பனி விழும் இரவு

Rating 3/5

a K Vijay Anandh review

நல்ல கதை, திறமையான நடிகர்கள், திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் அத்துடன் திட்டமிட்ட உழைப்பு ஆகியவற்றை கொட்டினால், குறைந்த முதலீட்டில்  சிறந்த படங்களை உருவாக்க முடியும் என்று திரைத்துறையில் தனது 30 வருட அனுபவத்தை புதிதாக திரைப்படம் எடுப்பவர்களுடன் பகிர்ந்து கொண்டு பயிற்சியும் அளித்துவரும் SAC ராம்கியின் கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக இந்தப்படம் வெளியாகியிருக்கிறது.

ஹீரோ , ஹீரோயின் உள்ளிட்ட நான்கைந்து நடிகர்கள், ஒரே ஒரு லொகேஷன் இவற்றுடன் விறுவிறுப்பான சைக்கோ திரில்லராக பனி விழும் இரவு படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார், செ ரா ராஜேஷ்.

தனக்கு மனைவியாக போகிற எனாக்‌ஷி கங்குலியைக் காணோம் என்று , ஹீரோ அருண் கார்த்திக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த நிமிடம் முதலே பரபரப்பு தொற்றிகொள்கிறது. முதலில் அசட்டைடாக இருக்கும் ஏட்டு கருப்பு நம்பியார், இன்ஸ்பெக்டர்  சேரன்ராஜின் உத்தரவின் பேரில் விசாரணையை தொடங்க, ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான விருந்து பரிமாறப்படுகிறது.

பால் கார உமரை விசாரிக்கும் போது, அவர் சொல்லும் செய்திகளின் அடிப்படையில் புத்திசாலி ரசிகர்கள் ஊகித்துக்கொள்ளட்டும் என்று இயக்குனர் செ ரா ராஜேஷ் சில  விஷயங்களை தைரியமாக காட்சிப்படுத்துகிறார். ஊகிக்க முடிந்தவர்கள் நிச்சயம் திரைப்படங்களை மிகவும் ரசித்து பார்ப்பவர்களாக இருக்க கூடும்.

என்னடா பெரிய AI, என்னதான் இருந்தாலும் அது மனித மூளைக்கு சற்று கீழே தான் என்கிற அளவிற்கு கதையில் டிவிஸ்ட் வைத்திருக்கிறார்கள். அட்டகாசமான கிளைமாக்ஸ். மன நல மருத்துவராக வரும் கஜராஜ் சிறப்பாக, வழக்கம்போல!

சில காட்சிகளிலேயே வந்தாலும் ஹீரோயின் எனாக்‌ஷி கங்குலி வசீகரித்திருக்கிறார். அருண் கார்த்திக் சிறப்பாக நடித்திருக்கிறார்.

சதா முருகனின் இசை, படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது.  ஜெயக்குமார் தங்கவேலுவின் ஒளிப்பதிவில் கொடைக்கானல் குளிர் நமக்கும் ஒட்டிக்கொள்வது போன்ற பிரமை!

இன்னும் கொஞ்சம் பட ஆக்கத்தில், நடிகர்களின் பங்களிப்பில் மெனக்கெட்டிருந்தால் பனி விழும் இரவு இன்னும் சிறப்பான படமாக ஆகியிருக்கும்!

பனி விழும் இரவு, வித்தியாசமான கிளைமாக்ஸ்!

 

 

Comments (0)
Add Comment