மனித உறவுகளை மையமாக கொண்ட அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற தரமான அழுத்தமான திரைப்படங்களை தந்த தங்கர் பச்சான் தற்போது இயக்கவிருக்கும் படத்திற்கு ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன' என்று பெயரிட்டுள்ளார். இப்படத்தை,வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் D.வீரசக்தி பிரமாண்டமாக தயாரிக்கிறார். ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன' படத்தின் மூலம் முதன் முறையாக தங்கர் பச்சானுடன் ஜி.வி.பிரகாஷ் இணைந்திருக்கிறார்.
இப்புதிய திரைப்படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகிய மூவருமே இது வரை நடித்திராத அழுத்தமான கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்கள். மற்றொரு முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையை, பிரபல நாயாகியாக தேர்வு செய்து வருகிறார்கள்.
மிக முக்கியமாக கருதும் இப்படத்தின் இசை அமைக்கும் பொறுப்பை ஜி.வி.பிரகாஷ் ஏற்றுள்ளார். முதன் முறையாக தங்கர் பச்சானுடன் இணைந்து பணிபுரிகிறார். பிரபலங்கள் N.K.ஏகாம்பரம் ( சோனி ஓடிடி -க்கு சேரன் இயக்கி வரும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் ) ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் தங்கவேல் ( இந்தியன்2, அயலான் ) கலையை அமைக்கிறார்.
ஜூலை மாதம் 25 முதல் தொடங்கும் படப்பிடிப்புகள் இரு கட்டங்களாக நடக்கவிருக்கிறது. ஜி. வி. பிரகாஷ் இசையில் வைரமுத்துவின் வரிகளில் உருவாகி கொண்டிருக்கும் இத்திரைப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
பிறர் அறியாத பெரிய தவறு ஒன்றை செய்துவிட்டு குற்ற உணர்வில் நிம்மதி இழந்து மன்னிப்புத்தேடி அலைபவனின் மனநிலைக்கு ஏற்ப பாடல் ஒன்றை எழுதி முடித்த அந்த நேரத்திலும் ஈரம் காயாத விழிகளுடன் இருந்த வைரமுத்து "தங்கர்பச்சான் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசைக்கும் படம் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' பாட்டெழுதும்போதே சொல்லோடு கசிந்தது கண்ணீர். விழுமியங்கள் மாறிப்போன சமூகத்திற்கு என்னோடு அழுவதற்கு கண்ணீர் இருக்குமா? இல்லை.. கண்களாவது இருக்குமா?..என தனது அழுத்தமான மன உணர்வுகளை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது படத்தை பற்றிய எதிர்பார்ப்பை எகிறச்செய்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.
வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் D.வீரசக்தி இப்படம் குறித்து பேசியபோது,"மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அற்புதமான படைப்பு இது. இக்கதையை கேட்ட மாத்திரத்திலேயே கண்ணீர்விட்டு அழுதுவிட்டேன். அடுத்த நொடியே படத்தை தயாரிக்க முடிவெடுத்துவிட்டேன். இது தங்கர் பச்சானின் அழுத்தமான மற்றொரு படைப்பு. தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு படமாக இது இருக்கும்.."என்றார். .
தங்கர் பச்சான் இயக்கத்தில் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் "டக்கு முக்கு டிக்கு தாளம்" திரைப்படத்தின் வெளியீட்டு பணிகளுக்கிடையில் இப்புதிய திரைப்படத்திற்காக பாடல்களை உருவாக்கும் பணிகளை துவக்கியுள்ளார், தங்கர் பச்சான்.