கொடுக்கிறார். அதோ அந்த பறவை போல படத்தில் சண்டைக்காட்சிகள் மிகவும் இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காக படத்தின் சண்டை இயக்குநர் சுப்ரீம் சுந்தரின் மேற்பார்வையில் கிரவ் மகா முறையில் சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இது குறித்து கிரவ் மகா பயிற்சியாளர் ஸ்ரீராம் கூறுகையில், “ இஸ்ரேலின் தெருச்சண்டை தான் இந்த கிரவ் மகா. நம்மூரில் குழாயடிச் சண்டைகள் எவ்வளவு கேவலமாக இருக்கும். அதுவும், ஒரு பெண் கயவர்களிடம் தனியாக மாட்டிக் கொள்ளும் போது அந்த சூழ்நிலை எவ்வளவு மோசமானதாக இருக்கும்.? அப்படிப்பட்ட சூழ் நிலைக்கு ஏற்றவாறு சண்டைக்காட்சிகள் அமைய வேண்டும் என்பதற்காக இந்த முறையில் சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கிறோம்.. அமலா பால், எனக்கு மகள் போன்றவர். மிகவும் சிறப்பாக அனைத்தையும் கற்றுக்கொண்டார்..” என்றார். இவரும் இந்தப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் என்பது கூடுதல் தகவல்.
அதோ அந்த பறவை போல பட அனுபவம் குறித்து அமலாபால் கூறியபோது, “அடர்ந்த காட்டிற்குள் சிக்கிக் கொள்ளும் ஒரு பெண், தான் சந்திக்கும் ஆபத்துகளை முறியடித்து எப்படி வெளியே வருகிறாள் என்பதே கதை. மூன்று வருடங்களாக மிகவும் கஷ்டப்பட்டு இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். இந்த காலகட்டத்தில் எனக்கு ஒன்றிற்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிவிட்டன. ஆனால், இந்தப்படத்தின் இயக்குநர் கே ஆர் வினோத் உள்ளிட்ட குழுவினருக்கு, இது ஒன்றுதான் எல்லாமே!
இந்தப்படத்தைப் பார்க்கும் பெண்கள் குறிப்பாக குழந்தைகள் தற்காப்பு கலைகளைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று விரும்புவார்கள். அந்தளவுக்கு கிரவ் மகா என்கிற இஸ்ரேலிய சண்டை முறையைப் பயன்படுத்தி சண்டைக்காட்சிகள் அமைத்திருக்கிறோம். இந்த தற்காப்பு கலையைக் கற்றுக் கொண்டதன் மூலம், தனியாக எந்த இடத்திற்கும் பயமில்லாமல் சென்று வர முடிகிறது.
இந்தப்படத்தில் நடித்திருக்கும் பிரவீனுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்..” என்றார்.
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஆக்ஷன் நடிகர்கள் என்கிற அடைமொழியைத் தாங்கி வருபவர்களில் அர்ஜுனைத் தவிர வேறு யாரும் தற்காப்புக்கலைகளைப் படித்துக் கொண்டு வந்திருக்கிறார்களா..? என்பது கேள்விக்குறியே. தாங்கள் நடிக்கும் படங்களுக்கு தேவைப்பட்டால் தற்காப்பு கலையில் பிரத்யேகப் பயிற்சி எடுக்கும் நாயகர்களும் இங்கே மிகவும் அரிதே!
அந்த வகையில், திருமணமாகி குடும்பம் குழந்தை என்று ஆகிவிட்ட நிலையிலும், இந்தக்கதாபாத்திரத்திற்கு இவரை விட்டால் ஆளில்லை என்கிற நிலையை உருவாக்கி, அடிமுறை வீராங்கனை கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுக்கும் அளவிற்கு அந்த சண்டை முறையைக் கற்ற சினேகாவும், இனி இந்த சண்டை முறை இந்தியாவில் பிரபலமடையில் என்கிற அந்தஸ்தைக் கிரவ் மகாவிற்கு Krav Maga கொடுத்திருக்கும் அமலா பாலும், தமிழ் சினிமாவின் சிங்கப்பெண்கள் என்றால் அது மிகையாகாது.
பிகு: போனவாரம் சினேகா, இந்த வாரம் அமலாபால்.. இந்த வாரம் அதோ அந்த பறவை போல படத்தின் டிரையலர் வெளியாகியிருக்கிறது. படம் விரைவில் வெளியாகவுள்ளது.