ஹாட்ஸ்பாட்

mysixer rating 5/5

148

a K.Vijay Anandh review

ஒரு திரைப்பட தயாரிப்பாளரிடம் ஒரு கதை சொல்லி அதனை படம் எடுப்பதற்கு அல்லது பல கதைகள் சொல்லி அதிலிருந்து ஒரு கதையை படம் எடுப்பதற்குள் இயக்குனராக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு பெரும் போராட்டமாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் இயக்குனர் வாய்ப்பு தேடி தயாரிப்பாளரிடம் கதை சொல்ல போகும் முகமது ஷெரிஃப் நான்கு கதைகளை சொல்கிறார் நான்கு கதைகளும் தயாரிப்பாளரின் ஹாட்ஸ்பாட் இல் தொட்டு விடுகிறது நான்குமே திரையில் படமாக விரிந்தும் விடுகிறது.

அவுட் ஆப் தி பாக்ஸ் திங்கிங் என்று சொல்வார்கள் அது இந்த படத்திற்கு 100% பொருந்தும். உண்மையில் இயக்குனர் வாய்ப்பு தேடும் கதாபாத்திரம் தான் படத்தின் ஹீரோ, அட ஹீரோயின் எங்கப்பா என்று தேடும் பொழுது ஒரே ஒரு போனில் ஹீரோயின் உடைய குரலை மட்டும் ஒலிக்கச் செய்திருக்கிறார்கள்.

உட்கார்ந்த இடத்திலிருந்து அசால்டாக நான்கு கதை சொல்கிறார் இயக்குனர் திக்கித்து போய்எழுந்து நடந்து தன்னை ஆசுவாசப்படுத்தி கொள்கிறார் தயாரிப்பாளர்.

Happy Married Life

ஆதித்ய பாஸ்கர் – கௌரி கிஷன், 96 படத்திற்குப் பிறகு ஒரு சிறந்த திரைக்கதையில் இணைந்திருக்கிறார்கள். இப்படி எல்லாம் நடக்குமா என்று யோசிக்க வைக்கும் ஒரு விபரீத கனவை நனவாக்க முயற்சி செய்கிறார் ஆதித்ய பாஸ்கர். அதற்கு சமூகமும் தயாரா என்பதை படம் பார்ப்பவர்கள் பதில் அளிக்க வேண்டும்.

Golden Rules

அம்மு அபிராமி – சாண்டி உடனான தனது காதலை தனது பெற்றோரிடம் வெளிப்படுத்தும் விதம் அதிரடி என்றால் அவர்கள் காதல் முடியும் புள்ளி, அவர்களை உயிரை மாய்த்துக் கொள்ளவும் வைத்து விடுகிறது. இவர்கள் சந்திக்கும் பிரச்சனை, காதல் திருமணத்தால் உறவுகளால் தள்ளி வைக்கப்படும் குடும்பத்து பிள்ளைகள் சந்திக்கும் பிரச்சனை மட்டுமில்லை. வாழ்வாதார ஓட்டத்தில் உறவுகளிடம் இருந்து தள்ளி இருக்கும் ஒவ்வொரு குடும்பத்துப் பிள்ளைகளும் சந்திக்கும் பிரச்சினை. அற்புதமாக கையாண்டு இருக்கிறார் விக்னேஷ் கார்த்திக்.

தக்காளி சட்னி

லவ் வேறு லஸ்ட் வேறு என்று நியாயம் கற்பித்துக் கொண்டிருக்கும் சுபாஷ் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆண் விபச்சாரி ஆகி காதலி ஜனனியிடம் மாட்டிக் கொள்ளும் தருணம் சுவாரசியம் என்றால் அவரது அம்மா கதாபாத்திரத்தையும் பிரதானப்படுத்தி துளி கூட கண்ணியம் குறைபாடு ஏற்பட்டு விடாமல் சொல்லப்பட்ட விதம் அருமை.

Fame Game

ஆம் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் அனுமதிக்கப்படாத படங்களில் இடம் பெற்ற பாடல்களை ரியாலிட்டி ஷோ எனும் பெயரில் குழந்தைகளை பாட வைப்பதும் குற்றம் தானே. அப்படிப்பட்ட படங்களில் இடம்பெறும் முக்கல் முனகல் பாடல்களை அதே உணர்வுடன் குழந்தைகள் மூலமாக பாடக் கேட்பது நிச்சயம் குழந்தைகளுக்குச் செய்யும் துரோகம் என்பதை உணராதவர்களாகவே பெற்றோர்களும் அந்த நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள். அப்படி குழந்தைகளை தடம் மாறச்செய்யும் ரியாலிட்டி ஷோவை கலையரசன் – சோபியா மற்றும் அவரது குழந்தைகளை வைத்து சொல்லிய விதம் அருமை. குழந்தைகளை விளையாட விடுங்கள், உண்மையில் குழந்தைகளை விளையாட அனுமதிக்காத பெற்றோர்களின்  பொறுப்பற்ற செயலும் குழந்தைகள் தடம் மாறுவதற்கான காரணியாக அமைந்து விடுகிறது.

ஹாட்ஸ்பாட், மிகச்சிறந்த முயற்சி, அட்டகாசமான பொழுதுபோக்கு !