ரணமென்று பார்க்காமல் ராணுவத்தில் சேர்ந்து

அடடா கவிதை... கவிதை... அமரனுக்கு ஒரு கவிதை

284

சிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய தமிழகத்திலிருந்து நான்காவதாக அசோக் சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்த்தின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, தீபாவளிக்கு வெளியாகி அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் அமரன். சமூக வலைத்தளங்களில் அந்தப் படத்தினை பார்த்துவிட்டு பலரும் சிலாகித்து பதிவுகள் போட்டு வரும் நிலையில், இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி இன் கவிதை வடிவிலான பதிவு பலராலும் படித்து பகிரப்பட்டு வருகிறது.

அந்த கவிதை மைசிக்ஸர் .காம் வாசகர்களுக்காக…

நன்றி : ரமேஷ் ரங்கசாமி

#அமரன்

இறுதியில்
உறுதியாக இருந்தும்
அழுதுவிடக்கூடாதென்று
எவ்வளவோ முயன்றும்
துக்கம் தொண்டையை அடைக்க

வேறுவழியின்றி
கடைசியாக
கண்ணீர் வழியத்தொடங்கி

சற்று நேரம் கழித்து
ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்
என்னை
நானே…

நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க
என்னேரமும்
இன்புற்று இருக்க…

எல்லையில்
துன்புற்று இருக்கிறது
ஒரு கூட்டம்
ராணுவக்கூட்டம்…

கடும் பனிப்பொழிவு
எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்
திக்… திக் என்ற சூழலில்
வாழ்வதென்பது
எதற்காக
யாருக்காக

இந்த
நாட்டில்
மது உண்டு
மதி மயங்கி
மகிழ்ந்து
கேட்பாரற்று திரிகிற கூட்டத்தில்
இருந்து விலகி

இதுதான் வாழ்வென்று
முடிவு செய்து
ஒருவன்
ரணம் என்று பார்க்காமல்
ராணுவம் என்று தேர்வு செய்து
நேசித்து
வாழ்ந்த ஒரு வாழ்க்கையை
நிஜத்தை

சினிமாவாக
இரண்டே முக்கால் மணிநேரத்தை
பார்க்கும் போதே
மனம் பதைபதைக்கிறது

இப்படி ஒரு வாழ்க்கையை
ஒருவன் வாழ்ந்து இருக்கிறான்
என்று நினைத்து பார்க்கும் போது
நெஞ்சு மேலும்
படபடக்கிறது

மேஜர் முகுந்த் வரதராஜன்
அவர்களுக்கு
வீரவணக்கம்…

இப்படி ஒரு வாழ்வியலை
படமாக தந்த
மொத்த பேருக்கும்
#சல்யூட்