இயக்குநர் சீனுராமசாமி கூறியது போல, தந்தை இடத்தை நிரப்பும் தனயனாக ஆர்கே சுரேஷுக்கு இன்னொரு நல் அடையாளம் வழங்கியிருக்கிறார் இயக்குநர் பாலா.
எம் பத்மகுமார் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்து பெரிய வெற்றிபெற்ற ஜோசப் என்கிற படத்தை விசித்திரன் என்கிற பெயரில் தமிழில் தனது பி ஸ்டுடியோஸ் சார்பாக அதே இயக்குநரை வைத்து தயாரித்திருப்பதுடன் தான் வில்லனாக அறிமுகப்படுத்திய ஆர்கே சுரேஷை கதா நாயகனாக்கி அழகு பார்த்திருக்கிறார் பாலா. முழுப்படத்தையும் பார்த்து திருப்தி பட்ட அவர், “ பரவாயில்லை... சுரேஷ் இதில் நன்றாக நடித்திருக்கிறான். வாழ்க்கையில் உருப்படியான ஒரு காரியத்தை செய்துவிட்டான். இனிமேல் அவன் அதிக பொறுப்புடன் நடந்துகொண்டு இதைவிட நல்ல கதாபாத்திரங்களில் நடித்து இந்த பெயரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்..” என்று விசித்திரன் படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழாவில் வாழ்த்தினார் பாலா.
100% இருக்கை அனுமதிக்குப்பிறகு சத்யம் திரையரங்கில் நடக்கும் முதல் திரை விழா என்கிற பெருமையை பெற்றிருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜீவி பிரகாஷ்குமார். “ தான் கதா நாயகனாக நடிக்காவிட்டாலும், இசையமைக்கிறேன் என்று ஜீவி பிரகாஷ் ஒத்துக்கொண்டதிலிருந்து இது எவ்வளவு நல்ல படம் என்று அறியமுடிகிறது..” என்றார் மூத்த தயாரிப்பாளர் காட்டரகட்ட பிரசாத்.
“ எதையாவது சொன்னால், சொன்னதை விட பிரமாண்டமாக செய்துகாட்டிவிடுவார் சுரேஷ், என் மாப்ள... நடிகனாகவேண்டுமென்று சொன்னார், இன்று நட்சத்திரமாக ஆகிவிட்டார்..” என்றார் தயாரிப்பாளர் சக்திவேல்.
“ ஏற்கனவே ஒரு சிறந்த நடிகர் நடித்து வெற்றிபெற்ற படத்தை மறு ஆக்கம் செய்யும் போது அதில் நடிப்பவர்கள் ஏற்கனவே நடித்திருப்பவரை விட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்கிற கட்டாயத்திற்கு ஆளாகிறார். அதை சரியாக புரிந்துகொண்டு நியாயம் கற்பித்திருக்கிறார் சுரேஷ்..” என்றார் சீனு ராமசாமி.
விழாவில் ஐ ஏ எஸ் பயிற்சி நிறுவனம் நடத்தும் வெற்றி அரசு, முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாங்கிட் மற்றும் அடுத்த துணைமுதல்வர் என்று அறியப்படும் ஆந்திர எம் எல் ஏ சீனிவாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பூர்ணா, மதுசாலினி, பகவதி, இளவரசு ஆகியோர் நடித்திருக்கும் இந்தப்படம் வலிமை, பீஸ்ட் ஆகிய படங்களை தொடர்ந்து வெளியாகவுள்ளது.
நிகழ்ச்சியில் இயக்குநர் எம் பத்மகுமார் பேசும்போது, “ இதே கோடம்பாக்கத்தில் உதவி இயக்கு நர் வாய்ப்பு கேட்டு அலைந்திருக்கிறேன். இங்கே சினிமா கற்றுக்கொண்டு மலையாளத்தில் பல படங்களை இயக்கிவிட்டாலும் நான் சினிமா கற்றுக்கொண்ட இம்மண்ணில், இந்த மொழியில் இயக்குநராகி அந்தப்படத்தின் விழா மேடையில் நிற்பது மிகவும் பெருமையாக இருக்கிறது..” என்றார்.
முத்தாய்ப்பாக பேசிய ஆர்கே சுரேஷ், “ சூர்யா, விக்ரம், விஜய், அஜித், ரஜினி ஆகியோர் இன்று மிகப்பெரிய நட்சத்திரங்களாக ஜொலிக்கிறார்கள் என்றால் அவர்களது அதீத மெனக்கெடலே காரணம். எந்தளவுக்கு அர்ப்பணிப்பாக சிரத்தையுடன் நடிக்கின்றோமோ அவர்களை சினிமாவும் சரி ரசிகர்களும் சரி உயரத்தில் வைத்து கொண்டாட தயங்குவதில்லை. அதை மனதில் வைத்து மிகவும் சிரத்தை எடுத்து விசித்திரனில் நடித்திருக்கிறேன்..” என்றார்.
முன்னதாக ஸ்டுடியோ 9 CEO சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார்.