அகத்தியா

mysixer rating 4/5

a K Vijay Anandh review

பா விஜய், சிறந்த ஒரு பாடல் ஆசிரியர் அவருக்குள் ஆகச் சிறந்த ஒரு படைப்பாளியும் ஒளிந்து இருக்கிறார் என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட விஷயம் தான். இந்தப் படத்தில் அவர் கையாண்டிருக்கும் திரைக்கதை அதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. சமகால காட்சிகள்,  இன்னொரு பக்கம் சுதந்திர போராட்ட காலகட்டம்,  மனிதனை வருத்தும் தீர்க்க முடியாத நோய்,  அதற்கு சித்த மருத்துவத்தில் இருக்கும் நிரந்தர தீர்வு என்று நான்கு வகையான  விஷயங்களை கோர்வையாக்கி | சிறப்பாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

1940 காலகட்டங்களில் காட்டிற்குள் ஒளிந்திருக்கும் நகரங்கள் போன்று திருவண்ணாமலையையும் பாண்டிச்சேரியையும் பார்க்கும் பொழுது அந்த காலகட்டத்திற்கு சென்று விட மாட்டோமா என்று ஏங்க வைத்து விட்டார்கள். அப்படிப்பட்ட காட்சி அமைப்புகளுக்கு மெனக்கெட்ட ஒளிப்பதிவாளர் தீபக்குமார், ஆர்ட் டைரக்டர் சண்முகம் மற்றும் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தொழில்நுட்பக் குழுவினர்களுக்கும் முதலில் பாராட்டுகள்.

படத்தின் தலைப்பே 18 சித்தர்களின் தலைமைச் சித்தரான அகத்தியரின் பெயர் தாங்கி இருப்பதும், படத்தில் ஜீவாவின் ஜனனம்  முதல் ஆங்காங்கே சித்தர்களின் அருள் கிடைப்பதாக காட்சிப்படுத்திய விதங்களிலும் அகத்தியா ஒரு சிறப்பான அனுபவத்தை தமிழ் ரசிகர்களுக்கு கொடுக்கும் என்றால் அது மிகையல்ல.

நடிகர்கள் வரிசையில்  கதாநாயகர்களை குறிப்பிடுவதற்கு முன், கதாநாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரோகினியை பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும். எலும்புருக்கி எனப்படும் ஆபத்தான நோய் தொற்றிய பெண்மணியாக, முடிகள் கொட்டி போய் ஒரு விகாரமான தோட்டத்துடன் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். சமீப காலங்களில் படத்திற்கு படம் அவர் ஏற்று படிக்கும் கதாபாத்திரங்களில் இந்த கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தரும் என்றால் மிகையல்ல. அவரது கணவராக ஜீவாவின் தந்தையாக, சார்லி வழக்கம் போல சிறப்பாக நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் ஜீவா ஒரு திரைப்பட கலை இயக்குனராகவே நடித்திருக்கிறார். அவரது பிறப்பு முதல், தான் சிக்கிக்கொண்ட ஒரு பொறியிலிருந்து தப்பிக்கும் போராட்டம், அதற்குள் ஒளிந்திருக்கும் முடிச்சுகளை அவிழ்ப்பதில் இருந்து, தனது அம்மாவின் மருந்தும் அதற்குள்ளாக தான் ஒளிந்திருக்கிறது என்பதை அறிந்து அதனை கொண்டு வருவது வரையிலான விறுவிறுப்பான திரைக்கதையே அகத்தியா. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழுமையான திரைப்படத்தில் தன்னை முழுமையாக ரசிக்கவும் வைத்திருக்கிறார் ஜீவா.

சித்தார்த்தன் என்கிற சித்த வைத்தியராக 1940 இல் அந்த கால விவேகானந்தரைப் போல உலகம் முழுவதும் பயணித்து சித்த மருத்துவத்தை பற்றிய பெருமைகளை உலகிற்கு எடுத்துச் சொல்லும் அற்புதமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் அர்ஜுன்.

கதாநாயகியாக ராசி கண்ணா, ஜீவா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையான ஒரு தருணத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சியில் முழுக்க முழுக்க கிராபிக்ஸில் அமைக்கப்பட்டிருக்கும் பேய்களுக்கும் ஜீவாவிற்கும் இடையிலான சண்டை காட்சிகளை குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள்.

பிணங்களை பாதுகாக்க 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவழித்து, பல்லாயிரம் கோடி மதிப்பிலான பொது இடங்களில் கல்லறைகள்,  நினைவு மண்டபங்கள் கட்டுவதை விட அந்த பணத்தில், சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை அமைக்கலாம் என்று | பா விஜய் இயக்கியிருக்கும் அகத்தியா படம் பார்க்கும் பொழுது தோன்றுகிறது.

அகத்தியா, சித்த மருத்துவத்தை கொண்டாடச் செய்யும் படம்!

 

Comments (0)
Add Comment