a K.Vijay Anandh review
எம் எஸ் பாஸ்கர் காணாமல் போகிறார், அவரது மனைவி ஸ்ரீரஞ்சனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார், அதிலிருந்து அவரை தேடுவது என்கிற ஒற்றை இலக்கில் திரைக்கதை பயணிக்கின்றது. நடுவே நிகிதா கொலை செய்யப்படுகிறார், ஏற்கனவே எம் எஸ் பாஸ்கர் என்ன ஆனார் ? என்கிற தேடல் ஒருபுறம்… நிகிதாவை கொலை செய்தது யார் ? என்கிற புலனாய்வு மறுபுறம் என்று விறுவிறுப்பாக பயணித்து, துடிப்பான காவல்துறை அதிகாரியாக வரும் தமன்குமாரின் விசாரணை ஒரு குறிப்பிட்ட நொடியில் நிறைவு பெறுவதே ஒரு நொடி திரைப்படத்தின் அட்டகாசமான திரைக்கதை.
சேகரன் என்கிற நடுத்தர வர்க்க குடும்ப தலைவராக வழக்கம் போல எம் எஸ் பாஸ்கர் அட்டகாசமாக நடித்திருக்கிறார். அவரது மனைவியாக வரும் ஸ்ரீரஞ்சனியும் அவர் காணாமல் போனதிலிருந்து தவிக்கும் தவிப்பாகட்டும் காவல் நிலையத்திற்கு நடையாய் நடப்பதாகட்டும் ஒரு யதார்த்தமான குடும்ப தலைவியை பிரதிபலித்திருக்கிறார்.
இவர் நடந்தாலே போதும் என்று சூப்பர் ஸ்டாரை சொல்லுவோம். அவருக்குப் பிறகு இவர் நடக்கும் பொழுது ஒரு மதம் கொண்ட யானை நடப்பது போன்ற ஒரு வில்லத்தனம் தெரிகிறது. பெயரிலேயே வேழத்திற்கு பதில் வேல் வைத்திருக்கும் ராமமூர்த்தி தான் அவர். மதுரைத் தமிழில், இவர் பேசும் மண் சார்ந்த வசனங்கள் ரசிகர்களை கட்டிப்போடுகின்றன.
துணை கதாபாத்திரங்களில் இவர்களுக்கு அடுத்து மெச்சதக்க வகையில் நடித்திருப்பது இந்த படத்தின் தயாரிப்பாளர் அழகர். பார்வதியாக வரும் நிகிதாவை பறிகொடுத்து விட்டு இவர் துடிக்கும் துடிப்புகள் மிகவும் யதார்த்தம். இவருக்கு ஜோடியாக அனுபவ நடிகை தீபா சங்கர் அட்டகாசமாக நடித்திருந்தாலும் அவருக்கு இணையாக இவரும் நடித்து பெயர் வாங்கி விடுகிறார்.
பழ கருப்பையா, ஒரு பழுத்த வில்லத்தனம் மிகுந்த அரசியல்வாதியாக, ஊரான் வீட்டு சொத்துக்களை அபகரித்து போடும் அரசியல்வாதியாக வந்து மிரட்டி இருக்கிறார். “சீட்டிங் பண்ணும் சிட்டிங் எம்எல்ஏக்களை சிறைக்கு அனுப்புவதாக இருந்தால் சட்டமன்றமே மத்திய சிறைச்சாலையில் தான் டா நடக்கணும்…” என்று சமகால அரசியல் அவலத்தை அப்பட்டமாக எடுத்துரைத்திருக்கிறார். டெல்லி முதல்வர் கெஜரிவால் முதல் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி வரை சிறைக்குள் இருப்பது இவரது வசனத்திற்கு கட்டியம் கூறுவதாக அமைந்திருக்கிறது.
ஏனைய கதை மாந்தர்களாக வரும் நிகிதா, அருண் கார்த்திக். விநாயக் ஆதித்யா, கஜராஜ் மற்றும் மாணிக்கம் என்கிற கான்ஸ்டபிள் ஆக வரும் கருப்பு நம்பியார் உள்ளிட்ட அத்தனை பேரும் தங்கள் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு கதாநாயகனுக்கும் ஒரு நொடி திருப்புமுனையாக அமையும். இந்த இடம் திறமையாளவனுக்கு இந்த ஒரு நொடி திருப்புமுனையாக அமைந்திருக்கிறது என்றால் மிகையல்ல. பரிதி இளமாறன் எனும் காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் மிடுக்காக நடித்திருக்கிறார் தமன் குமார்.
ஒரு குற்றச்செயலின் பின்னணியில் சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்காக சில நேரங்களில் லாடம் கட்டவும் வேண்டும் பல நேரங்களில் விட்டுப் பிடிக்கவும் வேண்டும் என்கிற இவரது லாஜிக் இறுதியில் ஜெயித்திருக்கிறது.
இறுதிவரை இவருக்கென்று தனியாக ஒரு ட்ராக் அமைத்து கதாநாயகி டூயட் என்று விலகிச் செல்லாத திரைக்கதை தித்திப்பாக இருக்கிறது. ஒரு நொடியின் அடுத்த பாகத்தில் இவரது ஜோடியின் முகத்தை ரசிகர்கள் பார்க்கலாம்.
கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டது போல, தமிழ் சினிமாவில் ரஜினி கமல் அஜித் விஜய் ஆகியோருக்கு அடுத்து யார் மாஸ் ஹீரோக்கள் என்கிற வெற்றிடம் பொழுதே ஏற்படுத்துவங்கிவிட்டது. அதற்கான போட்டியில், அருண் விஜய் முதல் சிவகார்த்திகேயன் வரை பலரும் இருந்தாலும் இன்னும் சில போட்டியாளர்கள் இருப்பது ஆரோக்கியமானது தானே, அதில் ஒரு போட்டியாளராக இடம் பிடிக்க தகுதியான நடிகராக தமன் குமார் இருப்பார் என்பதை இந்த ஒரு நொடி சொல்லி இருக்கிறது. அதை உறுதி செய்வது, அவரது உழைப்பில் இருக்கிறது !
ஜெகன் கவிராஜ் எழுதிய காதல் பாட்டிற்கும் ,சிவசங்கர் மற்றும் உதயா அழகப்பன் எழுதிய பாடல்களுக்குமான இசையும் மற்றும் விறுவிறுப்பான திரை கதையை தொய்வில்லாமல் தாங்கிப் பிடிக்கும் பின்னணி இசையுமாக இந்த இளம் அறிமுக இயக்குனர் சஞ்சய் மாணிக்கம் கவனிக்க வைத்திருக்கிறார். இனி இவரும் பிசியான இசையமைப்பாளர்கள் பட்டியலில் இடம் பிடிப்பார்.
படத்தை தனது கேமரா கண்களில் படம் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுதே இந்த படம் ஜெயிக்கிற படம் என்று புத்திசாலித்தனமாக தயாரிப்பாளராகவும் இணைந்த கே ஜி ரத்தீஷ், இரண்டிலும் ஜெயித்திருக்கிறார். இதற்கு மேல் சிறப்பாக எடிட்டிங் செய்ய முடியாது என்கிற அளவில் எஸ் குரு சூர்யா நிறைவாக செய்திருக்கிறார்.
ஒரு குற்றச் செயலின் பின்னணியில் இருக்கும் நோக்கம் அதாவது Motive ஒருபுறம் – எதிர்பாராத சூழலிலும் குற்றச்செயல் நடந்திருக்கலாம் என்கிற உண்மை மறுபுறம் என்று ஒரு விறுவிறுப்பாக புலனாய்வு திரைக்கதையை அமைத்து ஒரு நொடி மூலம் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டார் பி மணிவர்மன்.