சண்முக பாண்டியனை வைத்து ரமணா 2 – ஏ ஆர் முருகதாஸ்

120

VJ Combines நிறுவனம் Dass Pictures உடன் இணைந்து வழங்க,  தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம் தயாரிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் -ன் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் படம்  “படை தலைவன்”.

வரும் மே 23 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், L.K. சுதீஷ், ஹீரோ சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன், இயக்குநர் -நடிகர்கள் கஸ்தூரி ராஜா, சசிக்குமார்,  இயக்குநர்கள் A.R. முருகதாஸ், பொன்ராம் படத்தின் தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம், இயக்குநர் .U.K. அன்பு, ஒளிப்பதிவாளர்  சுரேஷ், தயாரிப்பாளர்கள் T. சிவா, J.S.K. சதீஷ், நடிகை யாமினி மற்றும் படக்குழுவினர் ஆகியோர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

சண்முக பாண்டியனை பார்க்கும் போது ரமணா 2 எடுக்கவேண்டும் என்று தோன்றுகிறது என்றார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், அவர் மேலும் பேசியபோது, “ஏராளமான படங்களில் நடிகருக்கு நிகராக வில்லன்கள் அழகாக இருக்கும் டிரெண்டை செட் செய்தவர் விஜயகாந்த் தான். அதற்கென ஒரு பெரிய நம்பிக்கை வேண்டும், அதை விஜயகாந்த் சார் அவர்கள் செய்தார்கள். எல்லோரும் விஜயகாந்த் குறித்துப் பேசி இருப்பார்கள். ஆனால் அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. நான் மட்டும்தான் விஜயகாந்த் உடன் பணியாற்றியுள்ளேன் என்று நினைத்தேன். ஆனால் கஸ்தூரி ராஜாவும் பணியாற்றியதாகக் கூறியபோது சற்று பொறாமையாக இருந்தது,

விஜயகாந்தின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் சண்முக பாண்டியனுக்கு வேண்டும். தமிழ்நாடு மக்கள் கண்டிப்பாக உங்களைக் கைவிட மாட்டார்கள். இவ்வளவு கம்பீரமான நடிகர் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறார். விஜயகாந்தின் இரு கண்கள் அப்படியே சண்முக பாண்டியனுக்கு உள்ளது. சினிமாவில் வளர்ந்து வாருங்கள்… கண்டிப்பாக ரமணா 2படம் எடுக்கலாம். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்…” என்றார்.

தயாரிப்பாளர் ஜே எஸ் கே சதீஷ் பேசியபோது, ”இந்தப் படத்தைத் தயாரித்த பரமசிவம் எனக்கு 25 ஆண்டு கால நண்பர், அவருடன் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன், அதனால் சொல்கிறேன் இந்தப் படம் இந்தியாவே பேசும் ஒரு படைப்பாக இருக்கும். கேப்டனின் ரசிகர்களுக்கு இன்னும் பெரிய விருந்து காத்திருக்கிறது. படத்தின் காட்சிகள் மெய் சிலிர்க்க வைத்துள்ளது, சண்முக பாண்டியன் பற்றி நான் சொல்ல தேவையில்லை, கேப்டனின் ரத்தம் அது அப்படியே இவரிடம் உள்ளது. அவருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகள். படக்குழு அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்…” என்றார்.

சண்முக பாண்டியனின் அண்ணனும் தே.மு.தி.க மாநில இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் பேசியபோது, “இந்த மேடையில் நான் ஒரு ரசிகனாக தான் வந்துள்ளேன், சினிமா மேடையில் நான் பேசியது இல்லை, இது எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது, நான் என் தம்பிக்காக வந்திருக்கிறேன்.  என் அப்பா விஜயகாந்திற்கு நான் தான் முதல் ரசிகன், அதே போல் சண்முக பாண்டியனுக்கும் நான் தான் முதல் ரசிகன், கேப்டனை நீங்கள் பார்க்க நினைத்தால் சண்முக பாண்டியன் உருவத்தில் நாம் அவரை பார்க்கலாம். கேப்டனின் கட்டளைகள் பணிகள் இன்னும் காத்திருக்கிறது. அவரின் அனைத்து ஆசையும் நடக்கும் நாம் நடத்திக் காட்டுவோம். மேலும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார் அது ஒரு வரம் தான். படம் மிக  நன்றாக இருக்கிறது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும், இந்தப் படத்தை நாம் அனைவரும் சுமந்து செல்வோம் அனைவருக்கும் நன்றி…” என்றார்.

முத்தாய்ப்பாக சண்முக பாண்டியன் பேசும்போது, “இந்த படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம், காரணம் அப்பா இருக்கும்போது இந்த படத்தின் கதையைக் கேட்டிருந்தார். இந்த படத்தில் இருக்கும் இரண்டு சண்டைக் காட்சிகளையும் அப்பா பார்த்திருக்கிறார். எனவே இந்த படம் எனக்கு மிக மிக நெருக்கமான படம். படைத்தலைவன் படத்தைக் கும்கி அல்லது வேறு எந்த படத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இந்த படம் முற்றிலும் வேறு மாதிரியான கதைக்களத்தைக் கொண்டுள்ளது.

என்னுடைய முதல் ஷாட்டே ஐந்து யானைகளுடன் தான்..” எல்லாரும் நான் அப்பா மாதிரி இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் எனக்கு அப்படியே தெரியவில்லை, அவரை ஈடு செய்ய முடியாது. இந்த படத்திற்காக என்னால் முடிந்தவரை உழைத்துள்ளேன். நிச்சயம் இந்தப் படம் உங்கள் அனைவரையும் கவரும். அனைவருக்கும் நன்றி…” என்றார்.