– K. விஜய் ஆனந்த்
நிரஞன் பாரதி, மகாகவி பாரதியாரின் எள்ளுப்பேரன். அஜித்குமார் நடிந்த மங்காத்தா படம் மூலம் தமிழ்த்திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர், கடந்த வாரம் வெளிவந்த ஸ்டார் படம் வரை முப்பது படங்களுக்கு, ஆமாம், வெறும் முப்பதே படங்களுக்கு பாட்டெழுதியிருக்கிறார்.
இலககணப்பிழையின்றி எழுத, பேச உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு நல்ல தமிழை கற்றுத்தரும் பொருட்டு My TAMILGURU என்கிற யூடியூப் சேனலை ஆரம்பித்து நடத்தி வருகிறார். ஒரு வருடம் முன்பு ஆரம்பிக்கப்பட்ட இவரது தமிழ்ப்பயிற்றுவிக்கும் யூடியூப் சேனலை இன்றுவரை வெறும் 73 பேர் மட்டுமே சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். தமிழுணர்வுடன் இவர் போடும் வீடியோக்களை நூற்றுக்கும் குறைவானவர்களே பார்த்திருக்கின்றனர்.
சாதாரணமாக, திரைவிமர்சனம் செய்யும் யூடியூப் சேனல்கள், உணவு சம்பந்தப்பட்ட சேனல்கள், பொய்யான அரசியல் மற்றும் சமூக செய்திகளை பரப்பும் சேனல்கள் போன்றவற்றிற்கு பல லட்சம் அப்ஸ்கிரைபர்கள் இருக்கும் சூழலில், தமிழ் கற்றுத்தர வந்திருக்கும் மகாகவியின் எள்ளுப்பேரன் சேனலுக்கு மட்டும் ஏன் இந்த நிலை..?
தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
என்கிற அவரது எள்ளுத்தாத்தா, இப்புண்ணிய பூமியாம் பாரத மண்ணின் பெருமை மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப, எது நடப்பினும் தமிழை விடேன்… என்று சூளுரைக்காத குறையாக தொடர்ந்து எப்படியாகிலும் தமிழ் இலக்கணங்களை இன்றைய தலைமுறைக்கு கொண்டு செல்வேன் என்று திரை வாத்தி என்கிற தலைப்பில், திரைப்பட பாடல்கள் மூலம் தமிழ் இலக்கணம் பயிற்றுவிக்க ஆரம்பமாகிவிட்டார்.
வரும் சனிக்கிழமை மே 25 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இவர் நடத்தப்போகும் வகுப்பிற்கான கட்டணம் 299 ரூ மட்டுமே.
விருப்பமுள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள் என்று சொன்னால் அது தமிழுக்கு இழுக்காகிவிடும். தமிழர்கள் அனைவரும் குறிப்பாக தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழில் தேர்ச்சியடையாத பல ஆயிரம் மாணவர்களும், தொடர்ந்து தமிழ்த்தேர்வை எழுதப்பயப்படும் தமிழ் நாடு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அனைவரும், இவர்களுடன் பொதுவெளியில் தமிழால் பிழைப்பு நடத்துபவர்களும் இந்த படிப்பில் கலந்துகொள்ளுங்கள்.
தமிழ் தமிழ் என்று அரசியல் பிழைப்பு நடத்தும் ஆட்சியாளர்களால் ஆளப்படும் தமிழகத்தில் தமிழ்மொழியை கற்றுத்தர Summer Course நடத்தவேண்டியிருப்பது, மெல்லத்தமிழ் இனி சாகும் என்கிற கூற்றை மெய்ப்பிப்பது போல இருக்கிறது !
தமிழ் வாத்திக்கு ஆதரவு கொடுங்கள் !