60 ஆண்டுகளில், 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாடு, மொழி, மதம், சமூக வேறுபாடுகளை தகர்த்து எறிந்து உலகத் திரைப்பட ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு “சினிமாவின் இதயம்” விருது வழங்கப்படுகிறது.
நாக்பூரைத் தலைமையிடமாக்க் கொண்டு இயங்கிவரும் நிர்சார் பிலிம் சொசைட்டியின் 2 வது உலகத் திரைப்பட விழா நடக்கிறது. தமிழ் சினிமா அதன் சிறப்பான படைப்பாளிகளாலும் , சிறந்த நடிகர்களாலும், திறமையான தொழில் நுட்பக் கலைஞர்களாலும், ஆஸ்கார் விருது நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோர்களாலும் மற்றும் யதார்த்த திரைப்படங்களாலும் உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களைக் கவர்ந்து வியாபார ரீதியிலும் அசுர வளர்ச்சி கண்டிருக்கிறது. ஆகவே தமிழ் சினிமாவைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்த வருட உலகத்திரைப்பட விழாவிற்கான கருப்பொருளாய் (Theme) தமிழ் சினிமா தேர்ந்தெடுக்கப்பட்டு கெளரவப்படுத்தப் பட்டிருக்கிறது.
தமிழ் சினிமாவிற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக மூத்த திரைக்கதையாசிரியரும் வசனகர்த்தாவும் தமிழகத்தின் முதல்வருமான மு.கருணாநிதி, இளைஞன் திரைப்படத்திற்குச் சிறப்பான ஒரு கதைக்களம் அமைத்து அந்த காலகட்டத்துக்கு மிகவும் பொருத்தமாக நேர்த்தியாக திரைக்கதை-வசனங்கள் எழுதியமைக்காக நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தமிழ் சினிமாவின் மூத்த கலைஞருக்கு “சினிமாவின் இதயம்” (Heart of Cinema) என்கிற மிகவும் பொருத்தமான பெயரோடு அறிவிக்கப்பட்ட இந்த விருது வரும் பிப்ரவரி 10ம் தேதி நடைபெறவுள்ள உலகத்திரைப்பட விழாவில் வழங்கப்படும்.
-K.விஜய் ஆனந்த்