a K. Vijay Anandh review
எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல் , விஜய் – அஜித், சிவகார்த்திகேயன் – விஜய்சேதுபதி, கவின் -ரியோராஜ் இப்படி தமிழ் சினிமாவில் ஒரு ஜோடி போட்டு ரசிகர்களை மகிழ்வித்துவருகிறார்கள் கதா நாயகர்கள். அந்த வரிசையில், சமீபத்திய ஸ்டாரான பிரதீப் ரங்க நாதன்க்கு யார்றா ஜோடி – அதாவது போட்டியில் என்று எண்ணிக்கொண்டிருந்தபோதே பன் பட்டர் ஜாமோடு, நாந்தான் என்று வந்திருக்கிறார் ராஜு ஜெயமோகன்.
இளைஞர்களை திரையரங்குக்கு இழுக்கும் சரியான ஒரு கண்டெண்டை பிடித்து மிகவும் சுவராஸ்யமாக இயக்கியிருக்கிறார் ராகவ் மிர்தத்.
முக்கோண காதல் கதை கேள்விப்பட்டிருப்போம் பன் பட்டர் ஜாம் ஒரு ஐங்கோண காதல். மைக்கேல் தங்கதுரை – பாவ்ய த்ரிகா, வி ஜெ பப்பு – ஆதியா பிரசாத் ஆகிய இரண்டு ஜோடிகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட ஐந்தாவது கோணமாக ராஜு ஜெயமோகன். முதலாவது ஜோடியில் பாவ்யா ராஜுவை காதலிப்பது போல ஆரம்பித்து மைக்கேலிடம் காதலில் விழுகிறார். இரண்டாவது, இறுதிக்காட்சி வரை எதிர்பார்க்காத ஒன்றாக, ஆதியா பிரசாத், ராஜுவுடன் முறைப்படி இணைகிறார் கல்யாணத்துடன்.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று சொல்வார்களே அதைப்போல, விடிய விடிய பார்ன் பார்க்கும் ராஜுவும் – பள்ளிக்கூடம் படிக்கும் போதே பாய் பிரண்டுடன் சுற்றும் ஆதியாவும், சரன்யா பொன்வண்ணனுக்கும் , தேவதர்ஷினிக்கும் நல்ல பிள்ளைகளாக தெரிகிறார்கள். ஒருவரையொருவர் நம்பி, அந்த நல்ல பிள்ளைக்கு நம்ம பிள்ளையை கொடுத்துவிட்டால் வாழ்க்கை நல்லாருக்குமே என்று இரு அப்பாவி அம்மாக்களின் திட்டமிடலில் ஆரம்பிக்கின்றது இந்த பன் பட்டர் ஜாம், அப்புறம் எங்கெங்கோ பயணித்து அம்மாக்களின் ஆசைப்படியே படமும் முடிகிறது.
என்னதான் ஜோடி மாறினாலும், பாவ்யா மற்றும் ஆதியா கதாபாத்திரங்கள் மிகவும் கண்ணியமாக கையாளப்பட்டிருக்கின்றன. தான் விரும்புபவனை விட , தன்னை விரும்புவனை தேர்ந்தெடுக்கும் பாவ்யாவும், இறுதி நொடி வரை போராடி ப்ரேக் அப் ஆன நிலையில், அனைத்தும் தெரிந்து தன்னை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் ராஜுவிடம் விழும் ஆதியாவும் ரசிகர்களின் அன்பையும் மரியாதையையும் பெறுவார்கள்.
நிண்ட நாட்களாயிற்று, இப்படி ஒரு நட்பு படலத்தைபார்த்து என்று சொன்னால் அது மிகையல்ல. ராஜு மற்றும் மைக்கேலின் நட்பு மிகவும் அழகாக கையாளப்பட்டிருக்கிறது. மைக்கேலும் – ராஜுவும் பள்ளித்தோழர்களாக இருந்து காலேஜ் பைனல் வரும் வரையிலான தோற்ற வேறுபாட்டிற்கு , வெறும் முடியை மட்டும் ஷேவ் பண்ணியிருக்காமல் , உடல்மொழிகள் காட்டுவதற்கு கடினமாக உழைத்திருக்கிறார்கள். ராஜுவிற்காக, பாவ்யாவை விட்டுக்கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் மைக்கேல், மைக்கேலுக்காக சீனியர்களை வெளுக்கும் ராஜு என்று மாஸ் படத்திற்கே உரிய சரியான பார்முலாக்கள் இந்தப்படத்தில் கையாளப்பட்டிருக்கின்றன.
தளபதி விஜய் , போன் தான் பண்ணினார் ? கெஸ்ட் ரோலுமா ? என்று சந்தேகப்படும் அளவிற்கு விக்ராந்தின் எண்ட்ரி. ஒரு சூப்பர் சீனியராக என்ன செய்யவேண்டுமோ அதனை சிறப்பாக செய்துவிடுகிறார் விக்ராந்த்.
உனக்கு 18 வயசு ஆகிடுச்சு, இனி சிகரெட் குடிக்கிறது குடிக்காமல் இருக்கிறது உன் விருப்பம் என்று சார்லி சொல்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே ராஜுவும் மைக்கேல் உள்ளிட்ட நண்பர்களும் சிகரெட் ஊதித்தள்ளும் காட்சிகள் கொஞ்சம் நெருடல்.
இவரைக்காட்டும் போதெல்லாம் சிகரெட்டுடன் வருகிறார் சார்லி, அவருக்கு என்ன எழுதுவது..? சரி ஊதியாவது தள்ளட்டும் என்று நினைத்துவிட்டாரோ? என்னவோ ? இயக்குநர். கடைசியில் இரண்டு வரி பேசி அத்துடன் சிகரெட்டையும் விட்டுவிடுகிறார் சார்லி. வழக்கத்திற்கு மாறான ஒரு சார்லியை பார்த்து ரசிக்கலாம்.
ஸ்கூல் படிக்கின்ற பிள்ளைகள், நாளை மருத்துவராகவோ விவசாயியாகவோ வரவேண்டும் என்று கவலைப்படும் அம்மாக்கள் ஒரு வகை, இவனுக்கு சரியான பெண்ணை, அவளுக்கு சரியான மாப்பிள்ளையை கல்யாணம் செய்து வைக்கவேண்டும் என்று கவலைப்படும் அம்மாக்கள் புதுவகை. ஒரு வகையில், இதில் நியாயம் இருக்கிறது என்றே சொல்லவேண்டும் !
பன் பட்டர் ஜாம், தனிச்சுவை !