
தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்களுக்கு 10 ஆயிரத்து 323 குடியிருப்புகள் கட்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக் கழகம் 492 கோடியே 49 இலட்சம் ரூபாய் கடனுதவி வழங்கியது. இதற்கான ஒப்பந்தம் தமிழக முதல்வர் மு.கருணா நிதி முன்னிலையில் கையெழுத்தானது.
தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், சின்னத்திரைக் கலைஞர்கள் மற்றும் நடிகர்-நடிகையர்க்கு வீடுகள் கட்டுவதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் 90 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து 4.1.2010 அன்று முதலமைச்சர் கலைஞர் அவர்களால் ஆணையிடப்பட்டது. “கலைஞர் நகர்” எனப் பெயரிடப்பட்ட அந்த நிலப்பரப்பில் தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் வாயிலாக 6 நிலைகளில் முதல் தொகுதி குறைந்த வருவாய்ப் பிரிவில் 113 கோடியே 70 இலட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 3 ஆயிரத்து 804 குடியிருப்புகள்; இரண்டாம் தொகுதி குறைந்த வருவாய்ப் பிரிவில் 175 கோடியே 64 இலட்சத்து 43 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 4 ஆயிரத்து 155 குடியிருப்புகள்; முதல் தொகுதி மத்திய வருவாய்ப் பிரிவில் 142 கோடியே 4 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரத்து 172 குடியிருப்புகள்; இரண்டாம் தொகுதி மத்திய வருவாய்ப் பிரிவில் 84 கோடியே 84 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 700 குடியிருப்புகள்; மூன்றாம் தொகுதி மத்திய வருவாய்ப் பிரிவில் 33 கோடியே 54 இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 246 குடியிருப்புகள்; நான்காம் தொகுதி மத்திய வருவாய்ப் பிரிவில் 37 கோடியே 93 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 246 டியிருப்புகள் இதர செலவுகள் உட்பட மொத்தம் 674 கோடியே 84 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரத்து 323 குடியிருப்புகளைக் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கழகம் (ஹட்கோ), தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின்மூலம் தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டுறவு வீட்டுவசதிச் சங்கத்திற்கு 492 கோடியே 49 இலட்சம் ரூபாய் கடனுதவி வழங்கிட இசைவளித்துள்ளது. இந்நிதியுதவியைப் பெறுவதற்காக தமிழக முதலமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற ஒப்பந்தத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சுடலைக் கண்ணன் மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக் கழகத்தின் செயல் இயக்குநர். கே. சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று (8.1.2011 அன்று) கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வின்போது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைச் செயலாளர் அசோக்டோங்ரே, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக் கழக நிதி இயக்குநர் டி. பிரபாகரன், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் தலைவர் இராம. நாராயணன், “பெப்சி” அமைப்பின் தலைவர் வி.சி.குகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.