11:11 Productions சார்பாக ஸ்ருதி திலக் தயாரிக்க, சிபிராஜ் நடிக்கும் படம் “வால்டர்”. 27 ஆண்டுகளுக்கு முன் சத்யராஜ் நடிக்க பி வாசு இயக்கி பெரிய வெற்றிபெற்ற வால்டர் வெற்றிவேலின் அதே கம்பீரத்துடன் வால்டரை இயக்கியிருக்கிறார் U.அன்பு. ஆக்ஷன், திரில்லர் மற்றும் துரத்தல்களுடன் வால்டர் வெற்றிவேலின் மையப்புள்ளியாக விளங்கிய குழந்தை செண்டிமெண்டும் இருக்கும் இந்தப்படத்தின் இசையை முன்னாள் டிஜிபி தேவாரம் வெளியிட்டார். தங்களது படங்களில் நாயகன் பாத்திரத்தை காவல்துறை அதிகாரிகளாகச் சித்தரித்து படங்கள் இயக்கிய அறிவழகன், அருண்குமார், சாம் ஆண்டன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அறிவுமதி, அருண் பாரதி, உமா தேவி ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கின்றனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வால்டர் தேவாரம், “ வால்டர் வெற்றிவேல் என்று தலைப்பு வைத்துவிட்டு என்னிடம் அனுமதி வாங்க வந்தார் பி.வாசு. என் பெயர் வால்டர் வெற்றிவேல் இல்லை, ஆகவே அனுமதி தேவையில்லை என்று அனுப்பி வைத்தேன். சினிமாவுக்கும் எனக்கும் அவ்வளவாகப் பரிச்சயமில்லை. ஆனால், சினிமா துறையில் இருந்து வந்த முதல்வர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். ஒரு முறை முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி தமிழகம் வந்தபோது, திக மற்றும் திமுக பெரிய போராட்டங்களை நடத்தியது. துப்பாக்கி சூடு நடத்தி மூன்று பேர் பலியானார்கள். சென்னையில் மிகவும் பாதுகாப்பாக அவரது கூட்டம் நடந்தது. அதற்காக எம்.ஜி.ஆர் என்னை அழைத்துப் பாராட்டினார்.
வீரப்பன் என்கவுண்டர் வரை பணியாற்றியிருக்கிறேன்..
ஊட்டியில் பணியாற்றியபோது, அதிகமாகப் படப்பிடிப்புகளைப் பார்த்திருக்கிறேன். சத்யராஜுடன் அதிகம் பழகியிருக்கிறேன். சிபியை சிறுவனாகப் பார்த்திருக்கிறேன். இன்று அவரது நடிப்பில் வால்டர் படம் உருவாகியிருப்பதில் மகிழ்ச்சி, படம் வெற்றிபெற வாழ்த்துகள்..” என்றார்.
பி.வாசு பேசியபோது, “ரஜினி க்ளாப் அடிக்க, பிரபு கேமரா ஆன் பண்ண, விஜயகாந்த் இயக்க வால்டர் வெற்றிவேல் படம் ஆரம்பித்தது. நேற்று நடந்தது போல் இருக்கிறது. அப்போது சிபிராஜ் சிறுவனாக இருந்தார். இப்போது அவர் வால்டர் படத்தில் நடித்துள்ளார். சத்யராஜ் நாயகனாக நடிக்க நிறைய கஷ்டப்பட்டார். அது எனக்கு தெரியும். என்னைப் பொருத்த வரை தமிழகத்து அமிதாப் சத்யராஜ் தான். சிபிராஜ் நடிக்க வருகிறார் என சொன்ன போது அவர் நிறைய கூச்ச சுபாவம் கொண்டவர் எப்படி நடிக்க போகிறார் என நினைத்தேன் ஆனால் தன்னை செதுக்கி கொண்டு இப்போது கலக்கி வருகிறார்…” என்று பாராட்டினார்..
நடிகர் நட்டி சுப்பிரமணியம் பேசியது, “ சேவையாகச் செய்யவேண்டியது வியாபாரமாக மாறினால் ஏற்படும் விளைவுகள் தான் வால்டர் படத்தின் கதைக்கரு. கெளதம் வாசுதேவமேனன் நடிக்கவேண்டிய பாத்திரம், அவர் நடிக்க இயலாததால் நான் நடித்திருக்கிறேன்..” என்றார்.
வால்டர் படத்தின் இசையமைப்பாளர் தர்ம பிரகாஷ் , “இப்படி ஒரு தயாரிப்பாளர்கள் கிடைத்தது எங்கள் அனைவருக்கும் பெரும் ஆசிர்வாதம். கேட்டது எல்லாமே கிடைக்கும். எனது படக்குழு நண்பர்கள் அனைவரும் பேருதவியாக இருந்தார்கள். படம் கண்டிப்பாக வெற்றி பெறும்..” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சிபிராஜ் ஜோடியாக ஷ்ரின் கான்ஞ்வாலா நடித்திருக்கிறார்.
விழாவில் கலந்துகொண்ட மிஷ்கின், “ எனது நூலகத்தில் புத்தகங்களைத் திருடுவார் திலகவதி ஐபிஎஸ். ஆனால், அதன் பட்டியலை அடுத்த நாளே அனுப்பிவிடுவார். புத்தகங்களை படித்து முடித்து விட்டு, அடுத்து கொஞ்சம் திருடிச் செல்வார்..” என்று அவர்களது குடும்பத்திற்கும் அவருக்குமான நீண்ட உறவை வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.
“ வால்டர் வெற்றிவேல் நிகழ்ச்சியில் தேவாரம் ஐயா கலந்துகொண்டதாகவே நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவர் கலந்துகொள்ளவில்லை என்பதை பிறகு தான் அறிந்துகொண்டேன். அவர், எனது படமான வால்டர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பெரிய பாக்கியம்…
எனது தயாரிப்பில் என் படங்களுக்குச் செலவிடும் பட்ஜெட்டை விட அதிகமாக எனக்குச் செலவளித்திருக்கிறார் பிரபுதிலக்..” என்று கூறினார் சிபிராஜ்.
சமுத்திரக்கனி, சார்லி நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ராசாமதி.