மேடையிலேயே இவ்வளவு சிரிப்புக்காட்டுறாரே

சினிமாவுல பட்டையைக்கிளப்பியிருப்பார்றா... - ஆதம்பாவாவிற்கு சான்றித்ழ வழங்கிய ரசிகர்கள்

230

ஒரு இயக்குநராக  ஆதம்பாவாவிற்கு முதல் மேடை என்றாலும், உயிர் தமிழுக்கு படக்கதையை அற்புதமாக சொல்லியிருப்பார் என்கிற நம்பிக்கையை, அவர் உதவி இயக்குநராக சேர சென்னைக்கு வந்ததிலிருந்து தயாரிப்பாளர் ஆனது , இன்று இயக்கு நர் ஆனது வரை சுவராஸ்யமாக சொல்லியதன் மூலம்  ஏற்படுத்திவிட்டார்.

அவர் பேசும் போது,  “என்னை உயிர் தமிழுக்கு படம் மூலம் இயக்குநராக்கி அழகு பார்த்த எனது குரு, மக்கள் போராளி அமீர் சாருக்கு நன்றி. அவருடைய மௌனம் பேசியதே பட இசை வெளியீட்டு விழா தான் எனது சினிமா வாழ்க்கையின் முதல் என்ட்ரி. எனக்கு விவரம் தெரிந்து அவரை நாற்பது வருடங்களாக எனக்கு தெரியும். நான் நான் சினிமாவில் உதவி இயக்குநராக நுழைய முடிவெடுத்தபோது எங்களது உறவினர் மூலமாக இயக்குநர் பாலாவிடம் சேர்த்து விட சொன்னேன். பாலாவும் என்னை சென்னைக்கு வரச் சொல்லிவிட்டார். காரை எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்த உதவி இயக்குநர் நானாகத்தான் இருக்கும். அண்ணா நகரில் உள்ள பாலாவின் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன்.. அவர் மாடியில் இருந்தாலும் பல மணி நேரம் கீழே காத்திருந்தேன். அப்போது நான் கடவுள் பட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதில் முதலில் பேசப்பட்ட அந்த மிகப்பெரிய ஹீரோ அந்த சமயத்தில் அங்கே வந்தார். ஆனால் அங்கே சாப்பிட சொல்லாமல் கூட பல மணி நேர காத்திருப்பு ஏற்பட்டதால் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். ஆனால் பாலா எனக்கு வைத்த பரீட்சை அது என்று உறவினர் கூறினாலும் பாலாவிடம் வேலை பார்க்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு அமீரிடம் சேர்த்து விடுமாறு உறவினரிடம் கூறினேன்.

அந்த சமயத்தில் பருத்திவீரன் படத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. நான் அமீரை பார்க்க சென்றதும் அவர் எனக்காக காத்திருப்பார், நான் வந்ததுமே பருத்திவீரன் ஸ்கிரிப்ட்டை கொடுத்து படித்துவிட்டு வா என்று கூறி மதியம் என்னுடன் டிஸ்கஷன் செய்வார் என்கிற நினைப்பில் சென்றேன். ஆனால் அமீரும் என்னை வரச் சொல்லிவிட்டு பல மணி நேரம் காக்க வைத்தார். அதன் பிறகு வெளியே வந்தவர் என்னை பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார். இந்த இரண்டு இடங்களிலும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் நானே தனியாக ஒரு அலுவலகத்தை துவங்கினேன்.

அதன் பிறகு இயக்குனர் சரவண சக்தியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் என்னவெல்லாம் பண்ணக்கூடாது என்பதை இங்கிருந்து கற்றுக் கொண்டேன். ஆனாலும் இந்த படம் இவ்வளவு நேர்த்தியாக வந்ததற்கு கூடவே இருந்து வழி நடத்திய அமீர் சார் தான் காரணம். இன்று கூட இந்த படத்தை பார்த்த கதாநாயகி சாந்தினி இப்படி ஒரு படத்திலா நான் நடித்தேன் என ஆச்சரியப்பட்டார். அந்த அளவிற்கு இந்த படத்தை எடுத்து முடித்து ரிலீசுக்கு கொண்டு வந்து விட்டோம்.

ஆனால் இந்த சமயத்தில் மதுரையில் பாஷாவாக சென்னையில் மாணிக்கமாக இருந்த அமீரை இப்போது தாவூத் இப்ராஹீமாக மாற்றி விட்டார்கள். அதனால் இந்த படத்தின் வியாபாரமே பாதிக்கப்பட்டது. அமீரால் உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்பாளரே இந்த படத்தின் ரிலீஸை எவ்வளவு தடுக்க முடியுமோ அந்த அளவிற்கு வேலை பார்த்தார். ஆனால் என்னிடம் நன்றாக தான் பேசுவார். அவர் இந்த படத்தை பற்றி பேசிய ஆதாரம் என்னிடம் இருக்கிறது. ஆனால் காலம் தான் அவருக்கு பதில் சொல்லும்.

தமிழ் சமூகத்திற்காக சிறைக்கு சென்றவர் அண்ணன் அமீர். அவருடன் கூடவே சிறைக்கு சென்ற சீமான் இன்று ஒரு கட்சித் தலைவராக இருக்கிறார். ஆனால் சினிமா மீது இருக்கும் காதலால் இங்கேயே இருந்து கொண்டு பத்து வருடம் அந்த வழக்குக்காகவே அலைந்தார். அவரை விடுதலை செய்த நீதிபதியே இதற்காக நீங்கள் பயந்து விட வேண்டாம், தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுங்கள் என்று நற்சான்றிதழ் கொடுத்தார். தமிழக மக்களின் இதயங்களில் இருக்கிறார் அமீர். மக்கள் போராளி அமீர் என்கிற ஒரு புத்தகமே எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் அது வெளியாக இருக்கிறது.

மக்களுக்கான எல்லா போராட்டங்களிலும் எப்போதும் முன்னால் நின்றிருக்கும் இவருக்கு இந்த மக்கள் போராளி பட்டத்தை கொடுக்கவில்லை என்றால் வேறு யாருக்கு கொடுப்பது ? அரசியல் நையாண்டி பின்னணியில் இழையோடினாலும் முழுக்க காதல் படம் தான் இது. சிவகார்த்திகேயனுக்கு டப் கொடுத்திருக்கிறார் அமீர் அண்ணன். அவர் அடுத்தடுத்து எந்த மாதிரி கதைகளை படமாக்க போகிறார் என்பது எனக்கு தெரியும். அவரை வேலை செய்ய விடுங்கள்.. மக்களுக்கு பயனுள்ள திரைப்படங்கள் வரும்..

கதாநாயகி சாந்தினி தயாரிப்பாளருக்கு எந்த வித கஷ்டமும் கொடுக்காத ஒரு நடிகை.. மன்னன் விஜயசாந்தி, சவாலே சமாளி ஜெயலலிதா போல இதில் அமீருக்கு இணையாக காதலியின் கதாபாத்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமா அவரை பயன்படுத்தி கொள்ளும் என நினைக்கிறேன். இந்த படத்தில் படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இமான் அண்ணாச்சிக்கு இதில் ஃபுல் மீல்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இனி பல படங்களில் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க அவருக்கு அழைப்பு வரும். கஞ்சா கருப்புவும் பல காட்சிகளில் காமெடியில் பட்டையை கிளப்பி இருக்கிறார். பல பிரச்சினைகள் காரணமாக இந்த படத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டும் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படத்தை நீங்கள் தான் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்”  என்று பேசினார்.

இவர் பேசப்பேச மேடையிலிருந்த நாயகன் அமீர் உள்ளிட்ட அத்தனை பேரும்  வயிறு குலுங்க சிரித்து மகிழ்ந்தனர்.

படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள், மற்றும் அமீரின் ரசிகர்கள் உள்ளிட்ட அத்தனை பேரும்,  “சீரியசான மேட்டர்களை கூட சிரிக்க சிரிக்க சொல்றாருடா இவரு…. அப்ப படத்திலும் காமெடி  கலந்து பட்டையை கிளப்பியிருப்பார்றா..” என்று முணுமுணுத்துக்கொண்டனர்.

ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர். Pvr inox பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. வரும் மே-10ஆம் தேதி உலகெங்கிலும் இப்படம் வெளியாக இருக்கிறது.