இலக்கியத்தை இணைத்து கொள்ள இசைந்த கார்த்தி

சொன்னது ராஜு முருகன்

202

ஜப்பான் டிரையலர் வெளியீட்டு விழாவில் ராஜூ முருகன் பேசும்போது, “ஒவ்வொரு முறையும் நான் ஒரு படத்திற்கான கதையை முடித்தவுடன் அதை தனித்துவமான படமாக உருவாக்கும் பாணிக்குத்தான் செல்வேன். திரைப்படங்களில் என்னை வசீகரித்தவர் சார்லி சாப்ளின். இப்போது அந்த வழியில் கார்த்தி  என்னுடைய இலக்கிய சிந்தனைகளுடன் கூடிய எண்ணங்களை உற்சாகப்படுத்துவது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. நிறைய பேர் இலக்கியத்தை சினிமாவுடன் இணைத்து ரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டார்கள். ஆனால் கார்த்தி சார் வட்டியும் முதலும் புத்தகத்திலிருந்து சில முக்கியமான விஷயங்களை இணைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். பருத்திவீரன் படத்தைப் போன்று ஜப்பான் கதாபாத்திரமும் ஒவ்வொருவருக்குள்ளும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். எஸ்.ஆர் பிரகாஷ் மற்றும் எஸ்.ஆர் பிரபு இருவருமே நண்பர்களாக இருந்ததுடன் என்னுடைய எண்ணங்களுக்கு உருக்கொடுக்க ஆதரவாகவும் இருந்தார்கள்.. கார்த்தி போன்ற அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட நடிகருடன் அவரது 25வது படத்தில் பணியாற்றியதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஜி.வி பிரகாஷ் குமார் எனது நெருங்கிய நண்பர். இந்த மொத்த பட குழுவினரும் கடுமையாக உழைத்துள்ளனர்” என்று கூறினார்.

இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் பேசும்போது, “கார்த்தி சாருடன் என்னுடைய முதல் படமாக ஆயிரத்தில் ஒருவன் இருந்தது. அதன்பிறகு கொம்பன், சர்தார் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றி இருந்தோம். தற்போது மீண்டும் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளதில் தான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தில் அருமையான மெலோடி பாடல்களிலும் பின்னணி இசையிலும் சற்று தனித்தன்மை கொண்டதாக இருக்கும் வகையில் சில விஷயங்களை முயற்சித்திருக்கிறோம். சூரரைப்போற்று படத்திற்கு பிறகு புறநானூறு படத்தில் சூர்யா சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்ததற்காக மொத்த படக்குழுவுக்கும் எனது நன்றி” என்று கூறினார்.