a K Vijay Anandh review
ஃபிலிம் மேக்கிங் என்பதை டெக்னிக்கலாக கையாண்டு தமிழ் சினிமாவை உலகத்தரமான சினிமாவை கொடுக்கும் ஒரு சில இயக்குனர்களில் அறிவழகன் க்கு சிறப்பான இடம் உண்டு என்றால் அது மிகையல்ல.
சப்தம் படத்தை தொழில் நுட்ப அற்புதங்களின் உச்சம் எனும் அளவிற்கு மிகச் சிறப்பாக கொடுத்து இருக்கிறார், அறிவழகன்.
இசையமைப்பாளர் தமன் மற்றும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் குழுவினரின் அபாரமான உழைப்பு ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது. அருணின் ஒளிப்பதிவு மற்றும் சாப ஜோசப்பின் எடிட்டிங் என்று மிரட்டலாக அமைந்திருக்கிறது. மனோஜ் குமாரின் கலைவண்ணம் மற்றும் கலரிஸ்ட் ரங்கா ஆகியோர் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய தூண்களாக பணியாற்றி இருக்கிறார்கள்.
பேய் விரட்டுபவர் என்பது மாறி பேயை கண்டுபிடிப்பவர் அல்லது அமானுஷ்ய ஆத்மாக்களை கண்டுபிடித்து அவர்களுடன் உரையாடி சம்பந்தப்பட்டவர்களின் பிரச்சனைகளை போக்குபவர்கள் என்பது இப்பொழுது ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதும் அது சார்ந்த ஆராய்ச்சிகள் மற்றும் படிப்புகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருப்பதும், வியப்பான ஒன்று.
அப்படி ஒரு கோஸ்ட் இன்வெஸ்டிகேட்டராக ஆதி, அமானுஷ்ய மரணங்கள் நிகழும் கல்லூரிக்கு வருகை தருகிறார். அடிக்கடி இடது கையால் கண்ணாடியை சரி செய்து கொள்வது போன்ற சின்ன சின்ன மேனரிஸன்களை சிறப்பாக வெளிப்படுத்தி அவரது கதாபாத்திரத்தை ரசிக்க வைத்திருக்கிறார். தான் படித்து அறிந்த விஷயங்களுக்கு முற்றிலும் முரணான கருத்துக்களைக் கொண்ட லட்சுமி மேனன் உடன் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் சுவராசியமான ரகம்.
ஆதி மற்றும் அறிவழகன் கூட்டணியில் உருவான ஈரம் ஒன்று சப்தத்தையும் ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள் என்றால் மிகையல்ல.
இவர்கள் இருவரை தவிர இரண்டு படங்களுக்குள்ளும் இருக்கும் இன்னொரு ஒற்றுமை அதில் ஈரம் இதில் சப்தம். அதே நேரம் திரைக்கதையில் வித்தியாசமாக பயணிக்கிறது சப்தம்.
லட்சுமிமேனன், மாணவியாகவும் பேராசிரியராகவும் தன்னை அறியாமலேயே நல்ல ஆத்மாவின் ஊடகமாக மீடியமாக இருக்கும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மதர் தெரேசா, எல்லோருக்கும் பிடித்த இளவரசி டயானா இரண்டு பேர்களையும் சேர்த்து மதர் டயானா என்கிற அளவிற்கு ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் சிம்ரனை நடிக்க வைத்திருக்கிறார்கள். மூளை வளர்ச்சி அற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளை இசை மூலம் பராமரித்து பாதுகாக்கும் அவரது தாயுள்ளம் போற்றத்தக்கதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இன்னொரு புறம் நான்சியாக நாசக்கார சக்தியாக லைலா. அவரது டிரேட் மார்க் சிரிப்பை இந்த படத்தில் ஒளித்து வைத்து விட்டு சீரியஸான வில்லியாக மிரட்டி இருக்கிறார்.
நல்லவர்களின் உதவியுடன் கெட்டவர்களை பழிவாங்கும் ஆத்மா என்கிற வழக்கமான கதை என்றாலும், தொழில்நுட்ப ரீதியாக சிறந்த படங்களை விரும்பும் ரசிகர்களின் தேர்வாக இந்த படம் இருக்கும் என்பதில் மிகையல்ல.
சப்தம், அறிவழகன் ஆதி கூட்டணியின் இன்னொரு வெற்றி !