பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ், ஹைதராபாத்தில் திரளாகக் கூடிய ரசிகர்களை சந்தித்து, அவர்களிடம் உரையாடியும், அன்பு பாராட்டியும் மகிழ்ந்தார்.
Subscribe mysixer.com on youtube for videos
'பாகுபலி' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாஸிற்கு தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநில எல்லைகளைக் கடந்து தென்னிந்தியா மற்றும் வட இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு ரசிகர்களுக்கும் தங்களது அபிமான நட்சத்திரத்தை சந்திக்க எப்போதும் ஆவலுடன் காத்திருப்பார்கள். இந்நிலையில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'ராதே ஷ்யாம்' படத்திற்காக அறிவிக்கப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இதன் போது நடிகர் பிரபாஸ் கண்ணை கவரும் வெளிர் நிற ஆடைகளுடனும், பிரத்யேக கண்ணாடியை அணிந்து நிகழ்வில் கலந்து கொண்டார். படப்பிடிப்பு பணிகளில் பரபரப்புடன் ஈடுபட்டிருந்தாலும் ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கி கலந்து கொண்ட பிரபாஸ், அதீத அன்பு காட்டிய ரசிகர்களுடன் அளவளாவி மகிழ்ந்தார். மேலும் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். ரசிகர்களின் உற்சாகமான கரவொலிகளுக்கிடையே பணிவாகவும், பக்குவமாகவும், புன்னகையுடனும் உரையாடினார்.
இதனிடையே நடிகர் பிரபாஸ் தற்போது ஓம்ராவத் இயக்கத்தில் 'ஆதி புருஷ்' எனும் திரைப்படத்திலும், பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' எனும் திரைப்படத்திலும், நாக் அஸ்வின் இயக்கத்தில் 'ப்ராஜெக்ட் கே ' எனும் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.