இந்தியன் இயக்குநரின் அமெரிக்க மாப்பிள்ளை

147

– K.Vijay Anandh

பொதுவாக, ஒவ்வொரு மனிதனின் விதியும் அவனது தலையில் எழுதப்பட்டிருக்கிறது என்பார்கள். அதன்படியே அவரவர் வாழ்க்கை அமையும் என்பது இயற்கையின் நியதி. ஆனால், இதற்கு படைப்பாளிகள் விதிவிலக்கு எனலாம். அவர்களது எழுத்துக்களால் உருவாகும் படைப்புகள் தனி நபர்கள் முதல் ஒட்டுமொத்த சமூகத்தின் தலையெழுத்தையே மாற்றி அமைத்து விடுகிறது என்றால் மிகை அல்ல.

சமூகப் பொறுப்புடன் கூடிய முதல்வன்,  இந்தியன், அந்நியன் போன்ற படங்களின் மூலம் சமூகத்தில் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி பல நல்ல மாற்றங்களுக்கு வித்திட்டவர் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் என்றால் அது மிகையல்ல.  சில நேரங்களில், நம்முடைய வாழ்க்கையில் நடக்கப் போகும் சம்பவங்களை கூட கூட நாமே நம்மை அறியாமல் எழுதி வைத்து விடுவதும் உண்டு.

அந்த வகையில், 30 வருடங்களுக்கு முன்பாக,  தமிழகத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய் அமெரிக்காவிற்கு பயணித்து அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அமெரிக்க குடிமகன் பிரசாந்தை காதலித்து கரம் பிடிப்பது போல காகிதத்தில் ஷங்கர் தன் கைப்பட எழுதி, திரையில் அதனை ஜீன்ஸ் என்கிற படமாக பிரமாண்டமாக இவரே காட்சிப்படுத்திய விஷயம் இன்று இவரது வாழ்க்கையிலும் அரங்கேறி இருக்கிறது.

இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து ஐடி துறையில் படிப்புகள் முடித்து ஸ்பேஸ் எனும் ஐடி நிறுவனமும் நடத்தி வரும் தருண் கார்த்திகேயனை காதலித்து கரம் பிடித்திருக்கிறார்.

சில நேரங்களில் நமது வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளையும் நாமே எழுதிக் கொள்ளும் வாய்ப்பையும் இறைவன் வழங்கிக் கொண்டுதான் இருக்கிறான்.

நல்லவற்றையே எழுதுவோம்,  எழுதிக்கொண்டே இருப்போம், நல்லதே நடக்கும் !!

இந்த வாரம் நடைபெற்ற ஐஸ்வர்யா – தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அகில இந்திய அளவில் நடிகர்களும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அத்தனை பிரபல கலைஞர்களும் கலந்து கொண்டு பிரம்மாண்ட இயக்குனர் வீட்டு விழாவை பிரம்மாண்ட விழாவாக மாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ஷங்கரின் உதவியாளர்கள் ஹரி முதல் அட்லி வரையிலான இயக்குனர்கள் மற்றும் மேலாளர் தங்கதுரை , நிர்வாக தயாரிப்பாளர் விமல், மக்கள் தொடர்பாளர்கள் சிவா – சதீஷ் உள்ளிட்ட அணியினர் தங்களது வீட்டு விழா போன்று விருந்தினர்களை வரவேற்று உபசரித்தனர்.