எஸ் ஜே சீனு இயக்கத்த்தில் பிரபுதேவா நடிக்கும் பேட்ட ராப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பேரரசு , ” ஹிந்தி தெரியாததால் பக்கத்துல உட்கார்ந்தும் சன்னி லியோனிடம் பேச முடியல … அதுக்காச்சும் ஹிந்தி கத்துக்கணும் ..” என்று கலகலப்பாக ஆரம்பித்தார் .
தொடர்ந்து பேசிய அவர், ” இயக்குநர் சினு படப்பிடிப்பு தளத்தில் மிக வேகமாக பணியாற்றினர். ‘பேட்ட ராப்’- 90களில் இந்தியா முழுவதும் ஒலித்த பாடல். பேட்ட ராப் ஒரு வெற்றிகரமான வார்த்தை. முப்பது ஆண்டு கழித்து அந்த வார்த்தையை தலைப்பாக கொண்டு ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதிலும் பிரபுதேவா கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
பிரபுதேவா முப்பது ஆண்டுகளாக கதாநாயகனாகவே தொடர்ந்து நடித்து வருகிறார் என்றால்.. அது மிகப்பெரிய விசயம். அவருடைய நடனத்தின்போது ரசிகர்கள் அவருக்கு எலும்பு இருக்கிறதா? இல்லையா? என பேசிக்கொள்வார்கள். இப்போது வரை எலும்பு வளரவில்லை என்றே நினைக்க தோன்றுகிறது. அவரிடம் ஏற்பட்டிருக்கும் ஒரே ஒரு மாற்றம்.. அவருடைய தாடியில் நரை தென்படுகிறது. ஆனாலும் அவர் ஆற்றலுடன் நடித்தும் வருகிறார். நடனமாடியும் வருகிறார்.
பிரபுதேவாவின் அறிமுகம் எளிதாக இருந்தாலும்.. அவருடைய இன்றைய முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் கடின உழைப்பும், திறமையும், தொழில் மீதான பக்தியும் தான் காரணம்.
அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பேட்ட ராப் எனும் திரைப்படத்தில் அவருடைய ஆற்றலும், திறமையும் நிறைந்திருக்கும். அதனால் இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெறும்.
தற்போது வெளியாகும் திரைப்படங்களில் நிறைய வன்முறை காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது. ஆனால் இது போன்ற படங்களில் இருந்து ‘பேட்ட ராப்’ முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். கலகலப்பான காமெடி …அதிரடி சண்டை காட்சி… இனிமையான பாடல்கள்.. என எனது அற்புதமான கமர்சியல் கலவையுடன் தயாராகி இருக்கிறது. பிரபுதேவா மாஸ்டருக்கு ஏற்ற வகையில் கதையும் இருக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகும் தயாரிப்பாளர் தொடர்ந்து தமிழில் படங்களை தயாரிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். ” என்றார்.
“பாலிவுட் நடிகர் சல்மான்கான் ‘சிவகாசி’, ‘திருப்பாச்சி’ ஆகிய படங்களை பார்த்துவிட்டு அதனை இயக்கிய இயக்குநர் பேரரசுவை பற்றி என்னிடம் பலமுறை வியந்து பாராட்டியிருக்கிறார். அந்தத் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யலாமா..? என என்னிடம் கேட்டுக் கொண்டே இருப்பார். அதனால் ‘பேட்ட ராப் ‘ படத்திற்கு வாழ்த்த வருகை தந்த இயக்குநர் பேரரசுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்…” என்று பிரபு தேவா இவருக்கு சிறப்பாக நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.