Share

நஞ்சுபுரம் – விமர்சனம்

“ 7 நாட்களுக்குள் நாகம் தீண்டி செத்து விடுவாய்”,  என்கிற முனிவரின் சாபத்தில் இருந்து தப்பிக்க கடலுக்குள் ஒற்றைத் தூணால் ஆன மாளிகை அமைத்து, படை பரிவாரங்களுடன் பாதுகாப்பாகத் தங்கியிருக்கிறான் பரீட்சித் மகாராஜா. முனிவரின் சாபம் பலித்ததா?  நாகத்தின் பிடியில் இருந்து தப்பித்தானா? விறு விறுப்பான சித்திரக்கதையாக சிறு வயதில் படித்த நாட்களுக்குக் கொண்டு செல்கிறார் இயக்குனர் சார்ல்ஸ்.

இவருடைய பரீட்சித் மகாராஜா நம்ம ராகவ்(பிரீத்தா) தன் காதலியைக் காப்பாற்றுவதற்காக நல்ல பாம்பினை மிதித்துக் காலால் நசுக்குகிறர், அதனைக் கொல்வதற்குள் தப்பித்து விடுகிறது. நாகதோஷத்திற்கு ஆளாகிறார். அடிபட்ட நாகம் பழிவாங்க ராகவைத் துரத்துகிறது. கிராமத்து வைத்தியரின் ஆலோசனையின் பேரில் புராண காலத்து பரீட்சித் மகாராஜாவுக்கு அமைக்கப்பட்ட மாதிரியே கிராமத்தின் ஒதுக்குப் புறத்தில், பொட்டல் வெளியில் நான்கு தென்னை மரங்களை வெட்டி நான்கு தூண்கள் அமைத்து, கிட்டத்தட்ட 50 அடி உயரத்தில் அதன் மேல் ஒரு பாதுகாப்பான ஒரு பரண் அமைத்து அதன் மேல் ஏறுவதற்கு கயிற்றால் ஆன ஏணி கட்டி ராகவை பரண் மேல் 41 நாட்களுக்குத் தங்க வைக்கிறார். சுற்றிலும் அகழி அமைத்து பாம்பு எளிதில் சென்று விடாதபடி அவரைப் பாதுகாக்கிறார்கள். உயிர்காப்பான் தோழன் என்பார்களே, அதன்படி நான்கு நண்பர்கள் வேறு, இரவு பகல் எந்த நேரமும் ராகவைப் பாதுகாக்கிறார்கள். எளிமையாக என்றாலும் சிந்தனையில் பிரமாண்டப் படுத்தி விடுகிறார்கள். நல்ல படம் பார்க்கமாட்டோமா என்று ஏங்கித் தவிக்கும் தமிழ் சினிமா ரசிகனுக்கு திகட்டத் திகட்டத் தீனி போட்டிருக்கிறார்கள்.

நண்டு கொழுத்தா  கிடையில தங்காது என்று சொல்லுவார்களே அதைப்போல் தாழ்ந்த ஜாதிப் பெண்ணான மலர் மீது காதல் காதல் வயப்பட்ட ராகவால் அவரைப் பார்க்காமல் பரண் மேலேயே இருக்க முடியுமா..? நண்பர்கள் கண்களில் மண்ணைத் தூவி விட்டு நட்ட நடு ராத்திரிகளில் தன் காதலியினைத் தேடிப்போகிறார். துள்ளும் இளமை என்ன செய்யும். அதன் கடமையைச் செய்கிறது. மலர் மகரந்தச் சேர்க்கைக்கு இடம் கொடுத்து விடுகிறது.

ஒரு பக்கம் நாகம் துரத்த மறுபக்கம் காதல் துரத்த ராகவ் தன்னுடைய நடிப்பில் ஜொலித்திருக்கிறார். இவர்கள் காதலைத் தெரிந்து கொண்ட சமூகமும் இப்பொழுது துரத்த ஆரம்பிக்கிறது.

திருடனாக இருந்து வால்மீகியாக மாறி ஒருவன் இராமாயணம் எழுதுகிறான். அரக்கன் இராவணனை அழித்து விட்டு ராமனையும், சீதாவையும் ஒன்று சேர்க்கிறான். நஞ்சுபுரத்தில் ராகவ் பரீட்சித் மகாராஜா என்றால் அவரது பள்ளித் தோழன் ஒரு திருடனாகக் காட்டுக்குள், கிடைத்தவற்றை அபகரித்து வாழ்க்கையை ஓட்டுகின்றான். வால்மீகியாக மாறும் சந்தர்ப்பம் வாய்க்கிறது. பாம்பு தன்னைப் பழிவாங்கிவிடும் என்கிற மூட நம்பிக்கை மற்றும் சாதி வெறி என்கிற இரு ராவணர்களையும் எதிர்த்து நிற்க தைரியம் கொடுத்து ராகவையும், மலரையும் சேர்த்து வைக்க முயல்கிறான்.

தமிழ் சினிமாவில் புதிதான ஒரு காட்சியமைப்பு, 40 வது நாள் இரவு சந்திரகிரகணம். ராகவும், மோனிகா(மலர்) அந்த மலைக் கிராமத்தை விட்டுத் தப்பிக்கிறார்கள். பாம்புகள் நிறைந்த மலைக்காட்டுக்குள் ஓட ஆரம்பிக்க்கிறார்கள். கிரகண நேரம் இருட்டி விடுகிறது. கிரகணம் முடிந்து வெளிச்சம் வந்த பின் மறுபடியும் ஓட்டம் வழி நெடுக நாகப்பாம்புகள். ராகாவல் மிதிபட்ட பாம்பும் துரத்துகிறது. சூரியன் உதிக்கத் தொடங்குகிறான். துரத்தி வந்த பாம்பு முழுச் சீற்றத்துடன் படம் எடுத்துக் கொண்டு ராகவின் அருகில் “என்னிடம் இருந்து தப்பித்துவிட முடியுமா?” என்கிற பார்வை “வந்துடுங்க….” மோனிகாவின் அலறல் ஒரு பக்கம்… இதற்கு மேல் ஒரு அடி கூட எடுத்து வைக்கமுடியாமல் மூச்சு வாங்கிக் கொண்டு ராகவ்… என்ன ஆனார் ராகவ்..?

தன் மகனைத் தேடி எப்பொழுது வேண்டுமானாலும் பாம்பு வந்துவிடலாம் என்கிற பதைபதைப்பு ராகவின் பெற்றோர்களாக வரும் நரேன் மற்றும் பிரியாவிற்கு, அது நிஜமான பதைபதைப்பாக இருக்கிறது. பாம்பு வந்து எங்காவது ஒளிந்துக் கொள்ளக் கூடும் என்று பயந்து ராகவின் அறையில் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தி விட்டு, “என்னை மீறிதான உள்ளே போகணும்..” என்று வாசலில் படுத்துக் கொள்ளும் அம்மா, அதுதான் அம்மா.

மோனிகா , கறி விற்கும் பெண்ணாக வந்து நடிப்பில் நல்ல முதிர்ச்சியினை வெளிப்படுத்தியிருக்கிறார்.  அனைத்து உலககோப்பை கிரிகெட் ஆட்டங்களிலும் பாகிஸ்தானைத் தோற்கடித்து இந்தியா ஜெயித்துக் கொண்டு இருப்பது மாதிரி மலையும் மலை சார்ந்த இடங்களில் படம் பிடிக்கப்பட்ட படங்களில் தம்பிராமையா இருந்தால், நிச்சய வெற்றிதான். எந்த ஊருக்குப் போனாலும்/எந்த கதாபாத்திரச் சட்டை அணிந்தாலும் மனிதர் அருமையாகப் பொருந்திப்போகிறார்.

பசுமையான மலைச்சாரல்கள், பெரிய ஆறு (அதுல நிறையத் தண்ணி அது ரொம்ப முக்கியம்), பரிசல் அழகான குடிசைகள், நம் பாரம்பரிய வீடுகள் நஞ்புரத்தில போயி கொஞச நாள் தங்கிட்டு வரலாம என்கிற அளவிற்கு மிகவும் யாதர்த்தமாகப் படம் பிடித்து இருக்கிறார்கள். ஆக்கர் ஸ்டுடியோ முந்தைய படங்களை விட கொஞ்சம் நன்றாக கிராபிக்ஸ் செய்திருக்கிறார்கள், கிராபிக்ஸென்று தெரியாத அளவிற்கு.

பாம்பாவது..!  பழிவாங்கிறதாவது..!  என்ன ஒரு அபத்தமான மூட நம்பிக்கை..! என்று பகுத்தறிவுவாதிகள் கிண்டல் பண்ணக்கூடும். 6 அறிவு கொண்ட மனிதர்களே,  சில நாட்கள் அல்லது சில மாதங்கள் அவ்வளவு ஏன் எத்தனை வருடம் ஆனாலும் காத்திருந்து நேரம் வரும் போது சக மனிதனைப் பழிவாங்கும் போது, ஒரு 41 நாள் (மட்டும்) முயற்சி செய்வோம் என்று 5 அறிவு படைத்த ஒரு உயிரினம் நினைப்பதில் தவறில்லையே!!

நஞ்சுபுரம் (ராகவ்) பிரீத்தாவின் தயாரிப்பு. அண்ணாப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் கோல்டு மெடல் வாங்கிய ராகவ் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்ததோடு மட்டுமல்லாமல் இசையும் அமைத்திருக்கறார். காட்சிகளோடு ஒன்றிப் போகும் பாடல்கள் மிகவும் இனிமையாக இருக்கின்றன.

“யாவரும் வந்து சேரவேண்டிய புள்ளி…யாவரும் சுற்றிச் சுழலும் அச்சு… யாவரும் நீந்திக் கடக்காத சாகரம்….”   இந்தப்பாடல் உண்மையிலேயே யாவரும் யோசிக்காத வரிகள், அற்புதமான இசை மற்றும் காட்சியமைப்பு. இந்தப்பாடலை எழுதிய மகுடேஸ்வரனுக்கும் பாடிய பிரீத்தாவுக்கும் வாழ்த்துகள். பின்னணி இசையில் நம்மை ஹாலிவுட்டுக்கு அழைத்துச் செல்கிறார். நம் காலடியில் நாகப் பாம்புகள் ஊர்வது போன்ற பிரமையைப் பின்னணி இசையும், ஒளிப்பதிவாளர் ஆன்டணியின் கேமரா கோணங்களும் ஏற்படுத்தி விடுகின்றன. படத்தின் ஆரம்பக் காட்சியே நம்மைக் குலை நடுங்க வைத்து விடுகிறது.

எவ்வளவு பாரட்டினாலும் தகும் என்று சொல்வது எளிது. எத்தனை முறை தியேட்டருக்குச் சென்று குடும்பத்துடனும் நண்பர்களுடனும் பார்க்கப் போகிறீர்கள் என்பதுதான் முக்கியம். தாராளமாகக் குழந்தைகளை அழைத்துச் செல்லலாம். தேர்தல் வருகிறது நேர்மையான வாக்காளர்களைத் தேர்ந்து எடுக்க வேண்டும் என்கிற முனைப்புடன் இருக்கும் ஒவ்வொரு வாக்காளனுக்கும் ஒரு வேண்டுகோள், வேட்பாளர்களாக நிற்பவர்கள் வாக்காளர்கள்/பொது மக்களின் பிரதிநிதிகள் தாம், ஆகவே பொதுமக்களாகிய, திரைப்பட ரசிகர்களாகிய நாம் நேர்மையா இருக்க முயல்வோம். திருட்டு விசிடிக்களில் இந்தப்படம் மட்டுமல்ல எந்தப் பட்த்தையும் பார்க்காமல் இருப்போம். அடுத்தவன் உழைப்பினைத் திருட நமக்கு உரிமையில்லை.

100 படங்களுக்கு மேல் இயக்கிய இராம நாராயணன் நஞ்சுபுரம் படத்தைப்பார்த்து விட்டு வெகுவாக ரசித்ததோடு மட்டுமல்லாமல் தமிழ்சினிமா ரசிகர்களும் பார்த்து ரசிக்கத் தன்னுடைய தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக வெளியிட்டிருக்கிறார்.

நஞ்சுபுரம் பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம்.

-K.விஜய் ஆனந்த்

Leave a Comment