Bright Ray இன் தொழில்நுட்பப்பங்களிப்புடன், “காணி”
மேற்கு தொடர்ச்சி மலைவாழ் பூர்வகுடிமக்களின் வாழ்வியல் பற்றிய ஆவணப்படம்
-K. Vijay Anandh
”காணி, மேற்கு தொடர்ச்சி மலை வாழ் பூர்வகுடி மக்கள்” ஆவணப்பட விமர்சனம்
உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நாம் எல்லோருமே ஏதேனும் ஒரு பழங்குடியினத்தவர்களின் வம்சாவழிகளே! நவீனம் என்கிற பெயரில் பாரம்பரியத்தையும் பழமையையும் மறந்ததோடு அல்லாமல் மரங்களையும் இயற்கை விவசாயங்களையும் அழித்து அதன் மூலம் சுற்றுச் சூழலை மாசுபடுத்தி, உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் துர்பாக்கியவாதிகள் என்று சொன்னால் மிகை ஆகாது.
அந்த வகையில், இந்தியாவின் ஆக்சிஜன் சப்ளையர் மற்றும் பல்லுயிர்பெருக்கத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் 461 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களுள், மேற்கு தொடர்ச்சி மலையின் தெற்கு எல்லையான, பொதிகை மலை காடுகளில் வாழும் காணி பழங்குடியின மக்களை பற்றிய அற்புதமான ஆவணப்படத்தினை பிரைட்ரே ப்ரோடக்ஷன்ஸ் கே. தேவபாலன் மற்றும் அவரது குழுவினர் உருவாக்கியிருக்கிறார்கள், தமிழக அரசின் பங்களிப்புடன்.
காணி இன மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வியல், திருவிழாக்கள் மற்றும் சடங்குகள், பாரம்பரியங்கள் மற்றும் சமூக பழக்கவழக்கங்கள், உணவு மற்றும் மருத்துவ முறைகள் மற்றும் கல்வி அவர்களது வேலை வாய்ப்பு ஆகிய ஐந்து தலைப்புகளில் தோராயமாக ஐந்து முதல் பத்து நிமிட வீடியோக்களாக அற்புதமான ஆவணப்படமாக இந்த படம் திகழ்கிறது.
மூட்டு காணி – தலைவர் . விழி காணி – நிர்வாகி மூதவன் – விவசாய வழிகாட்டி மற்றும் பிலாத்தி கிராம மருத்துவர் என்று நான்கு நிர்வாகிகளை கொண்டு அடர் வனங்களுக்கு இடையே அமைந்த அவர்களது கிராமங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. பெண்களுக்கும் சம உரிமை அளிக்கும் வகையில் ஒவ்வொரு கிராமங்களிலும் மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பாரம்பரிய வழக்கப்படி ஒரு குறிப்பிட்ட நாளில் தகுதி வாய்ந்த மணமக்களை தேர்ந்தெடுத்து ஒன்றாக திருமணம் செய்து வைக்கின்றார்கள். திருமணங்களை இறுதி செய்யும் முன் மணமகளிடம் அனுமதி கேட்பது என்கிற வகையில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து காணி பழங்குடியின மக்கள் நமக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள். மேலும், திருமணம் குறித்த தகவல்களை மூட்டு காணி 3 முடிச்சு போடப்பட்ட மலர் சரத்தின வாயிலாக மற்றவர்களுக்கு சொல்வதும், ஒருவர் இறந்த மரண செய்தியை அறிவிக்க ஒரே ஒரு முடிச்சை அவிழ்ப்பதன் வாயிலாக தகவலை பரிமாறுவதும் சுவாரசியமாக இருக்கின்றது. உடலுடன் கட்டப்பட்டிருந்த ஆத்மாவை அவிழ்த்து விடுவது போல ஒரு பிரமையை ஏற்படுத்தியது என்றால் மிகை அல்ல.
குலதெய்வ வழிபாடுகளையே பிரதானமாக கொண்டாலும், தங்களது மூத்த தெய்வமாக வழிபடும் கருமாண்டி அம்மனுக்கு ஆண்டுதோறும் அறுவடை திருநாள் என்கிற பெயரில் ஓணம் திருவிழா அந்த கிராம மக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காணி இன பழங்குடி மக்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து, இயற்கையாக கிடைக்கும் இலை தழைகள் மற்றும் பூக்கள் ஆகியவற்றை உடல் முழுவதும் சூடி மகிழ்ந்து திருவிழாவை ஆடல் பாடல் விளையாட்டு என்று கோலாகலமாக கொண்டாடுகிறார்கள்.
ஆண்களுக்கு வழுக்கு மரம் ஏறுதல், சிலம்பாட்டம், அடிமுறை என்றால் பெண்களுக்கு கயிறு இழுத்தல், பேரையன் துள்ளல், சோணம் துள்ளல், தும்பி துள்ளல் போன்று விளையாட்டுகளுடன் ஆண்களும் பெண்களுமாக இணைந்து ஆடும் கோலாட்டமும் பார்ப்பவர்களின் கண்களை கவர்கிறது.
கார்த்திகை கொடுதி என்கிற வழிபாடும், மழை வேண்டி ஆண்கள் அருவிக்கரையில் விடிய விடிய இசைக்கருவியை இசைத்தும், அடுத்த நாள் காலை பொங்கல் இட்டு வழிபடுவதும், பெண்கள் ஊருக்குள் ஒரு கரையான் புற்றில் சிறுமியை அமரவைத்து அப்புற்று நனையும் வரை தண்ணீர் ஊற்றி சடங்குகள் செய்து வழிபடுவதும் பார்ப்பதற்கு மிகவும் உணர்வு பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்த மூன்று நாட்களுக்குள் மழையும் பெய்கிறது.
காணி இன சிறுமி பெரியவள் ஆகும்போது, சிறுமியை காணோம் என்று பாடிக் கொண்டே வருவதும் சிறுமி என்கிற அடையாளம் மறைந்து அன்று முதல் அவள் பெண் ஆகிவிட்டாள் என்கிறவாறு சடங்குகள் செய்வதும் அழகோ அழகு!
எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்கள் ? வெறும் கல் , மண், காட்டுப்புல், தென்னை ஓலை ஆகியவற்றை கொண்டு மிக நேர்த்தியாக கட்டப்படும் இவர்களது வீடுகள், சொர்க்கத்தின் நுழைவு வாயில்கள் என்றால் மிகையாகாது.
அந்த ஐந்து எபிசோடுகளையும் பார்க்கும் பொழுது எந்த ஒரு காணி இன ஆண்மகனுக்கும் தொப்பை என்பதே இல்லாமல் மிகவும் கட்டுக்கோப்பான உடலுடன் ஆரோக்கியமாக காட்சியளிக்கின்றனர். அதற்கு காரணம், காடுகளிலேயே இயற்கையான முறையில் விளையும், கிழங்குகள், திணை மற்றும் தேன் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உண்டு வாழ்வதும், மலைகளில் வெறும் காலுடன் பயணித்து, உயரமான மலைகளில் ஏறி இறங்கி, ஆழமான நீர்நிலைகளை நீச்சல் அடித்து கடந்து தங்களது அன்றாட கடமைகளை ஆற்றுவதும் தான் என்பதை காட்சிகளின் வாயிலாக இந்த ஆவணப்படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. காடுகளில் பயணிக்கும் பொழுது தண்ணீர் தாகம் ஏற்பட்டால் ஓட வெள்ளி என்கிற மரத்தின் கிளையை வெட்டி அதிலிருந்து சுரக்கும் நீரை பருகி தாகம் தீர்த்துக் கொள்வது வியப்பாக இருந்தது.
”சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட வனவிலங்கு சட்டம் – வனச்சட்டம் போன்றவை, பல்லாயிரம் வருடங்களாக காட்டை நம்பி காட்டு விலங்குகளுடன் நட்பு பூண்டு வாழ்ந்து வரும் இவர்களை கட்டுப்படுத்தக் கூடாது என்பதுதான் நிதர்சனம்”. அத்தகைய சட்டங்களால் தங்களது வழக்கமான மான் வேட்டை. காட்டுப்பன்றி வேட்டை போன்றவற்றை நிறுத்தி விட வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டு இருப்பதை பார்க்கும் போது, வேதனையாக இருந்தது.
என்னதான் சட்டங்கள் இவர்களை கட்டுப்படுத்தினாலும், சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு தங்களை மாற்றிக் கொண்டு இயற்கை விவசாயம், தேன் எடுத்தல், மருத்துவ மூலிகைகளை சேகரித்தல் ஆகியவற்றின் மூலம் தங்களது வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டு, அதனை பிற பகுதிகளுக்கும் வியாபாரத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். சமீபத்தில் அரசாங்கம் வழங்கிய ஆர்கானிக் தரச் சான்றிதழ் மூலம் இவர்கள் சேகரிக்கும் எலுமிச்சம்பழம், மிளகு. அன்னாசி பழம், பலாப்பழம், மரவள்ளிக்கிழங்குகள் மற்றும் தேன் ஆகியவை பழங்குடி இனத்தவர் அல்லாதவர்களால் விரும்பி வாங்கப்படுகின்றன. அதன் மூலம் இவர்களது பொருளாதாரமும் மேம்படுகிறது என்பதை பார்க்கும் பொழுதும், திருநெல்வேலி கலை மன்றம் சார்பாக காணி வாழ்வியல் அங்காடிகள் மூலமாக இவர்களது விவசாய பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்கின்றது என்பதையும் அறியும் பொழுதும் நிறைவாக இருந்தது.
மேலும் இவர்கள் காடுகளில் கிடைக்கும் 102 மூலிகைகளை பானையில் கொதிக்கவைத்து கொடுக்கும் நீராவி குளியல் தோல்வியாதிகள் மற்றும் பல்வேறு உடல்நல குறைபாடுகளை தீர்க்கின்றது. பழமையான அதே நேரம் மிகவும் நேர்த்தியான அந்த நீராவி குளியலுக்கான அமைப்பு பிரமிக்க வைக்கின்றது. இதனை வெளியில் இருந்து செல்பவர்களும் எடுத்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் தகவல்.
இன்று பழங்குடியின மக்களுக்கு உண்டு உறைவிட பள்ளிகள் நடத்தப்படுகின்றன. அதில் பயிலும் காணி இன மக்களின் பிள்ளைகள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு செய்கிறார்கள். மேற்படிப்புக்கு நகர்ப்புறங்களுக்கு செல்லும் காணி இன மாணாக்கர்கள் மூலம் கலாச்சார பரிமாற்றங்கள் ஏற்படுகிறது.
பள்ளிப்படிப்பிற்கு பின் காணி இன இளைஞர்கள் வனப்பாதுகாவலர்களாகவும் நியமிக்க படுகிறார்கள்.
”மலைவாழ் பழங்குடியின மக்கள் தானே பல்லாயிரம் ஆண்டுகளாக சீருடை அணியாத வனப்பாதுகாப்பாளர்கள் !!”
பிரைட் ரே புரொடெக்ஷன்ஸ் இன் நிறுவனரான கே தேவபாலன் இயக்கத்தில் அவரது திறமையான தொழில்நுட்பக்குழுவினர் பணியாற்றிய காணி மேற்கு தொடர்ச்சி மலையின் பூர்வ குடிமக்கள் என்கிற இந்த ஆவணப்படம் சர்வதேச தரத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு இருப்பதுடன், நேர்த்தியான இசையமைப்பு மற்றும் எடிட்டிங் ஆகியவற்றுடன் பார்ப்பவர்களின் உள்ளத்தை கவர்வது நிச்சயம்.
ஷ்ரவனின் நேர்த்தியான எழுத்தாக்கம், நவீன் குமாரின் அற்புதமான ஒளிப்பதிவு, பொன்னுவேல் தாமோதரனின் நேர்த்தியான எடிட்டிங் மற்றும் ஒலிச்சேர்க்கை ஆகியவை காணி என்கிற இந்த ஆவண படத்தை பார்க்கும் பொழுது சர்வதேசத்தர அனுபவத்தை வழங்கி இருக்கிறது. இவர்களுடன் ஸ்ரீராம் பாலகிருஷ்ணனின் கலரிஸ்ட் ஆகவும் ஸ்ரீ கிரிஷின் நடன அமைப்பாளராகவும், டிசைனராக மணிகண்டனும், பாடல் ஆசிரியராக யுகி பிரவீனும், ஸ்டில் போட்டோகிராபராக பவிஷா பாலனும், ஸ்டோரி போர்டு ஆர்டிஸ்டாக சந்திரனும் மற்றும் CGl / VFX அமர்நாத் பணியாற்றுகின்றனர்.
”இந்த ஆவணப்படத்தை, அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்களும் பார்த்து, இயற்கையோடு இயைந்த வாழ்வியலை காணி, மேற்கு தொடர்ச்சி மலைவாழ் பூர்வகுடிமக்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.”
About Bright Ray Productions
லயோலோ கல்லூரியில் விஸ்காம் படித்த கே தேவபாலன், இயக்குனர்கள் சேரன் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோரின் உதவியாளர் ஆவார். அவர்களுடன் பணி புரிந்த நிலையில் 2016ல், டிஜிட்டல் படைப்புகளுக்கான பெரிய வரவேற்பு கிடைத்து வரும் சூழலை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு சொந்தமாக பிரைட் ரே ப்ரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தை தொடங்க முடிவு செய்து இருக்கிறார். இதனை சேரன் மற்றும் பா ரஞ்சித் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ரா பார்த்திபனும் தனது ஆதரவை வழங்கியிருக்கிறார்.
3D கேள்விப்பட்டிருப்போம் ஆனால் இவர்களது பிரைட்ரே ப்ரொடக்ஷன்ஸ் 4 D என்கிற கொள்கையுடன் தனது செயல்பாட்டை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
- Discover – Background research and careful location selection with a scientific approach to lay the right base for the video contents offered
- Design – Crafting purposeful and appealing scripts in line with the objectives of the project
- Develop – Augmenting the primary content with creative incorporation of additional effects aided by the latest technological advancements
- Deliver – Timely handing over of the refined and tested final content to clients’ satisfaction
அனிமேஷன் வீடியோக்கள், ஆவண படங்கள், விளம்பர படங்கள், கார்ப்பரேட் படங்கள், ப்ரோமோஷனல் மற்றும் இன்ஃபோகிராபிக் வீடியோக்கள் என்று தங்களது திறமையான தொழில்நுட்பக் குழுவினர் மூலம் வழங்கி வருகின்றனர்.
காணி, மேற்கு தொடர்ச்சி மலையின் பூர்வ குடிமக்கள் என்கிற இந்த ஆவணப்படம் பல விருதைகளை பெற்றதோடு அல்லாமல் இவர்களுக்கு மிகவும் தன்னம்பிக்கையை அளித்து இருக்கின்றது.
அந்த நம்பிக்கையின் விளைவாக, திருநெல்வேலி காரைக்குடி நீலகிரி ராமேஸ்வரம் திருவள்ளூர் தஞ்சாவூர் கோயமுத்தூர் தென்காசி பொள்ளாச்சி கன்னியாகுமரி தூத்துக்குடி சேலம் திருச்சிராப்பள்ளி ஈரோடு சென்னை ஆகிய ஊர்களுக்கு பயணித்து அங்கு வாழும் பூர்வ குடி மக்கள் மற்றும் அவர்களது பாரம்பரியம் கலாச்சாரம் கலை ஆகியவற்றையும் ஆவணப்படுத்த இருக்கிறார்கள் கே தேவபாலன் தலைமையிலான பிரைட்ரே ப்ரொடக்ஷன்ஸ் குழுவினர்.
Follow Bright Ray Productions on social media
Website www.brightray.co
YouTube @brightrayproductions
Facebook Bright Ray productions
Instagram brightrayproductions
Linkedin Bright Ray Productions
e-mail brightrayproductions@gmail.com