உதவி இயக்குநர்களைப் பொருத்தவரை, இந்தப்படத்தில் பணியாற்றியிருக்கிறேன் என்று சொல்லும் போது, தயாரிப்பாளர்களால் அவர்கள் பரீசிலிக்கப்பட வேண்டும், “ஓ மை கடவுளே.. எங்களுக்கு அப்படி ஒரு விசிடிங் கார்டாக அமைந்திருக்கிறது..” என்கிறார்கள் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்கள்.
படம் வெற்றி என்பதற்கு, வேறென்ன வேண்டும்..?
படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேல், “ 5 வாரம் கழித்து நான் தனிப்பட்ட முறையில் ஒரு வெற்றிவிழா நடத்துவேன்..” என்கிறார்
படம் வெற்றி என்பதற்கு, வேறென்ன வேண்டும்..?
5 வருடங்களாகக் கதையைச் சுமந்துகொண்டிருந்தாலும், ஆறாவது வருடத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் கதையைத் திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டு வந்து, சிறப்பான படமாக ஓ மை கடவுளே வை, இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து. வெறுமனே தயாரிப்பாளராக அல்லாமல், திரைக்கதை எழுதுவது எப்படி என்பதை – சிறந்த திரைக்கதைகளைத் தேர்ந்தெடுப்பதற்காக முறையாகக் கற்றுக் கொண்டு – தயாரிப்பாளராகியிருக்கிறார் அபிநயா.
படம் வெற்றி என்பதற்கு, வேறென்ன வேண்டும்..?
“பள்ளியில் படிக்கும் போது, தன்னைத் தலையில் குட்டி படிக்க வைத்து வெற்றிபெற வைத்தவர் அக்கா, இந்தப்படம் வாயிலாக எனக்கு இன்னொரு பயணத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார்..” என்கிறார் நாயகன் அசோக் செல்வன்.
படம் வெற்றி என்பதற்கு, வேறென்ன வேண்டும்..?
அடுத்தவாரம் டைவர்ஸ் க்கு அப்ளை பண்ணிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த தம்பதிகளும், பிரேக் அப்பில் பிரிந்து கிடந்த காதலர்களும், இப்படம் பார்த்துவிட்டு பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொண்டு இணைந்திருக்கிறார்கள்.
படம் வெற்றி என்பதற்கு, வேறென்ன வேண்டும்..?
“ சினிமாவில் அப்படி என்ன கிழிக்கிற என்கிற என் தந்தை இந்தப்படம் பார்த்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தி , உனக்கு நான் ரசிகனாகிட்டேன் டா என்று கூறினார்..” என்று தழுதழுத்தார் சாரா.
படம் வெற்றி என்பதற்கு, வேறென்ன வேண்டும்..?
“ என்னை மிகவும் கவர்ந்த ஒரு சில திரைக்கதைகளுள், அதிமகாக் கவர்ந்த கதை ஓ மை கடவுளே தான். எப்படியும் இப்படத்தில் பணியாற்றிவிடுவது என்று முடிவு செய்து பணியாற்றினேன். சினிமாத்துறையில் இல்லாத என் இரு நண்பர்களை அழைத்துக் கொண்டு படம் பார்த்தேன். குலுங்கிக் குலுங்கி சிரித்து, பாப் கார்ன் மழையில் நண்பர்கள் என்னை நனைய வைத்துவிட்டார்கள்..” என்றார் கலை இயக்குநர் இராமலிங்கம்.
படம் வெற்றி என்பதற்கு, வேறென்ன வேண்டும்..?
“வாலி எழுதியிருப்பது போல, வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்குமே என்பதற்கிணங்க இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து ஆறு வருடங்களில் இந்தக் கதையை மட்டுமே சுமந்து நம்பிக்கையுடன் பயணித்திருக்கிறார். எந்த விதவாமன உத்திரவாதமும் இல்லாத அந்த காலகட்டத்தை ஒவ்வொரு படைப்பாளியும் எப்படி கடந்து ஜெயிக்கிறார்கள் என்பதே மிகச்சிறந்த விஷயம். இந்தப்படத்தின் வெற்றி அவர் உள்ளிட்ட படக்குழுவினர்கள் அனைவரது கடுமையான உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.” என்கிறார் கோ சேஷா – பாடலாசிரியர். ஓ மை கடவுளே படத்தின் நாயகிகள் ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட அனைவரும் படத்தின் வெற்றி அறிவிப்பில் கலந்துகொண்டு, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
முத்தாய்ப்பாக “ அடுத்த படத்திற்குக் கரு கிடைத்துவிட்டது, அதனை திரைக்கதையாக்க ஒரு வருடம் ஆகும்..” என்று அஷ்வத் மாரிமுத்து சொல்வதிலிருந்தே அறிமுக இயக்குநர்களும் சரி அவசரத்துக்குப் படம் இயக்குபவர்களும் சரி நிறையக் கற்றுக் கொள்ள முடியும். திரைப்படத்துறையின் வெற்றி, நல்ல திரைக்கதையை உருவாக்க அனுபவிக்கும் அந்தப் பொறுமையில் தான் பொதிந்து கிடக்கிறது.