தீபிகாவுடன் டூயட் ஆட தயார் – சரத்குமார்

4

– K. விஜய் ஆனந்த்

DUDE படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

படத்தில் பால்வளத்துறை அமைச்சராகவும் சாதிவெறிபிடித்த மனிதராகவும் நடித்த சரத்குமாரின் கதாபாத்திரம் , படத்தின் முக்கியமான தூணாக இருந்தது என்றால் அது மிகையல்ல. படத்தில் பிரதீப் ரங்க நாதன் குழுவினர் பிராங்க் செய்வது போல, சீரியசான இடங்களில் சரத்குமாரும் பிராங்க் செய்வது ரசிகர்களுக்கு செம தீனியாக இருந்தது. படம் வெளியான நிலையில், படக்குழுவினருடன் திரையரங்குகளுக்குச் சென்ற சரத்குமார், தீபாவளிக்கு பதிலாக பொங்கல் வாழ்த்துக்கள் என்று சொல்லி பிராங்க் செய்ததும் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒன்றரை மணி நேரம் பேசப்போகிறேன் என்று பிராங்க் செய்ததும், அவரது Down to Earth குணத்தை காட்டியது.

தொடர்ந்து பேசிய அவர், படத்தில் தான் என்றாலும் கடுமையான வார்த்தைகளை ரோகிணியிடம் பேசியதற்கு  வருத்தம் தெரிவித்துக்கொண்டார். பிரதீப் ரங்க நாதன் மற்றும் மமீதா ஆகியோர் நடிப்பை வெகுவாக புகழ்ந்ததுடன், “ எனது கதாபாத்திரம் மூலமாக ஆணவக்கொலைக்கு எதிரான கருத்தை சமூகத்திற்கு புரியும் விதமாக காட்டியிருக்கிறார் கீர்த்தீஸ்வரன். சாதாரணமாக ஹீரோயினுக்கு அப்பா, ஹீரோவுக்கு அப்பா என்று கூப்பிட்டால்  மறுத்துவிடுவேன்… எனது கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்கவேண்டும்… தீபிகா படுகோனுடன் டூயட் பாடி நடிக்கவும் நான் தயார்… ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியாக நடித்திருக்கிறேன் என்பதையும் மறந்துவிட வேண்டாம்..” என்றார்.