
பொங்கல் சாப்பிட மட்டும்தான் தெரியும்!
- சினேகாவின் ஜாலி பேட்டி
உடனிருப்பவர்களையும் உற்சாகம் கொள்ள வைக்கும் குணம் சிலருக்கு மட்டுமே உண்டு. அவர்களில் ஒரு சினேகா. அந்த முகமும் அசரடிக்கும் புன்னகையும் தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவை.
பொங்கலுக்கு ஒரு பேட்டி என்றதும், 'அதுக்கென்ன தாராளமா... என்னை பொங்கல் வைத்துக் காட்டச் சொல்லாமலிருந்தால் சரி... ஏன்னா எனக்கு பொங்கல் சாப்பிட மட்டும்தான் தெரியும்", என எடுத்த எடுப்பில் டாப் கியரில் போக, பொங்கலின் குதூகலம் அங்கேயே தொடங்கிவிட்டது.
பொங்கல் பத்தி ஒரு நடிகையா உங்க அனுபவம்?
பொங்கல்னா எல்லா நடிகைகளுக்குமே படம் ரிலீஸ்தான் ஸ்பெஷலா இருக்கும்.... அதுவும் எனக்கு பொங்கலன்று வெளியான படங்கள் மறக்கமுடியாதவையா அமைஞ்சிருக்கு.
என் முதல் படம் விரும்புகிறேன், பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம் இப்படி நிறைய படங்கள் வெளியானது பொங்கல் தினத்தில்தான். மறக்க முடியாத படங்கள் அவை.
பொங்கல் கொண்டாடியிருக்கீங்களா...?
நானும் இந்த ஊர் பொண்ணுதானே... பொங்கல்னா எனக்கும் ரொம்ப விசேஷமான நாள்தான். பொங்கலப்போ குடும்பத்தோட இருக்கிறது ரொம்ப உற்சாகமா இருக்கும். சினிமாவுல ஆயிரம் புது காஸ்ட்யூம் போட்டாலும், பொங்கலுக்கு புதுசா ட்ரஸ் எடுக்கறது தனி பரவசம். அதை நானும் அனுபவிச்சிருக்கேன்.
மத்தபடி பொங்கல் நல்லா சாப்பிடுவேன். சாப்பிட்டுட்டா எடை போட்டுடுமே.. அதுக்காக வொர்க் அவுட் பண்ணனுமே என்ற கவலையுடன்!
இந்த வருஷம் பொங்கலுக்கு உங்க படம் எதுவும் வரலையா?
வருஷா வருஷம் எப்படியாவது பொங்கலுக்கு அல்லது அந்த சீஸனுக்கு ஒரு படம் வந்துடும். போன வருஷம் கூட கோவா வந்தது. பொங்கலுக்கு இல்ல... ஜனவரில. இந்த வருஷம் பவானி ஐபிஎஸ். இந்த மாச கடைசில வரும்னு நினைக்கிறேன்.
நடிக்க வந்ததிலிருந்து உங்களுக்கான இடத்தை தொடர்ந்து தக்க வச்சிக்கிட்டிருக்கீங்க... தொடர்ந்து செய்திகளின் நாயகி நீங்கதான். அந்த ரகசியம் என்ன?
எதையும் நான் திட்டமிட்டு உருவாக்கவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் செய்திகளுக்குக் காரணம். மற்றபடி சினிமாவை முழுமையாக நேசிக்கிறேன். பணம் ஒன்றே குறிக்கோள் என்று நினைக்காமல், கண்ணியமான வேடங்கள், நிறைவான வேடங்களை மட்டுமே தொடர்ந்து செய்கிறேன்.
காதல், திருமணம் பற்றியெல்லாம்...?
அடடா.. ஆரம்பிச்சிட்டீங்களா. அதெல்லாம் வரும்போது வரும்... நடக்கும் போது நடக்கும். அதுவரை என்காதல் சினிமாதான்!