a K Vijay Anandh review
இரண்டே இரண்டு சுடிதார்கள், ஒரே ஒரு புல்லட், கீர்த்தி சுரேஷ் ரிவால்வர் ரீட்டாவாக அட்டகாசமான ஒரு பொழுதுபோக்கை வழங்கி இருக்கிறார்.
அப்பாவின் தற்கொலையை அது என்ன ஏது? என்று கூட தெரியாத வயதில் பார்த்து நிற்கும் ஒரு குழந்தை, பல வருடங்களுக்குப் பிறகு அதற்கு காரணமானவனை அந்த குழந்தையே எதிர்பார்க்காத நிலையில் பழிவாங்குவது அற்புதமான ஒரு வரி கதை.
அதனை ஒரு நாளுக்கும் குறைவான நேரத்திற்குள் நடக்கும் சம்பவங்களை தொகுத்து விறுவிறுப்பான திரைக்கதை ஆக்கி அற்புதமான பொழுதுபோக்கினை வழங்கியிருக்கிறார் இயக்குனர் ஜேகே சந்துரு, ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்திற்கு இவரிடம் கதை கேட்கலாம் எனும் அளவிற்கு ஒரு அற்புதமான படமாக ரிவால்வர் ரீட்டா வை கொடுத்திருக்கிறார்.
சூப்பர் சுப்பராயன், சுனில், அஜய் கோஷ், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சென்றாயன், கல்யாண மாஸ்டர், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் கதிரவன் என்று ஒட்டுமொத்த வில்லன்களையும் தனது புத்தியாலும் ஒரே ஒரு புல்லட்டாலும் காலி செய்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்திய அளவில், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் கதைக்களங்களில் நடிப்பதற்கு மிகவும் தகுதியான நடிகைகளில் முதல் ஐந்து நடிகையருள் ஒருவராக, கீர்த்தி சுரேஷ் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
கதைக்களம் பாண்டிச்சேரியா, அப்படியானால் கூப்பிடுங்கள் ராதிகா சரத்குமாரை என்கிற அளவிற்கு நானும் ரவுடிதான் எனும் படத்தில் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடித்து வித்தியாசமான ஒரு பொழுதுபோக்கை வழங்கிய ராதிகா சரத்குமார், கீர்த்தி சுரேஷ் அம்மாவாக இந்த படத்தில் இன்னும் அதிகமான பொழுதுபோக்கை வழங்கியிருக்கிறார், சீனியர் சீனியர் தான்!
இரண்டாவது காட்சியிலேயே முக்கிய வில்லன் சூப்பர் சுப்புராயன் இறந்து விடுகிறார், அவர் என்ன ஆனார் என்ற தேடுதல் வேட்டையிலேயே மகன் சுனில், தெலுங்கு வில்லன் அஜய் கோஷ் ஒரு பக்கம் சூப்பர் சுப்பராயனின் தலையை எதிர்பார்த்து காத்திருக்க, அதனை கொண்டு வருகிறேன் என்று சொன்ன கல்யாணம் மாஸ்டரும் பொட்டென்று போய்விட மொத்த வில்லத்தனமும் கதிரவனின் தோள் மீது விழுந்து விடுகிறது, அதனை கிளைமாக்ஸ் காட்சி வரை அட்டகாசமாக சுமந்து ஒரு வலிமையான துணை கதாபாத்திர நடிகராக விஸ்வரூபம் கிடைத்திருக்கிறார் டிஎன்பி கதிரவன்.
இவ்வளவு பரபரப்பான திரைக்கதையை அத்தனை வில்லன்களையும் ஒரே நாளில் வேட்டையாடும் திரை கதையை முழுக்க முழுக்க நகைச்சுவை பிளேவர் தெளித்து ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கும் விதம் பாராட்டுத்தக்கது.
ரிவால்வர் ரீட்டா, நகைச்சுவை ஆக்சன் கலந்த அற்புத பொழுதுபோக்கு!