மாநகரம், கைதி, மாஸ்டர் என்று ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கமல்ஹாசன் 232 என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தே இந்தப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அழுத்தமாகவே ஏற்பட்டுவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால் தொடர் வெற்றிகளை கொடுத்த இயக்குநர், 231 வது படத்திற்கு பிறகு நான்கு வருடங்களுக்கு பிறகு நடிக்கவரும் கமல்ஹாசன் என்று இந்த அறிவிப்பு கமல்ஹாசன் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, அவரை அரசியல்வாதியாக ஏற்றுக்கொள்ளாத மற்ற பொதுவான திரைப்பட ரசிகர்களுக்கும் கூட மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டது. கொரானா காலகட்டத்தில் படத்திற்கென பிரத்யேக போட்டோ ஷூட்டுகள் நடத்த இயலாத நிலையில் கோபி பிரசன்னாவின் போஸ்டர் டிசைனும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்தக்கதைக்கு விக்ரம் என்கிற டைட்டில் தான் பொருத்தமாக இருக்கும் என்று ராஜசேகர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து பெரிய வெற்ற பெற்ற விக்ரம் படத்தின் டைட்டிலை கேட்க, அதனையும் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார் கமல்ஹாசன். இன்று வெற்றிப்படங்களின் இரண்டாம் பாகம் , மூன்றாம் பாகம் என்று வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், இது விக்ரம் படத்தின் இரண்டாம் பாகமா என்று ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ, இல்லை அந்த விக்ரம் வேறு இந்த விக்ரம் வேறு தலைப்பு மட்டுமே ஒன்று என்று விளக்கமளித்து அந்த குழப்பங்களை தீர்த்து வைத்தார் கமல்ஹாசன்.
விஜய்சேதுபதி, பஹத் பாசில், நரைன், காயத்ரி என்று ஒவ்வொரு நடிகராக ஒப்பந்தமாகி, கொரானா காலகட்டத்தில் உச்சக்கட்ட பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்து முடிந்து, ஜூன் 3 , 2022 அன்று உலகம் முழுவதும் 5 மொழிகளில் விக்ரம் பட,ம் வெளியாகிறது.
அனிருத் இசையில் உருவான விக்ரம் படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா, மே 15 இல் கமல்ஹாசனின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நேரு ஸ்டேடியத்தில் நடந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
அதனைத்தொடர்ந்து, விஷ்ணு எடவன் எழுத ரவி ஜி பாடியிருக்கும் போர்கண்ட சிங்கம் என்கிற பாடலின் பிரத்யேக திரையிடலுடன் கமல்ஹாசனும் லோகேஷ் கனகராஜும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் பேசிய கமல்ஹாசன், “ நான் எப்பொழுதுமே புதியவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமுடன் இருந்திருக்கிறேன் . 16 வயதினிலே நடிக்கும் போது பாரதிராஜாவும் புதியவர் தான். இந்த விக்ரமிலும் புதியவர்களுடன் பணியாற்றியது நிறைவைத்தந்திருக்கிறது. முற்றிலும் மாறுபட்ட ஒரு வணிக ஆக்ஷன் படத்தில் நடித்திருக்கிறேன். விஜய்சேதுபதி, பஹத்பாசில் உள்ளிட்ட நடிகர்கள் எனது ரசிகர்களாக இருந்து என்னை அவ்வப்போது பாராட்டி மகிழ்ந்தார்கள். 80% ஆக்ஷன் காட்சிகள் இருந்தாலும் யாருக்கும் துளி காயம் கூட இல்லாமல் அன்பறிவு மாஸ்டர்கள் பார்த்துக்கொண்டார்கள். லோகேஷ் கனகராஜும் அவரது அணியினரும் எனக்கு எந்தவிதமான டென்ஷனும் ஏற்படுத்திவிடாமல் அத்தனை கடமைகளையும் அவர்கள் தோளில் சுமந்துகொண்டு திறமையாக செய்து முடித்தார்கள். இருபது ஆண்டுகளுக்கு பிறகு இன்னொரு விக்ரம் படம் தயாரிக்க நேர்ந்தால் அதையும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குவார்…” என்றார்.
இந்த நிகழ்விலிருந்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமாக படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் கமல்ஹாசனும் படக்குழுவினரும் பயணிக்க இருக்கிறார்கள்.
கமல்ஹாசனின் 232 வது படமான விக்ரம் திரைப்படம் மூத்த திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் டைமண்ட் பாபுவிற்கு 600வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைப்பற்றியும் மக்கள் தொடர்பாளர் என்கிற துறையை உருவாக்கிய அவரது தந்தையான பிலிம் நியூஸ் ஆனந்தன் பற்றியும் சிலாகித்து பேசிய கமல்ஹாசன், டைமண்ட் பாபுவை கெளரவித்தார்.