a K Vijay Anandh review
இரண்டு குழந்தைகளின் பார்வையில் மெல்லிசை படத்தை சொல்வதற்கு முடிவு செய்த இயக்குனர். யாழினியாக நடித்த தனன்யா வர்ஷினி, தீபக்காக நடித்த ஜஸ்வந்த் மணிகண்டன் ஆகிய இருவரும் வளர்ந்து விடலை பருவத்தை அடையும் வரை கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்து அவர்களே நடிக்க வைத்து படத்தின் நம்பகத்தன்மை சிதைந்து விடாமல் கதை சொல்லி இருக்கிறார், இந்த ஒரு வித்தியாசமான முயற்சிக்காகவே திரவ் – க்கு பாராட்டுக்கள்.
மறைந்த இயக்குனர் விசுவைப் போல நடுத்தர வர்க்க குடும்பங்களில் நடக்கும் கதைகளை சொல்வதற்கு இன்றைய தேதியில், எண்ணிக்கை மிகவும் குறைவு என்கிற நிலையில் இயக்குனர் திரவ் தொடர்ந்து இது போன்ற கதைகளை சொல்லி வருவதும் குறிப்பிடத்தக்கது.
பிடி டீச்சர் பாடகர் ஆக கூடாதா..? பி டி டீச்சர் ராஜன் சாருக்கு ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு மெல்லிசை டைட்டிலை வின் பண்ண வேண்டும் என்கிற ஆசை. அன்பான மனைவி தான் என்றாலும், இன் செக்யூரிட்டி வாட்ட கணவனின் கனவில் உடன்பாடு இல்லாத சுபத்திரா ராபர்ட், அட இவரும் அதே பள்ளியில் கணித ஆசிரியை. இருவரது கதாபாத்திரங்களும், அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. கிஷோர் குமார், என்னடா ஆக்சன் படங்களில் அதிரடி காட்டுபவர் இப்படி ஒரு அமைதியான குடும்பத் தலைவனாக நடித்திருக்கிறார் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு, அதையும் தாண்டி மெல்லிசை ரியாலிட்டி ஷோவில் பங்கு கொண்டு பாடும் காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் உடல் மொழிகள் என்று அசத்தி இருக்கிறார்.
இவர்களது குழந்தைகளாக வரும் யாழினி மற்றும் தீபக் ஆகியோர் மிகவும் இயல்பாக நடித்து நமது கண் முன்னே ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் சம்பவங்கள் காட்டப்படுவது போன்ற ஒரு உணர்வை தருகின்றார்கள். பள்ளியில் படிக்கும் பொழுது செயலி ஒன்றை கண்டுபிடித்து ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்க செல்லும் தீபக் இன்றைய தலைமுறை GenZ க்கு உதாரண புருஷராகிறார். அப்பா செல்லமாக குட்டி தேவதையாக யாழினியும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
எதிர்பாராமல் நடக்கும் ஒரு ஆக்சிடென்ட், அந்த குடும்பத்தை புரட்டி போட, அதிலிருந்து மீண்டு அந்த இரண்டு குழந்தைகளும் எப்படி சாதிக்கிறார்கள் என்பதை மிகவும் எதார்த்தமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் திரவ்.
திரவ எழுதி சங்கர் ரங்கராஜன் இசையில், விஜய் பிரகாஷ் பாடியிருக்கும். முதல் மொட்டு விழிக்கும் போது முட்களை கண்கள் பார்க்காது… என்கிற பாடல் ஆட்டோகிராப் படத்தில் வரும் ஒவ்வொரு பூக்களுமே என்கிற பாடலை நினைவுபடுத்துகிறது அதைப்போலவே இந்த பாடலும் , கேட்பவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கிறது.
மெல்லிசை, நடுத்தரவர்க்கத்தின் மேடை !