வெள்ளிக்கிழமையானால் புதுப்படங்களைத் தமிழ் சினிமா ரசிகர்கள் எவ்வளவு ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களோ அதே ஆர்வத்துடன் விமர்சகர் கேபிள் சங்கரின் நேர்மையான – நெத்தியடி விமர்சனத்திற்கும் காத்திருப்பார்கள். அந்த அளவிற்கு தமிழ் சினிமா உலகின் சிறந்த விமர்சகர்களில் ஒருவராகத் திகழும் சங்கர் நாராயணனுக்கு அவரது விமர்சனங்களே ஒருபடத்தை இயக்கும் வாய்ப்பினைப் பெற்றுத் தந்திருக்கிறது.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அறியப்படும் தஞ்சாவூர் சீமையிலிருந்து வந்திருக்கும் நண்பர்கள் மற்றும் ரசிகர்களால் கேபிள் சங்கர் என்று அழைக்கப்படும் சங்கர நாராயணன் ஒரு கலைக் களஞ்சியம் என்றால் அது மிகையாகாது.
குறும்பட இயக்குனராக, பல முன்னணி இயக்குனர்களுடன் இணை- துணை இயக்குனராக,
சமீபத்தில் வெளிவந்து வசூல் சாதனை புரிந்து கொண்டிருக்கும் கலகலப்பு உட்பட பலபடங்களில் வசன உதவியாளராக, இணையத்தமிழர்களிடையே புகழ்பெற்ற ஒரு வலைப்பதிவாளாராக, எழுத்தாளராக என்று பன்முகத் திறமைகள் கொண்ட சங்கர் நாராயணனின் திரைப்பட விமர்சனங்கள் அடங்கிய சினிமா என் சினிமா என்னும் நூல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
செந்தில் குமாரின் ஜான்சி ராணி பதிப்பகத்தின் கன்னி முயற்சியாக வெளிவந்திருக்கும் சினிமா என் சினிமா புத்தகத்தை நடிகர் நாசர் வெளியிட தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர் பெற்றுக் கொண்டார்.
விழாவில் பேசிய நாசர், “ 80 ஆண்டுகால தமிழ் சினிமாவில் எத்தனையோ சாதனைகள் நிகழ்ந்திருக்கின்றன. தொழில் நுட்பம் வராத காலகட்டத்திலேயே நமது படைப்பாளிகள், தொழில் நுட்பக்கலைஞர்கள், நடிகர்கள் கற்பனை செய்து கூட பார்க்க இயலாத சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள். துரதிஷ்டவசமாக அந்த சாதனைகளைப் பதிவு செய்து வைக்க நாம் தவறி விட்டோம். இன்னும் பதிவு செய்யப்பட வேண்டிய சாதனைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றை பதிவு செய்தால் அது நாளைய தலைமுறையினருக்கு ஒரு வரலாறாக இருக்கும், பல விஷயங்களை அவர்களுக்குக் கற்றுத்தரும் ஆசானாகவும் விளங்கும்.. அந்த வகையில், வெறுமனே விமர்சனங்கள் என்றில்லாமல் திரைப்படங்களை அலசி ஆராய்ந்து விளக்கமாக ஒரு ஆய்வுக் கட்டுரையைப் போல கேபிள் சங்கர் எழுதியிருக்கும் விமர்சனங்கள் அடங்கிய சினிமா என் சினிமா என்கிற புத்தகம் ஒரு ஆரம்பமாக இருக்கும்…” என்று பேசினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முதல் பிரதியைப் பெற்றுக் கொண்ட தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர் கேபிள் சங்கருக்கு தனது ஐந்தாவது படம் இயக்கும் வாய்ப்பினை அதிரடியாக அதிகாரபூர்வமாக அந்த மேடையிலே அறிவித்தார்.
இது பற்றி ஏற்புரை வழங்கிய சங்கர் நாராயணன், “ எனது தந்தை திரைப்பட விநியோகஸ்தராக இருந்து நிறைய இழந்தவர்…ஒருவேளை அவர் விட்டதைப் பிடிக்க என்னை அறியாமலேயே நான் சினிமாத்துறைக்குள் வந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.. என் மனதில் பட்டதை அப்படியே எனது விமர்சனங்களில் எழுதி வருகிறேன்… எங்கும், யாருக்கும் வளைந்து கொடுத்தது கிடையாது. சிறந்த சினிமாக்கள் வரவேண்டும் என்று எதிர்பார்க்கும் சராசரி சினிமா ரசிகர்களில் நானும் ஒருவன்…தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர் கொடுத்த இந்த வாய்ப்பு நானே எதிர்பாராதது… நிச்சயம் மற்ற விமர்சகர்களின் நற்சான்றிதழைப் பெரும் வகையிலும் ரசிகர்கள் கொண்டாடும் வகையிலும் சிறந்த திரைப்படமாக அந்தப்படத்தை இயக்கக் காத்திருக்கிறேன்” என்றார்.
திரைப்பட இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், வாசகர்கள், நண்பர்கள் என்று திரளாகக் கலந்து கொண்ட இந்த புத்தக வெளியீட்டு விழா கேகே நகரில், உதவி இயக்குனர்களின் வேடந்தாங்கல் என்று கருதப்படும் டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்றது.
தெர்மாக்கோல் தேவதைகள், கொத்துப் புரோட்டா போன்ற புத்தகங்களை எழுதி இருக்கும் சங்கர் நாராயணன் கேபிள் டிவி பற்றிய பல்வேறு விஷயங்கள் அடங்கிய கேபிளின் கதை என்கிற தொடரையும் எழுதி வருகிறார்.சுவையான உணவுகள் எங்கு கிடைக்கும் என்பது பற்றிய இவரது கொத்து புரோட்டா என்னும் தொடரும் வாசகர்களிடையே மிகவும் பிரபலம்.
தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர் வீரசேகரன், கொஞ்சம் வெய்யில் கொஞ்சம் மழை, பார்க்கணும் போல இருக்கு, ஆகிய படங்களை
தயாரித்திருக்கிறார். நான்காவதாய் “இருவர் உள்ளம்” என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இதில் வினய், பிந்து மாதவி, ஆகியோர் நடிக்க, விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். திருடா திருடி , ஆழ்வார் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ரமேஷ் இயக்குகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக அமெரிக்கா செல்லவிருக்கிறார்கள். இதற்கு அடுத்த படமாக இவரது நிறுவனத்தின் ஐந்தாவது படத்தை கேபிள் சங்கர் இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களது தந்ததையார் விட்டதை மட்டும் மல்ல அதைவிட அதிகமாகவே சாதிப்பீர்கள் கேபிள் சங்கர் என்கிற சங்கர நாராயணன்.
-விஜய் ஆனந்த்.K




