சீடன் படத்தின் பாடல்கள் மற்றும் டிரையலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. சுப்ரமணிய சிவா – தீனா கூட்டணியில் மன்மத ராசா மன்மத ராசா பட்டி தொட்டியெல்லாம் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். மன்மத ராசா தனுஷும் இந்தப் படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க தீனாவிற்கு கேட்கவா வேண்டும். தனது முந்தைய இசைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இசையினை வழங்கியிருக்கிறார். பாடல்களை பா.விஜய் மற்றும் யுகபாரதி எழுதியிருக்கிறார்கள்.
”கல்யாண சமையல் சாதம்...” ”என்ன சமையலோ..” போன்ற பாடல்கள் வரிசையில் தமிழக அடுப்பங்கரைகளில் நிரந்தரமாக ஒலிக்கச் சீடன் பட்த்திலும் ஒரு பாட்டு வைத்திருக்கிறார்கள். பா.விஜய் எழுதியிருக்கும் “சரவண சமையல்..” என்று தொடங்கும் அந்தப் பாடல் நமது மண்ணின் மணமிக்க சமையல் முறைகளையும் சத்துக் குறையாமல் சமைத்து சாப்பிடுவதை வலியுறுத்தும் விதமாக இந்தக் கால அவசர யுக இல்லத்தரசிகளுக்கு இனிய பாட்த்தினைக் கற்றுத்தரும் விதமாக அமைந்திருக்கிறது.
தமிழ்க்கடவுள் முருகனை நினைத்துப் பாடும் பாடல் மதுரைச் சின்னப்பொண்னும் சங்கர் மகாதேவனும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
இவற்றைத் தவிர இன்னும் 4 பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
நந்தவனம் என்ற பெயரில் மலையாளத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற படத்தைத் தமிழ் ரசிகர்களுக்காக பல மாறுதல்களைச் செய்து தமிழில் சீடன் என்று பெயரிட்டு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமான மாறுதல் மலையாளத்தில் ஜெகதீஷ் ஸ்ரீ ஹரி கெளரவத் தோற்றத்தில் நடித்த கதாபாத்திரத்தை இன்னும்கொஞ்சம் மெருகேற்றி தனுஷை நடிக்க வைத்திருக்கிறார்கள். கெளரவத் தோற்றம் என்ற பொழுதிலும் சீடன் திரைக்கதையில் மனதைப் பறிகொடுத்த தனுஷ் இடைவேளையில் அறிமுகமாகி இறுதிக்காட்சி வரை கிடட்த்தட்ட இரண்டாம் பகுதி முழுவதும் வரும் அளவிற்கு நடித்துக் கொடுத்திருக்கிறார். முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு சமையல்காரன் கதாபாத்திரத்தில் “சமைத்து(வெளுத்து)க் கட்டியிருக்கிறார். சீடன் திரைப்படத்தினை தன் அம்மா,மனைவி,சகோதரி உட்பட அனைத்துப் பெண்களுக்கும் மற்றும் தான் விரும்பி வழிபடும் சிவனுக்கும் அர்ப்பணிப்பதாகத் தனுஷ் கூறினார். இத்தனை சிறிய வயதில் தனுஷ் அடைந்திருக்கும் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு அவர் தன் வீட்டுப் பெண்களுக்கு மிகவும் மரியாதை கலந்த முக்கியத்துவம் கொடுப்பதும் ஒரு காரணம் என்பது அவரது பேச்சில் இருந்து தெரிய வருகிறது.
பெண்களை மையமாக வைத்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் சீடன் படத்தில் அனன்யா கதாநாயகியாக நடித்து இருக்கிறார். நந்தவனத்தில் நவ்யா நாயர் நடித்திருப்பதை விட மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப் படம் நாடோடிகளுக்குப் பின் தமிழ்த் திரையுலகில் தனக்கு ஏற்பட்ட வெற்றிடத்தைப் போக்கும் படமாக மட்டுமல்லாமல் தொடர்ந்து பலபடங்களில் நடிக்க வாய்ப்பினையும் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை அனன்யாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
கிட்டத்தட்ட 7 வருடங்கள், சினிமாவில் இயக்குனராக சாதிக்க வேண்டும் என்று அலைந்து திரிந்து கடைசியில் எதுவும் கைகூடாமல் இராணுவத்தில் சேர்ந்து விடலாம் என்ற முடிவுடன் சொந்த ஊருக்குத் திரும்பிச்சென்ற பிறகு 7 வருட இயக்குனர் முயற்சி பட்டாதாரி இளைஞர் கிருஷ்ணாவை சீடன் படத்தில் கதாநாயகனாக வாய்ப்பு கொடுத்து அழகு பார்த்திருக்கிறது. காதல் காட்சிகளில் சிறிது கூச்சப்பட்டிருக்கிறார் என்பதைத் தவிர படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று தனுஷ் மற்றும் இயக்குனர் சுப்ரமணியசிவாவால் மேடையில் வெகுவாகப்பாராட்டப் பெற்றார். கிருஷ்ணா ”தியேட்டர்” என்று அழைகப்படும் சில “மேடை நாடகங்களில்” நடித்து தன்னை தயார்படுத்தியிருக்கிறார்.
தனுஷ் – விவேக் கூட்டணி சமீப காலங்களில் நகைச்சுவையில் கொடி கட்டி பறந்து கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்தப் படத்திலும் எந்த மதத்தையும் சேராதா புது மாதிரித் தத்துவ சாமியாராக வந்து பக்த கோடிகளுக்கு நகைச்சுவை அருள் பாலித்திருக்கிறார். விவேக் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர் என்பதையும் தாண்டி அவர் ஒரு சிறந்த ஹார்மோனியக் கலைக்கலைஞர் மற்றும் பரத நாட்டியக்கலைஞர் செய்திகள் சுப்ரமணியசிவா வாயிலாக நமக்குத் தெரிய வந்தது.
மலையாளத்தில் 50 , ஹிந்தியில் 7 படங்களும் தயாரித்திருக்கும் குட் நைட் மோகன் ஆஹா விற்குப் பிறகு தமிழில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் சீடன். ஆர்.பி.செளத்ரியுடன் சேர்ந்து புதுவசந்தம், கரும்புள்ளி போன்ற படங்களை தயாரித்ததையும் நினைவு கூர்ந்தார். குட் நைட்டில் இருந்து தான் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் தோன்றியிருக்கிறது.
மூத்த நடிகைகள் சுஹாசினி, ஷீலா மற்றும் மனோபாலா,மயில்சாமி இளவரசு,மீராகிருஷ்ணன் உமாபத்மநாபன் நடிக்க யோகிக்கு அடுத்து இந்தப் படத்திற்குத் திரைக்கதை,வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் சுப்ரமணிய சிவா. படப்பிடிப்பிறகுப் பிந்தைய வேலைகள் முழுமூச்சில் நடந்து வரும் சீடன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.