-K. Vijay Anandh
நெஞ்சுக்கு நீதி, பராசக்தி 2.0?
உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடந்தது. விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "ஆர்டிகள் 15 என்கிற ஹிந்திப்படத்தின் உரிமை உட்பட இன்னும் 2 காமெடி படஙகளின் உரிமையை போனி கபூர் வைத்திருந்தார். என்னை பார்க்கவேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.தல யை வைத்து தானே படமெடுப்பார்.. நம்மை ஏன் கூப்பிடுகிறார் என்கிற சிந்தனையோடு அவரை சந்தித்தேன். உங்களை வைத்து அந்த மூன்றில் ஒன்றை தமிழில் எடுக்கலாம் என்று கூறினார். காமெடி செஞ்சு போராடிக்குது அந்த ஆர்டிகிள் 15 ல நான் நடிக்கின்றேன் என்று ஒத்துக்கொண்டேன். ஆனாலும் இரண்டு நாள் நேரம் கேட்டு நிறைய யோசித்து தான் முடிவெடுத்தேன்.
அதற்கு இயக்குநர்களை தேடிப்போனபோது பலரும் பயந்து ஒதுஙகி கொண்டார்கள். அந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா வெளிவந்திருந்தது. அதில், ஒரே ஒரு ஷாட்டை பார்த்துவிட்டு நம் படத்திற்கு அருண்ராஜா காமராஜா தான் இயக்குநர் என்று முடிவுசெய்தேன். அப்படி ஒரு இயக்குநரை அறிமுகப்படுத்திய சிவாவுக்கு நன்றி.
சரி படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்த போது, அருண்ராஜா தான் நெஞ்சுக்கு நீதி என்று வைக்கலாம் என்றார்.
தாத்தாவின் தலைப்பு, நான் அப்பாவிடம் கேட்டுச்சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு அப்பாவிடம் கேட்டேன். சரி, அதற்கு எந்த களங்கமும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி அந்த தலைப்பை வைக்க சம்மதித்தார்.
முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றேன். ஒளிப்பதிவாளர் தினேஷ், இயக்குநர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் என்னை கச்சிதமாக அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தி போக வைத்துவிட்டனர்.
இரவுபகலாக ஷூட்டிங் நடக்கும்போதும் அரசியலில் பரபரப்பாக இருந்த போதும் வீட்டை என் மனைவி கிருத்திகா பார்த்துக்கொண்டார்.
வெளியில், எனக்கு ஏதாவது சோர்வென்றால் என் நண்பன் மகேஷிடம் ( கல்வி அமைச்சர் ) 5 நிமிடம் பேசினால் போதும், மனது அமைதியாகி ஒரு உத்வேகம் பிறந்துவிடும்.
இந்தப்படத்தில் வசனங்கள் மிகவும் ஆழமாக சமூகநீதி கருத்துக்கள் தாங்கி எழுதப்பட்டிருக்கின்றன. தமிழரசன் பச்சமுத்து எழுதிய வசனங்களின் ஆழத்தை படப்பிடிப்பு நடக்கும் போதோ டப்பிங்கிலோ கூட நான் முழுமையாக உணரவில்லை. ஆனால், முழுப்படத்தையும் பார்த்த போது அதன் ஆழமும் அர்த்தமும் எவ்வளவு வலிமையானவை என்று புரிந்தது.
சைக்கோ படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கழித்து நெஞ்சுக்கு நீதி வெளியாகிறது. நிச்சயம் இப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்..." என்றார்.
இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், கொரானா பெருந்தொற்றில் காலமான அருண்ராஜா காமராஜாவின் மனைவி சிந்துவை நினைவுபடுத்திய போது அருண்ராஜா மேடையில் அழ ஆரம்பித்துவிட்டார். உதயநிதி பேசும் போது சிந்துவுடன், நெஞ்சுக்கு நீதி படக்குழுவில் இருந்து கொரானா தொற்றுக்கு பலியான இன்னும் இருவரையும் நினைவுகூர்ந்தார். அவர்கள் இன்றைய நிகழ்ச்சியில் இல்லாததன் வருத்தம் அனைவருக்கும் தொற்றிக்கொண்டது என்றால் மிகையல்ல.
நிற்க,
ஒரு திரைப்பட பத்திரிகையாளனாக இன்றைய விழாவில் நான் தனிப்பட்ட முறையில் இவர் இருந்திருக்கலாமே என்று நினைத்தது முன்னாள் முதல்வரும் உதயநிதியின் தாத்தாவும் திராவிட சமூகநீதி வசனங்களுக்கு புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கலைஞர் மு.கருணாநிதியைத்தான்.
ஒன்று,
பல திரைவிழாக்களில் ஆர்வமுடன் கலந்து கொள்ளும் அவர் இருந்திருந்தால் நெஞ்சுக்கு நீதியின் பாடல் வெளியீட்டு விழா நிச்சயமாக நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றிருக்கும்.
இரண்டு,
டிரையலரில் ஒரு காட்சி வரும் அதில் பிணத்தை எரிக்கும் வெட்டியான் ஒருவரின் மகன், அப்பா தாத்தாவையும் இந்த மேடையிலேயே எரித்திருக்கலாமே என்பான். அதற்கு, அவர் நம்மள எரிக்கத்தான் விடுவாய்ங்க, இங்கே எரியவிடமாட்டாய்ங்க... என்பார்.
அதை பார்த்துவிட்டு பல கலைஞர்களுக்கு பட்டம் கொடுத்த அவர், தமிழரசன் பச்சமுத்துவின் இதுபோன்ற வசனங்கள் நிறைந்த இப்படத்திற்கு பராசக்தி 2.0 என்றோ அல்லது நவீன பராசக்தி என்றோ பட்டம் கொடுத்திருக்கலாம்.
அவரது வசனத்தில் பலரும் நடித்துகொண்டிருந்த நிலையில், உதயிடம் நீங்கள் நடிப்பீர்களா என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது. சரளமாக தமிழ் வசனங்களை ஏற்ற இறக்கங்களுடன் உச்சரிக்கவேண்டிவருமே என்கிற தயக்கத்தில் ஏங்க... என்று சமாளித்திருந்தார். ஆனால், இன்று கலைஞர் மு.கருணாநிதி பாணியில் எழுதப்பட்ட சமூகநீதி வசனங்கள் நிறைந்த படத்தில் தாத்தாவின் தலைப்பான நெஞ்சுக்கு நீதியில் நடித்திருக்கிறார். உதயநிதியின் அப்பாவும் இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்வது போல, " திராவிட சமூகநீதி தொட்டு தொடருகிறது, திரையில்..." மூன்றாவது தலைமுறை வாயிலாகவும்