புகழ், பணம், போதை, பெண்… இவற்றுக்காக இவர் சினிமாவுக்கு வரவில்லையாம் !

எலெக்‌ஷன் இயக்குநர் தமிழ்

149

வரும் மே 17 ஆம் தேதி வெளியாகவிருக்கும் எலெக்‌ஷன் திரைப்படத்தின் இயக்குநர் தமிழ் , ” புகழ், பணம், போதை, பெண்… இதற்காக நான் சினிமாவிற்கு வரவில்லை. என்னை அழ வைத்ததையும், என்னை சிந்திக்க வைத்ததையும் சொல்வதற்காகவே சினிமாவிற்கு வந்தேன்..” என்று அதிரடியாக பேசுகிறார்.

தொடர்ந்து எலெக்‌ஷன் பட அனுபவங்களை பகிர்ந்துகொண்ட போது, ”எனது இயக்கத்தில் வெளியான ‘சேத்து மான்’ திரைப்படம் பார்வையாளர்களுடன் எளிதாக தொடர்பு கொண்டது. இந்தப் படம் அது போல் எளிதாக தொடர்பு கொள்ளுமா? கொள்ளாதா? என்ற அச்சத்தில் தான் இங்கு நான் நிற்கிறேன்.

ஒரு படத்தை நிறைவு செய்த பின் ஒரு மாதம் வரை எதைப் பற்றியும் சிந்திக்காமல் இயல்பாக இருப்பேன். இதுதான் என்னுடைய வழக்கம். ஒரு மாதத்திற்கு பிறகு புதிய கதை… புதிய உலகம் … அவற்றில் நுழைந்து விடுவேன்.

சேத்து மான் படத்தை நிறைவு செய்துவிட்டு, ஒரு மாதம் கழித்து இப்படத்தில் திரைக்கதையை எழுதத் தொடங்கினேன். பல வெர்ஷன்கள் எழுதினேன். இந்த தருணத்தில் ‘சூரரை போற்று’ என்ற ஒரு திரைப்படம் வெளியானது. அதில் விஜய்குமார் வசனகர்த்தவாக பணியாற்றி இருந்தார். அப்போது சேத்துமான் படம் வெளியாகவில்லை. டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியிடுவது குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அந்தத் திரைப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் இயக்கியதால் .. அடுத்த படத்தை பெரிய நிறுவனம் ஒன்றின் தயாரிப்பில் தான் இயக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். இதற்காக சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடனும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனததுடனும் தொடர்பில் இருந்தேன்.

ஆனால் அவர்கள் கதையைக் கேட்கவில்லை. அப்போதுதான் ‘சூரரைப் போற்று’ வெளியானது.  அரசியலைப் பற்றி நன்கு தெரிந்த.. என்னை விட நன்கு தெரிந்த ஒருவர்தான் இந்த படத்திற்கு தேவை என்பதில் உறுதியாக இருந்தேன். அப்போதுதான் நடிகர் விஜய்குமார் எனக்கு அறிமுகமாகி பழக்கமானார்.  அதன் பிறகு அவரிடம் இப்படத்தின் திரைக்கதையே கொடுத்தேன். இரண்டு நாள் கழித்து அழைப்பு விடுத்தார். அப்போது என்னை பற்றி கேட்டார். நான் சேத்து மான் என்ற படத்தில் இயக்கிவிட்டு அடுத்த படத்திற்காக இரண்டு பெரிய நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கிறேன் என்று விவரத்தை தெரிவித்தேன்.

அப்போது விஜய்குமார் நான் தற்போது ஃபைட் கிளப் என்ற படத்தில் நடித்திருக்கிறேன். அந்த தயாரிப்பாளரிடம் இந்த கதையை சொல்லி படமாக உருவாக்கலாமா?  எனக் கேட்டார்.

அப்போது கொரோனா காலகட்டம் என்பதால் நாங்கள் இருவரும் நிறைய விவாதித்தோம்.  இரண்டு பெரிய நிறுவனங்களின் அழைப்பு வரும் என்று காத்திருந்தோம்.

அப்போது ஒரு நாள் போன் செய்து தயாரிப்பாளர் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வருகை தந்திருக்கிறார் அவரை சந்தித்து இந்த ‘எலக்சன்’ படத்தின் கதையை சொல்வோம்.  அவருக்கு பிடித்திருந்தால் தயாரிக்கட்டும். காலத்தை வீணடிக்க வேண்டாம் என சொன்னார்.

எனக்கு கதை சொல்லத் தெரியாது. அதனால்தான் படத்தின் திரைக்கதையை எழுதி தயாரிப்பாளரிடம் கொடுத்து விடுவேன்.

ஆனால் விஜய்குமார் இப்படத்தின் திரைக்கதையை முழுவதுமாக வாசித்து விட்டார். அவர் இயக்குநர் என்பதால்  இப்படத்தின் கதையைப் பற்றி அந்த தயாரிப்பாளரிடம் நிறைய எடுத்து சொல்லி இருக்கிறார்.  இருந்தாலும் தயாரிப்பாளர் கதையை சொல்லுங்கள் என கேட்டுக்கொண்டார். விருப்பமில்லாமல் அவரிடம் ஒரு மணி நேரம் கதையை சொன்னேன். நிச்சயமாக அவரிடம் என்ன கதை சொன்னேன் என்று இன்றுவரை எனக்கு தெரியாது. ஆனால் தயாரிப்பாளர் ஆதித்யாவை விஜய் குமார் விளக்கமாக எடுத்துச் சொல்லி அவரை சம்மதிக்க வைத்து விட்டார்.  எனவே இந்தத் திரைப்படம் தயாராவதற்கும், நான் இந்த மேடையில் இயக்குநராக நிற்பதற்கும் முழு காரணம் விஜய்குமார் மட்டும்தான்.  இதனை நான் நேர்மையாகவும் உண்மையாகவும் இங்கு பதிவு செய்கிறேன்.

சேத்து மான் படத்தின் கதையை எந்த ஒரு தயாரிப்பாளரும் தயாரிக்க ஒப்புக்கொள்ள மாட்டார் ஆனால் பா ரஞ்சித் அடிப்படையில் இயக்குநர் என்பதால் அப்படத்தின் கதையை உணர்ந்து எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து படத்தை தயாரித்தார். அதற்காக இந்த தருணத்தில் ரஞ்சித்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கதையை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் விஜயகுமாரிடம் படத்தின் திரைக்கதையை கொடுக்கும்போது வசனத்தில் ‘ஸ்லாங்’ இல்லை. மேலும் வசனங்களில் அழுத்தம் வேண்டும் என்றும் விரும்பினேன். இதற்காக உதவியவர் தான் எழுத்தாளர் அழகிய பெரியவன்.  அவரை எழுத்தாளர் பெருமாள் முருகன் தான் அறிமுகப்படுத்தினார். அவர் படத்திற்கு வசனம் மட்டும் எழுதவில்லை படக்குழுவினருடன் இணைந்து ஆர்வமுடன் பயணித்து பல படப்பிடிப்பு தளங்களை அடையாளம் காட்டினார்.  படம் தணிக்கை செய்யப்பட்டபோது ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது கூட உடனடியாக அவர் விளக்கம் அளித்தார். அத்துடன் மட்டும் இல்லாமல் எழில் எனும் நல்ல மனிதர் ஒருவரையும் அவர் அடையாளம் காட்டினார். இவரும் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர் வழங்கிய ஒத்துழைப்பு மறக்க இயலாதது.  இந்த படத்தின் மூலம் நான் சம்பாதித்தது இந்த ஒரு மனிதரை மட்டும்தான். மேலும் இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

” எனக்கு கதை சொல்லத்தெரியாது…. எழுதின கதையை கொடுத்து படித்துப்பார்த்துக்கொள்ளுங்கல், பிடித்திருந்தால் வாய்ப்பு கொடுங்கள், இல்லாவிட்டால் இருக்கவே இருக்காங்க இன்னொரு தயாரிப்பாளர் என்று போய்க்கிட்டே இருப்பேன்..” என்று கெத்தாக தெரிவித்தார் இயக்குநர் தமிழ்.