தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர், கதாசிரியர் அல்லுஅரவிந்த், தனது 23 ஆவது வயதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து மாப்பிள்ளை படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான இந்த மெட்ராஸ்க்காரர், கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் கழித்து தமிழ்த்திரையுகிற்கு கரம் கொடுக்கும் பொருட்டும் தமிழ் ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட பொழுது போக்கு அம்சங்களை தமிழில் கொடுக்கும் பொருட்டும் ஆஹா 100% தமிழ் என்கிற OTT தளத்தை ஆரம்பித்திருக்கிறார்.
தமிழ்த்திரையுலகின் ஜாம்பவான்கள் கலந்துகொண்ட பிரமாண்டமான நிகழ்வில் இந்த ஆஹா 100% தமிழ் OTT தொடங்கிவைக்கப்பட்டது.
ரைட்டர், சில நேரங்களில் சில மனிதர்கள் ஆகிய படங்களுடனும் ஆகாஷ்வாணி என்கிற இளமைதுள்ளும் வெப் சீரிஸுடனும் தொடங்கப்பட்டிருக்கும் இந்த தளத்தில் முழுக்க முழுக்க தமிழ்த்திரைப்படங்கள், தமிழ் இணைய தொடர்கள் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம். நாளொன்றுக்கு 1 ரூபாய் என்கிற, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்டணத்தில் இந்த தளம் வாரம் ஒரு புதுப்படம் என்கிற அளவில் அளவில்லாமல் பொழுதுபோக்குகளை அள்ளிவழங்கவிருக்கிறது.
“ அமேசான், நெட்பிளிக்ஸ் ஆகியவற்றுடன் என்னால் போட்டிபோடமுடியாது எனினும், என் சக படைப்பாளிகளுக்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்கவேண்டும் என்பதற்காகவே இதனை ஆரம்பித்திருக்கிறேன். மேலும், திரைப்படம் பார்ப்பதற்கான மீடியம் திரையரங்குகள், டிவி இன்று ஓடிடி என்று எத்தனை பரிணாமங்களை எடுத்தாலும், படைப்பாளிகளே கதாநாயகர்கள். அந்த வகையில் நானும் ஒரு கதாசிரியராக இருந்ததில் பெருமைப்படுகிறேன். தரமான படைப்புகளை தொடர்ந்து வழங்கும் தளமாக ஆஹா 100% தமிழ் OTT தளம் விளங்கும்..” என்றார் அல்லு அரவிந்த்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளரும் இயக்குநருமான சிவி குமார், “ அமேசான், நெட்பிளிக்ஸ் ஆகியவை என்னதான் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றிருந்தாலும் அமெரிக்காவில் இருந்துகொண்டு செயல்படும் அவர்களால் நம் மண் சார்ந்த படைப்புகளை வழங்க இயலாது...
அப்படிப்பட்ட நமது கலாச்சாரம், பாரம்பரியம் சார்ந்த படைப்புகளை உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் தமிழர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழங்கிட நமது மண்ணிலேயே இது போன்ற தளங்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பது மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்..” என்றார்.