-K.Vijay Anandh
ISR Ventures மற்றும் தமிழ் நாடு திறந்த நிலைப்பல்கலைக்கழகமும் இணைந்து குழந்தைகளின் உரிமை என்கிற தலைப்பில் நடத்திய ISR 5 நிமிடக்குறும்படப்போட்டியின் விருது வழங்கும் விழா நேற்று தமிழ் நாடு திறந்த நிலைப்பல்கலைகழக அரங்கில் நடைபெற்றது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சேரன் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தார். நிகழ்ச்சியில், ISR Ventures சோலையப்பன், ISR செல்வகுமார், இயக்குநர் ராசி அழகப்பன் தமிழ் நாடு திறந்தநிலைப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் எம்.மணிவண்ணன் மற்றும் பூ.தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதழியல் மற்றும் புதிய ஊடகப்புலம் உதவி பேராசிரியர்கள் முனைவர் பூ.சித்ரா மற்றும் முனைவர் சி.கார்த்திகேயன் ஆகியோர் ISR செல்வகுமார் உடன் இணைந்து நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
குறும்படத்தின் மையக்கரு குழந்தைகள் உரிமை என்பதாக இருந்ததால் சிறுமிகள் பிரணயா மற்றும் பைம்பொழில் ஆகியோருக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு வழங்கப்பட, அரங்கில் குழுமியிருந்த பார்வையாளர்களின் பலத்த கரவொலியோடு அதனை அவர்கள் சிறப்பாக நடத்தியும் காட்டினார்கள்.
நிகழ்ச்சியின் முதல் பகுதியில் பேசிய….
பேராசியர் எம்.மணிவண்ணன், “ இந்த குறும்பட போட்டிக்கு நூறு படங்கள் அனுப்பப்பட்டு, அவற்றுள் 49 தேர்வாகி அதிலிருந்து 11 படங்கள் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியிருப்பதை அறிந்து மகிழ்கிறேன். அந்த நூறுபேருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இதிலிருந்து கலைத்துறைக்கு வருவதற்கு நிறைய பேர் ஆர்வத்துடன் இருப்பது தெரிகிறது. அவர்களின் ஆர்வத்திற்கு மேடை போடும் விதமாகவும் வழிகாட்டும் விதமாகவும் ISR Ventures - ISR 5 நிமிடக்குறும்பட போட்டியை நடத்தியிருக்கிறது. கலைத்துறையில் சாதிக்கவிரும்புபவர்கள் விடாமுயற்சி, தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் மற்றும் வாய்ப்புகளை தவறவிடாமை ஆகிய மூன்றையும் கைக்கொண்டால் பெரிய அளவில் சாதிக்க முடியும். தமிழ் நாடு திறந்த நிலைப்பல்கலைக்கழகமும் பங்குபெற்றிருக்கும் இந்த குறும்பட போட்டியில் நமது பல்கலைக்கழகத்திலிருந்து யாரும் பங்கேற்கவில்லை… எதிர்காலத்தில், நமது மாணவர்களுக்கும் முறையான பயிற்சிகள் கொடுத்து அவர்களையும் இதுபோன்ற படைப்புகளை எடுக்க ஊக்குவிக்கவேண்டும்..” என்று பேசினார்.
அடுத்ததாக பேசிய பேராசியர் பூ,தியாகராஜன், “ இந்தியாவில் இருக்கும் 250 க்கும் மேற்பட்ட மற்றும் தமிழகத்தில் இருக்கும் 13 க்கும் மேற்பட்ட தொலைதூர பல்கலைக்கழகங்களில் முழுக்க முழுக்க அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளை மட்டுமே தமிழ் நாடு திறந்த நிலைப்பல்கலைகழகம் வழங்கிவருகிறது. 2002 இல் தமிழக அரசால் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் குறைந்த கட்டணத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளை கொண்டு இயங்கிவரும் இப்பல்கலைக்கழகத்தில் இதுவரை 10 லட்சம் மாணவர்கள் படித்திருக்கிறார்கள். இப்படி ஒரு பல்கலைக்கழகம் இருப்பது பெரிய அளவில் தெரியாமலே இது சாத்தியமாகியிருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கூட இதில் படித்து அரசு வேலைக்கு சென்றிருக்கின்றனர். இந்தியாவிலேயே முதல்முறையாக நான்கு வருடப்படிப்பாக Performing Arts அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கி கொண்டிருக்கிறது. இசையமைப்பாளர் வித்யாசகாருடன் இணைந்து 2009 இல் தொடங்கப்பட்ட இசைக்கல்வியில் படித்து முப்பதுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் உருவாகியிருக்கிறார்கள். அவர்களுள் ஒருவரே சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்பத்திற்கு இசையமைத்திருக்கிறார். கலைத்துறைக்கு, இப்பல்கலைக்கழகம் தொடர்ந்து பங்காற்றிக்கொண்டிருக்கும்..” என்று பேசிய அவர் மாணவர்கள், தங்களது இலக்கை Effective ஆக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, ISR 5 நிமிட்ப்போட்டியில் முதல் மூன்று இடம்பிடித்த குறும்படங்களும் ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட You are special என்கிற குறும்படமும் திரையிடப்பட்டது.
அதனையடுத்து, குழந்தைகளின் உரிமை என்பதை அடிப்படையாக வைத்து முத்தமிழின் இயக்கத்தில் உருவான மைம் கலை நிகழ்ச்சி அரேங்கேறியது.
விருதுவழங்கும் நிகழ்வுக்கு முன்னர் உரையாற்றிய ISR செல்வகுமார், “ மரத்தின் வேரானது எப்படி பூமியில் ஆழப்பதிந்துகொண்டே இருக்குமோ அதைப்போலத்தான் இயக்கு நர் சேரனும், உலகம் முழுவதும் வாழும் தமிழ்ர்களின் மனதில் ஆழப்பதிந்துகொண்டிருப்பவர். யாரையும் பாரபட்சமின்றி நேசிப்பவர், தனது படைப்புகளை மண்சார்ந்து கொடுத்துக்கொண்டிருப்பவர். அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இளம்படைப்பாளிகளுக்கு விருதுகள் கொடுப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம்..” என்றார். ஆட்டோகிராப் படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கலைஞர்களுக்கு ஒவ்வொரு பூக்களுமே… பாடலை பாட வாய்ப்பளித்து அவர்களை சேரன் பெருமைப்படுத்தியதை நினைவுகூர்ந்த ISR செல்வகுமார், ” இந்த குறும்பட போட்டியில் கலந்துகொண்ட வாத்சல்யம் படத்தின் இசையமைப்பாளர்கள் ஆகாஷ்ராஜா மற்றும் ராம்குமார் என்கிற இரண்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்..” என்று அறிமுகப்படுத்தியபோது அரங்கம் அதிர்ந்தது. அவர்களுள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆகாஷ்ராஜ் மேடையேற்றப்பட்டு கெளரவிக்கப்பட்டார், அவரை மேடையில் நடு நாயகமாக அமர வைத்து அழகுபார்த்த சேரனின் செயலும் நெகிழ்ச்சியாக இருந்தது.
அதனைத்தொடர்ந்து, இறுதிச்சுற்றில் தேர்வான 11 படங்களில் குழந்தைகள் மனநல ஆலோசகரை வைத்து ஒரு ஆவணப்படத்தை இயக்கிய ஸ்ரீமனின் பெற்றோர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
இறுதிச்சுற்றுக்கு தேர்வான ரீனா கவுர் திலன் இயக்கிய You are special க்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. ரீனா கவுர் திலன், பஞ்சாபிலிருந்து இந்த போட்டியில் கலந்துகொண்டவர் என்பதும், ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் மேம்பாட்டிற்காக தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கிவருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ISR 5 நிமிட குறும்படப்போட்டியின் விருது வழங்கும் விழாவின் முழு நிகழ்ச்சியையும் காணொலியாக கண்டுமகிழ Tamil Nadu Open University இன் அதிகாரப்பூர்வ YouTube Channel க்கு செல்ல இதை கிளிக் செய்யுங்கள்.
அதனைத்தொடர்ந்து விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த நடிகர்
பன்னீர் செல்வம் (வாத்சல்யம்)
சிறந்த நடிகை
கே. நிலா (புதுமைப் பூக்கள்)
சிறந்த குழந்தை நட்சத்திரம்
மாஸ்டர் ஹரிஷ் (செவக்காத்து சிற்பங்கள்)
சிறந்த இயக்குநர்
கண்ணதாசன் .என் (செவக்காட்டு சிற்பங்கள்)
சிறந்த திரைக்கதை
கண்ணதாசன் .என் (செவக்காட்டு சிற்பங்கள்)
சிறந்த ஒளிப்பதிவு
கண்ணதாசன் .என் (செவக்காட்டு சிற்பங்கள்)
சிறந்த படத்தொகுப்பு
கண்ணதாசன் .என் (செவக்காட்டு சிற்பங்கள்)
சிறந்த இசை
நந்தா .டி (செவக்காட்டு சிற்பங்கள்)
சிறந்த படம் உட்பட செவக்காட்டு சிற்பங்கள் மொத்தம் ஏழு விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
அனைவரும் ஆவலுடன் காத்திருந்த ISR 5 நிமிடக்குறும்பட போட்டியின் வெற்றி பெற்ற குறும்படங்கள் அறிவிக்கப்பட்டன.
மூன்றாவது இடத்தை, புதுமை பூக்கள் மற்றும் மாற்றம் பகிர்ந்துகொண்டன. ஸ்கூலுப்போலாமா இரண்டாம் இடத்தை பிடிக்க, செவக்காட்டு சிற்பங்கள் முதலிடத்தை பிடித்தது.
வெற்றிபெற்றவர்களுக்கு கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
முத்தாய்ப்பாக, முதல் மூன்று இடம் பிடித்த குறும்படங்களை கண்டுகளித்ததுடன் வெற்றிபெற்றவர்களுக்கு விருதுகளையும் வழங்கி கெளரவித்த இயக்குநர் சேரன் பேசியபோது, “இந்த குறும்படங்களை பார்க்கும் போது, இன்னும் பத்து படம் இயக்கவேண்டும் என்கிற உத்வேகம் எழுகிறது. குறிப்பாக செவக்காட்டு சிற்பங்களுக்கு போட்டியாக நாமும் ஒரு படம் இயக்கவேண்டும் என்று தோன்றுகிறது….
ISR செல்வகுமாரே குழந்தையை போலத்தான், இந்த குறும்படபோட்டிமூலம் நிறைய பேருக்கு அவர்களது அடையாளத்தை கண்டுபிடிக்க வாய்ப்பளித்திருக்கிறார்… வாழ்க்கையை இலகுவாக்கும் இதுபோன்ற மேடை அமைத்த அவருக்கு பாராட்டுகள்…
குழந்தைகள் உரிமையென்றால் என்ன..? அதைப்பற்றி யோசிக்காமலேயே வாழ்க்கையை கடந்துவந்துவிட்டோம்…
எங்கள் பெற்றோர் எங்களை பெற்று, அன்புகாட்டி வேண்டியதை செய்துகொடுத்து ஆளாக்கினார்கள்….. நான் இரண்டு பெண்குழந்தைகளை பெற்று அவர்கள் விரும்பியதை செய்துகொடுத்து ஆளாக்கினேன்… எல்லாம் இயல்பாக நடந்தது….. மாறாக குழந்தைகள் மீது திணிக்கின்ற, அவர்களின் விருப்பங்களை தெரிந்துகொள்ளாமல், அவர்களுக்கான நேரம் செலவிடாமல் கமிட்மெண்ட்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் போதுதான் குழந்தைகளின் உரிமை மறுக்கப்பட்டிருப்பது தெரிகிறது….
எனது மனைவி, கொஞ்சம் காதுகொடுங்க என்று கேட்பார்கள். அந்த சக்திவாய்ந்த வார்த்தைக்கு செவிசாய்த்து அமரும் போது குடும்பங்களில் ஏற்படும் பல பிரச்சினைக்கு தீர்வுகள் கிடைதுவிடுல்ம்… பெண்கள் பேசவேண்டும், அனைத்தையும் மனதிலேயே வைத்து பூட்டிவிடக்கூடாது… முதலில் பேச ஆரம்பித்தால் தான் அடுத்த போராட முடியும்…
முக்கியமாக குழந்தைகள் உரிமை என்ன என்பதை பெற்றோர்கள் தெரிந்து கொள்லவேண்டும்.
இந்த நிகழ்ச்சிவாயிலாக நான் பல இனிமையான நினைவுகளை எடுத்து செல்கிறேன்..” என்றார்.
இறுதியாக, உதவிபேராசிரியர் முனைவர் சி.கார்த்திகேயன் நன்றியுரை நிக்ழ்த்த விழா இனிதே நிறைவுற்றது.
தமிழ் சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் சினீமா சார்ந்த வீடியோக்களை ( அதிகாரப்பூர்வமான காணொலிகளை மட்டும் ) கண்டு மகிழ மைசிக்ஸர்.காம் இன் YouTube Channel ஐ Sbscribe செய்ய இந்த லிங்கில் செல்லுங்கள், நன்றி.
முன்னதாக, இறுதி சுற்றுக்கு தேர்வான 11 படங்களை இயக்கிய இயக்குநர்கள் அனைவருக்கும் மைசிக்ஸர்.காம் சார்பாக ஒளிப்பதிவாளர் CJ ராஜ்குமார் எழுதிய திரைப்பட லென்ஸ் மற்றும் காட்சியமைப்புகள் குறித்த தகவல்கள் அடங்கிய ஃபோகஸ் – Focus னும் புத்தகம் வழங்கப்பட்டது. அதனை இயக்குநர் சேரனுடன் சமீபத்தில் வெளியான கலகத்தலைவன் படத்தின் ஒளிப்பதிவாளர் தில்ராஜும் இணைந்து வழங்கினார்கள்.