அறிமுக இயக்கு நர் எஸ் ஆர் சுப்புராமன் இயக்கத்தில், விதார்த், வாணிபோஜன், ரகுமான், கிரித்திக் மோகன், பாலகிருஷ்ணன் ஐ ஏ எஸ் ஆகியோர் நடித்திருக்கும் படம் அஞ்சாமை.
உளவியல் ரீதியிலான பொதுவான ஆலோசனைக்காக டாக்டர் எம் திருநாவுக்கரசு வை தேடிச்சென்ற சுப்புராமனின் முன் நீட் தொடர்பான செய்திகள் அடங்கிய செய்தித்தாள்களின் கட்டு ஒன்றினை காட்டி,, “ இதிலிருந்து ஒரு கதை எழுதி படம் இயக்க முடியுமா…? என் மகன்களுக்கு செய்திருக்கவேண்டிய கல்விக்கட்டணங்களை முழுமையாக சேமித்து வைத்துவைத்திருக்கிறேன்…. அவர்கள் தங்களது திறமையால் அதிக செலவில்லாமலே படித்து முன்னேறிவிட்டார்கள்… இந்தப்பணத்தை என் விருப்பப்படி செலவு செய்துகொள்ள அனுமதித்திருக்கிறார்கள்.. நான் சமூக நோக்குடன் ஒரு படம் தயாரிக்க விரும்புகிறேன்..” என்று சொல்லியிருக்கிறார்.
இயக்கு நராக முயற்சி செய்துகொண்டிருப்பவர்களுக்கு வாய்ப்பு தேடி அலைந்தாலே பல வருடங்கள் ஆகிறது, அப்படியிருக்க தானாக வந்த வாய்ப்பை நழுவ விடுவாரா சுப்புராமன், ஒரே வாரத்தில் கதை எழுதி, இன்னொரு வாரத்தில் வசனமும் எழுதி தயாரிப்பாளரை திருப்தி படுத்திய கையோடு, மடமடவென படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார்.
ரகுமான் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் மம்மூட்டியை அணுகியிருக்கிறார்கள், அவருக்கு முழு விருப்பம் இருந்தாலும் அவரால் தேதிகள் ஒதுக்க முடியாததால், அந்த வாய்ப்பு ராகுமானுக்கு கிடைக்க அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
நாயகன் விதார்த், “ இந்தக்கதையை கேட்டவுடன், இதுவரை இல்லாத அளவிற்கு ஒன்றை செய்யவேண்டும் என்று அதிகமெனக்கெட்டு கெட் அப்புகளையெல்லாம் மாற்றி பணியாற்றியிருக்கிறேன். அந்தக்காலத்தில் நடனம், நாட்டிய நாடகம், பாடல்கள், நாடகம் மூலம் மக்கள் தங்கள் பிரச்சினைகளை அரசனுக்கும் சக மனிதர்களுக்கும் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் ஒரு கூத்துக்கலைஞனாக இந்தப்படத்தில் நடித்திருக்கிறேன்.இந்தப்படத்தில் நடிப்பதற்காக சில படங்களில் நடிக்க இருந்த வாய்ப்புகளை இழந்திருக்கிறேன்… எனது வேலை இல்லாவிட்டாலும் அஞ்சாமை படப்பிடிப்பு முழுவதும் நான் அங்கேயே இருந்து அனைத்து வேலைகளையும் செய்திருக்கிறேன்…” என்றார்.
வாணிபோஜன் கூறுகையில், “ ஆடிசனுக்கு அழைத்தார்கள், எனக்கு நடிக்கவரும் என்று கூறினேன்… ஆனாலும் அந்தக்கதையில் இயக்கு நர் எதிர்பார்க்கும் உணர்ச்சிகளை கொடுக்கமுடியுமா என்பதற்காக் வரச்சொன்னார்கள். மகிழ்வோடு நடித்துக்காட்டினேன். தேர்வானேன், இரு குழந்தைகளின் அம்மாவாக நடிக்கவேண்டும்…. அதை மறுத்தால் எப்படி நான் முழுமையான நடிகை என்று சொல்லிக்கொள்ளமுடியும்..?… இந்தப்படத்தில் நடித்துவிட்டு பல படங்கள் நடித்துவிட்டேன்.. ஆனாலும், மனதெல்லாம் இந்தப்படத்தை சுற்றியே வந்துகொண்டிருந்தது….” என்றார். இந்தப்படத்தின் இயக்கு நர் சுப்புராமன் பட்ட கஷ்டங்களைச் சொல்லி மேடையிலேயே கண்கலங்கியும் விட்டார் வாணிபோஜன். இயக்குநரின் வலிக்காக மேடையில் கண்கலங்கிய முதல் நடிகை வாணிபோஜன் என்றால் அது மிகையாகாது.
” இது யாருக்கும் ஆதரவான படமோ எதிரான படமோ அல்ல… குறிப்பாக நீட் வேண்டுமா வேண்டாமா என்று சொல்ல வரும் படமல்ல…. 2019 காலகட்டத்தில் நீட் தேர்வினால் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் ஆகியவற்றை வைத்து அஞ்சாமையை இயக்கியிருக்கிறேன்..” என்றார் இயக்குநர் சுப்புராமன்.
இயக்குநரின் கருத்தையே வழிமொழிந்த டிரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ் ஆர் பிரபு, நீட் வேண்டுமா வேண்டாமா என்கிற வாதங்களுக்கு வரவில்லை…. அஞ்சாமை ஒரு சிறந்த படைப்பு, அதனை பார்த்தவுடன் அதை வெளியிடுவது எங்களது கடமை என்கிற முடிவுக்கு வந்தோம் என்றார்.