வரும் மார்ச் 6 ஆம் தேதி வெளியாகவுள்ள காலேஜ் குமார் படத்தை ஒரு வாரத்திற்கு முன்பே பத்திரிக்கையாளர்களுக்குப் போட்டுக் காட்டுவதில் இருந்தே இவர்களின் நம்பிக்கையைத் தெரிந்துகொள்ள முடியும்.
இப்படி ஒரு அழுத்தமான ஓபனிங் காட்சி, பிரபுவிற்கு இதற்கு முன் அமைந்திருக்குமா என்று வியக்கத்தோன்றும் அளவிற்கு, அட்டகாசமான அறிமுகக் காட்சி. கன்னக்குழியழகன் என்று அழைக்கப்படும் இளையதிலகம் பிரபு, இந்தப்படத்தில் மறுபடியும் கதாநாயகனாகவே நடித்துப் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.
படத்தின் விமர்சனத்தைத் தனியாகப் பார்க்கலாம், அதற்கு முன் பட அனுபவங்களைப் பற்றிப் பகிர்ந்துகொண்ட பிரபு, “ நான் பெங்களூரில் படித்து வளர்ந்தேன். கர்நாடக மக்கள் தமிழ்ப்படங்களை அவ்வளவு கொண்டாடுகிறார்கள். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் வீட்டு இன்றைய தலைமுறை நடிகர்கள் முதல் அனைத்து கன்னட நடிகர்களும் தமிழ்ப்படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்த்து விடுகிறார்கள்.
கன்னடத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்குத் தமிழிலும் படங்கள் செய்ய வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அந்தளவுக்குத் தமிழ்த்திரையுலகினையு நேசிக்கிறார்கள், தமிழ் ரசிகர்கள் மீது பெரிய மரியாதை வைத்திருகிறார்கள்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு, கலையால் நாம் இணைந்து செயல்படவேண்டும்…” என்று கேட்டுக் கொண்டார்.
இளம் ராகுல்விஜய் நாயகனாகவும், பிரியா வடலமணி நாயகியாகவும் நடிக்க பிரபுவுக்கு ஜோடியாக பாஞ்சாலங்குறிச்சி நாயகி மதுபாலா நடித்திருக்கிறார். நாசர், மனோபாலா, சாம்ஸ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
எல் பத்ம நாபா தயாரிக்க எழுதி இயக்கியிருக்கிறார் ஹரி சந்தோஷ்.
பெற்றோர்கள் தங்களின் கனவுகளைத் தங்கள் பிள்ளைகள் மீது திணிக்காமல் அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்கிற கருத்தைச் சொல்லும் படமாக காலேஜ் குமார் வெளியாகவிருக்கிறது.
இந்தப்படம் , இளையதிலகம் பிரபுவிற்கு ஒரு வசூல்ராஜா சி ஏ வாக இருக்கும் என்றால் அது மிகையாகாது.