நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் சசிகுமார், படத்தின் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார்.
மேலும், இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா, படத்தொகுப்பாளர் ராமர் மற்றும் படத்தினை தமிழக முழுவதும் வெளியிட்ட சக்திவேலன் ஆகியோர் ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் பேசுகையில், ‘ஆதார்’ படத்தை பற்றி பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளியான அனைத்து விமர்சனங்களையும் வாசித்தேன். பார்த்தேன். பிரமித்தேன். திரைக்கதை எழுதும் போது எத்தகைய உணர்வுடன் எழுதினேனோ... அது துல்லியமாக விமர்சனத்தில் இடம்பெற்றிருந்தது. இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. படைப்பாளிகளான நாங்கள் சில ஆண்டுகள் உழைத்து திரைக்கதை எழுதி, அதனை படைப்பாக வெளியிடுகிறோம். அதனை இரண்டு மணி நேரம் மட்டுமே பார்த்துவிட்டு, எப்படி இவ்வளவு துல்லியமாக விமர்சிக்க முடிகிறது என்ற ஆச்சரியம் என்னுள் இன்னும் இருக்கிறது. இதனை தொகுத்து ஆல்பமாக வெளியிடலாம் என்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது.
சிறந்த படங்களை சரியாக கணிப்பதிலும், தனது நிறுவனம் வாயிலாக வெளியிடவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அப்படத்தை முறையான திரையரங்குகளில் வெளியிட்டு, அப்படம் சம்பந்தமாக , அதை ஏன் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டும் வகையில் பிரத்யேகமாக பேட்டிகள் கொடுத்து, தான் கணித்த்து படியே அப்படத்தை வெற்றிப்படமாக்கி, தயாரிப்பாளர்களின் ஆபத்பாந்தவனாக விளங்குபவர் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன். அவரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
‘ஆதார்’ திரைப்படத்தின் உள்ளடக்கம், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படக்கூடியத் தகுதி கொண்டது என்று கணித்து, அதனை பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதற்கு உதவி செய்ததுடன், எட்டிற்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றதற்கு காரணமாக இருந்திருக்கிறார், திவ்யா திராவிடமணி, இவர் ஒரு உதவி இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.