சாருகேசி

Rating 3/5

a K Vijay Anandh review

பிரபல கர்நாடக இசை மேதை சாருகேசி என்கிற மகேந்திரா, பாக்கியம் என்கிற அவரது மனைவியாக சுகாசினி, விசுவாசமான வேலைக்காரராக தலைவாசல் விஜய் ஆகியோருக்கும் தந்தையின் பாசத்தை புரிந்து கொள்ள முடியாமல் வீட்டின் நிம்மதியை கெடுத்துக் கொண்டிருக்கும் இந்த கால இளைஞனாக ராஜ் ஐயப்பனுக்கும் இடையில் நடைபெறும் பாசப் போராட்டமே சாருகேசி என்கிற இந்த திரைப்படம்.

மூத்த நடிகர்கள் மற்றும் இந்த தலைமுறை நடிகர்கள் ஆகியவரை வைத்து ஒரு குடும்ப திரில்லர் படமாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.

இசையும் மகிழ்ச்சியும் நிரம்பி வழியும் இவர்களது வாழ்க்கையில், ராஜ் ஐயப்பன் இவர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு அழைத்து வரும் ரம்யா பாண்டியன் மூலமாக பூகம்பம் வெடிக்கிறது.

நாரதர் கலகம், நன்மையில் முடியும் என்பது பழமொழி அதுக்கேற்றவாறு ரம்யா பாண்டியன் ஆரம்பித்து வைக்கும் கலகத்தால், ராஜ் ஐயப்பனுக்கும் தந்தையை பற்றிய உண்மைகள் புரிந்து குடும்பம் சுபிட்சம் அடைகிறது.

துரதிஷ்டவசமாக, அந்த மகிழ்ச்சி நீட்டிக்காமல் போய்விடுகிறது.

இன்னொரு பக்கம் சேனல் ஹெட்டாக சமுத்திரக்கனி மற்றும் சேனலில் பணியாற்றுபவராக மது வண்டி ஆகியோருக்கிடையிலான உரையாடலாக சாருகேசியின் வாழ்க்கை வரலாறு திரைக்கதையாக விரிகிறது.

ஒரு ஆச்சரியமான கதாபாத்திரமாக சத்யராஜ் இந்த படத்தில் தெய்வீக அனுபவத்தை கொடுக்கும் காட்சிகள் அருமை.

இந்த படம், Blast போன்ற படங்களைப் போல வெற்றி பெறுமா என்று தெரியாது. ஆனால் ஒரு குறு நாவலை படித்தது போன்ற திருப்தியை அளிக்கின்றது.

ஒய்ஜி மகேந்திரா,  சுகாசினி மற்றும் தலைவாசல் விஜய் இவர்களை எல்லாம் கேட்கவா வேண்டும் அட்டகாசமாக நடித்திருக்கிறார்கள் என்றால், குறை சொல்ல முடியாத அளவிற்கு விசு படங்களில் வரும் பெரியவர்களை புரிந்து கொள்ளாத இளைய தலை முறைகளாக நடித்திருக்கும் ராஜ் ஐயப்பன் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.

வழக்கம்போல சுரேஷ் கிருஷ்ணா மற்றும் தேவா ஆகியோரது காம்பினேஷனில் இந்த படமும், நல்ல இசை விருந்து கொடுத்திருக்கிறது.

சுகாசினி இருப்பதனால் இந்த படம் சிந்து பைரவியை ஞாபகப்படுத்தவும் தவறவில்லை.

தனிப்பட்ட முறையில் என்னுடைய ஆலோசனை என்னவென்றால், நான்கு ஐந்து முதல் பத்து கதாபாத்திரங்கள் வரை வைத்து எழுதப்படும் இதுபோன்ற குறு நாவல் போன்ற திரைப்படங்களை மூத்த இயக்குனர்கள், வணிக எதிர்பார்ப்புகள் தாண்டி குறிப்பிட்ட இடைவேளையில் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதன் மூலம், GenZ தலைமுறை மறந்து போன நமது குடும்ப அமைப்புகள் மற்றும் கலாச்சாரங்கள் ஆகியவை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தப்பட்டு கொண்டிருக்கும். அது இந்த சமூகத்திற்கும் மற்ற படைப்புகள் ஒரு நல்ல பாடமாக அமையும்.

 

Comments (0)
Add Comment