தொலைக்காட்சியின் டி ஆர் பி ஐ கூட்டுவதற்காக வந்த நாயகி மோனிகா சின்னகொட்லாவை சதீஷ் காதலிக்க , அவர்களது திருமணம் கைகூடும் நிலையில், சதீஷ் ஏற்கனவே நடித்த ஒரு பலான காட்சி லீக் ஆக , திட்டமிட்டபடி திருமணம் நடக்கிறதா ? இல்லையா ? என்பதே நகைச்சுவை கலந்த முஸ்தபா முஸ்தபா படத்தின் திரைக்கதை.
காமெடியை முன்னிறுத்தி பயணித்துள்ள சதீஷ், கண்டதும் காதல், காதலை காப்பாற்ற பொய், அந்த பொய்யினால் ஏற்பட்ட பிரிவு, பிரிவை சரி செய்யும் முயற்சி, அதையடுத்து திருமண சமயத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனை, அதை சரி செய்ய எதிர்கொள்ளும் போராட்டங்கள், என்று அனைத்து ஏரியாவிலும் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
சதீஷின் நண்பராக, படத்தின் மற்றொரு ஹீரோவாக நடித்திருக்கும் சுரேஷ் ரவி, தனது வேலையை குறையின்றி செய்திருக்கிறார். படம் முழுவதும் வரும் சுரேஷ் ரவி, சதிஷுக்கு இணையான வேடம் மட்டும் இன்றி, அவருக்கு இணையாக காமெடி காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.
நாயகர்களின் நண்பராக நடித்திருக்கும் கருணாகரன், வழக்கம் போல் தனது டைமிங் வசனங்கள் மூலம் சிரிக்க வைத்திருக்கிறார் , படத்தின் முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்க்கிறார்.
சுரேஷ் ரவிக்கு ஜோடியாக மானசா செளத்ரி நடித்திருக்கிறார்.
சாம்ஸ், லிவிங்ஸ்டன், உமா, புகழ் என நடித்திருப்பவர்கள் அனைவருமே நிறைவாக நடித்திருக்கிறார்கள், சிரிக்க வைக்கவும் உதவியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளையும் அழகாகவும், பிரகாசமாகவும் காண்பித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் கமர்ஷியல் அம்சங்களோடு கேட்கும் ரகமாக இருக்கிறது. குறிப்பாக அந்த பார்ட்டி இசை ஆட்டம் போட வைக்கிறது.
கிளைமாக்சில் கொடுத்திருக்கும் ஒரு டிவிஸ்ட் இயக்குனர் பிரவீன் சரவணனை வியந்து பார்க்க வைத்துவிடுகிறது.