IPL

mysixer rating 3.5/5

a K Vijay Anandh review

தான் செய்த மொள்ளமாரித்தனத்தை உலகம் அறிந்து விடக்கூடாது என்பதற்காக, தனது விசுவாசமான அடிமையாக இருக்கும் ஒரு காவல்துறை அதிகாரியை பயன்படுத்தி, ஒரு அப்பாவியை கொன்று அந்தப் பழியை இன்னொரு அப்பாவி மீது போட துடிக்கும் ஒரு முதலமைச்சர். அப்பாவிகளின் ஒரே ஆபத்து வந்தவனாக இருக்கும் இந்திய தண்டனை சட்டங்களின் துணையோடும், நேர்மையான வக்கீல் மற்றும் சாட்சியளிக்க தயாராகும் மனிதநேயமிக்க சக மனிதர்கள் ஆகியோர் துணையோடு அந்த அப்பாவி மீள்கிறாரா..? என்பதை, மிகவும் விறுவிறுப்பான அதேசமயம் பதை பதைக்கும் காட்சிகளுடன் சொல்லி அசத்தி இருக்கிறார் இயக்குனர் கருணாநிதி.

கிஷோருக்கு இதெல்லாம் லட்டு போன்ற கதாபாத்திரம். மிகவும் அசால்டாக நடித்து அசத்தி விடுகிறார். அபிராமி கேட்கவே வேண்டாம், விருமாண்டியில் கமல்ஹாசன் இடம் இருந்து பெற்றதை இதில் கிஷோருக்கு கொடுத்திருக்கிறாரோ என்று தோன்றியது, கிஷோர் – அபிராமி சம்பந்தப்பட்ட காட்சிகள் அழகு.

கிஷோரின் தங்கையாக, கிஷோர் – அபிராமி ஆகியோரின் மகளாக வருபவர்கள் டிடிஎஃப் வாசனிடம் டிவி கேமரா மூலமாக மாட்டிக் கொண்டு முழிக்கும் காட்சிகள் துறுதுறு ரகம். என்னடா இப்படி எல்லாம் செய்கிறாரே வாசன் என்று நினைத்து மறந்த நிலையில் கிளைமாக்ஸ் இல் அந்த விஷயத்தை முக்கிய துருப்புச் சீட்டாக பயன்படுத்தி படத்தை முடித்திருக்கும் விதம் அருமை.

வழக்கம்போல, நாயகன் முகத்தை காட்டாமல் கால் பைக் ஆக்சிலேட்டர் ஸ்பீடு என்று காட்டி சிக்னலில் அவரை நிற்க வைத்து, அவருக்கு அறிவுரை கூற சைக்கிளில் வருகிறார் கதாநாயகன்,  டிடிஎஃப் வாசனின் அறிமுகக் காட்சி அருமை.

அதே நேரம் டிடிஎஃப் வாசனின் , தனித்திறமையான பைக் ரேஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளை எங்கு பயன்படுத்த வேண்டுமோ அங்கு பயன்படுத்தி அவரது ரசிகர்களை திருப்தி படுத்தவும் செய்கிறார் இயக்குனர். சிறப்பான பைக் சேஸிங் ஆக்சன் காட்சிகளை அமைத்திருக்கிறார் திலீப் சுப்ராயன்.

விஜய் படங்களில் கில்லி ஒரு அற்புதமான ஆக்சன் மசாலா. அந்தப் படத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெருக்களில் விஜய் ஓடி வருவதாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும், டிடிஎஃப் வாசனிற்கும் அதே போன்று காட்சிகள் இந்த படத்தில் அமைந்திருப்பது அவரது அதிர்ஷ்டம். ஹிப் ஹாப் ஆதி மற்றும் விஜய் கலந்த கலவையாக தோற்றமளிக்கும் டிடிஎஃப் வாசன் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்விக்கட்டும்.

லாக்கப் கொலை செய்யும் காவல்துறை அதிகாரியாக போஸ் வெங்கட், அவரைக் காப்பாற்ற துடிக்கும் சக காவல்துறை அதிகாரியாக ஹரிஷ் பேரடி என்று பயமுறுத்தி இருக்கிறார்கள்.

அதிலும் நேர்மையானவர்கள் இருப்பார்கள் என்பதற்கு அடையாளமாக காக்கிச்சட்டை போட்ட அதிகாரியாக திலீபன் சிறப்பான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஆட்சியை பின்னால் இருந்து இயக்கும் பெண்ணிடம் செருப்படி வாங்கும் முதலமைச்சராக ஆடுகளம் நரேன், பல நிஜ ஃப்ளாஷ் பேக்குகளுக்கு வழி வகுத்து விடுகிறார். தமிழகத்தில், அந்த, அரசியல் அவலம்  இன்னும் முற்றிலுமாக முடிந்துவிடவில்லை என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

இந்த படத்தைப் பார்த்து, லாக்கப் படுகொலைகளால் அநியாயமாக தங்களது இன்னுயிரை நீத்த  பென்னிக்ஸ், அஜித் குமார் உள்ளிட்ட பலரது ஆன்மா, குணசேகரனை காப்பாற்றியது போல தங்களை யாரும் காப்பாற்றவில்லையே என்று கண்ணீர் விடும் என்றால் மிகையல்ல.

யார் கண்டார்கள், அப்பாவிகளுக்கு லாக்கப் மரணத்தை பரிசளிக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் அதே பரிசுகளை இயற்கை வழங்குவதற்கும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது!

IPL, தவிர்க்க முடியாத தமிழ் சினிமா!

 

Comments (0)
Add Comment