– K. விஜய் ஆனந்த்
ஒட்டுமொத்த இந்திய சினிமா துறையிலும் திரைக்கதை மன்னன் என்கிற அடைமொழிக்கு சொந்தக்காரர், நமது பெருமை K பாக்யராஜ் மட்டுமே!
உதவி இயக்குநர் காலகட்டத்தில் கோவை ராஜாவாக ஸ்டைலாக சுத்திக்கொண்டிருந்தவர், பாரதிராஜவுடன் உதவி இயக்குநராக சேர்ந்து 16 வயதினிலே படத்தில் பணியாற்றி படப்பிடிப்பு முடிந்து, உதவி இயக்கு நர்களுக்கான டைட்டில் கார்டு போடும் நேரத்தில் அம்மா வைத்த பாக்யராஜே இருக்கட்டும் என்று முடிவு செய்து, K பாக்யராஜ் ஆக தனது திரைப்பயணத்தை ஆரம்பிக்கிறார், அடுத்தது, வரலாறு!
அம்மா கொடுத்த பெயர் மட்டுமல்ல, அம்மாவின் வாக்கும் அவருக்கு பெரிய ஆசிர்வாதமாய் அமைந்திருக்கிறது. துணை நடிகர்கள் யாரும் சரியாக நடிக்காத நிலையில், உதவி இயக்குநர் பங்களிப்பு போன்று, கிழக்கே போகும் ரயில் படத்தில் கழுதையை பிடித்து இழுத்து வந்து அந்த ஷாட் ஓகே ஆக உதவியிருக்கிறார். நம்மூர்க்காரன் டா என்று கோவை முழுவதும் இவர் கழுதையைப்பிடித்து இழுத்துச்செல்லும் காட்சியை போஸ்டராக ஒட்டப்பட, அட கழுதை மேய்க்கத்தான் மெட்ராஸுக்கு போனியானு பாட்டி உட்பட பலரும் அங்கலாய்க்க, “ எதுக்கும் கவலைப்படாதடா .. நீ ஒரு நாள் பெரிய நடிகரா வருவே..” என்று அவரது அம்மா ஆசிர்வதித்திருக்கிறார். அம்மாவின் ஆசி, அடுத்த சில நாட்களிலேயே நிறைவேற, துரதிஷ்டவசமாக K பாக்யராஜ் நாயகனாக நடித்த சுவர் இல்லாத சித்திரங்கள் வெளிவரும் முன்னரே அம்மா இறைவனடி சேர்ந்திருக்கிறார். அந்தப்படத்தில் ஒரு காட்சியில் , “ அம்மாஅப்பாலாம் போய்ச்சேர்ந்துட்டாங்க..” என்று தான் பேசிய வசனம் அபசகுணமாக அமைந்து அம்மாவையே போய்ச்சேர வைத்துவிட்டதோ என்று பின்னொரு நாளில் வருந்த ஆரம்பித்திருக்கிறார்.
அவரைப்பெற்ற அம்மா அவரை விட்டுச்சென்று விட்டாலும், தமிழகத்தின் தாய்க்குலங்கள் அவரைத் தத்து எடுத்துக்கொண்டார்கள் என்றே சொல்லவேண்டும், அந்தளவுக்கு அவருக்கு தாய்க்குலங்களின் அமோக ஆதரவு கிடைத்து, பெரிய நடிகராகவும் அதாவது இயக்குநர் கம் நாயகன் ஆனது நாமறிந்த விஷயம்.
பள்ளிப்பருவத்தில் காசு எது என்று தெரியாமல், மோதிரத்தை கொடுத்து தேன் மிட்டாய் சாப்பிட, அந்தக்கடைக்காரர் அதனை அவரது அம்மாவிடம் கொடுக்க, அந்தக்கோனார் கடைக்காரர் இடமிருந்து நேர்மையையும், பாரதிராஜாவிடம் இருந்து தொழிலையும் க்ற்றுக்கொண்டதாக தெரிவித்த K பாக்யராஜ், “ எனது ஆசிரியர்கள் இன்றும் எனக்கு உறுதுணையாக உள்ளனர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மக்களுக்கு செய்யும் நல்லதை பார்த்து அவருடைய குணாதிசயங்கள் என் மனதில் ஆழமாக பதிந்தது. சிவாஜி அவர்களும் இயக்குனர் எவ்வளவு புதிது என்றாலும் அவருக்கான மரியாதையை கொடுப்பார்கள். இவை அனைத்தும் என் மனதில் இருந்தது. கமல் அவர்களின் நடிப்பை இளம் வயதிலேயே பார்த்து ஆச்சரியப்பட்டேன். ரஜினி சாரை 16 வயதினிலே படத்தில் பார்த்தேன். அன்று பார்த்தது போல இன்றும் இருக்கிறார்…” என்றார்.
50 வருடங்கள் போனதே தெரியவில்லை என்று கூறும் K பாக்யராஜ், இந்த ஆண்டு மறுபடியும் இயக்கு நர் அவதாரம் எடுக்கிறார். ஆம். அவரது இயக்கத்தில் ஒரு படம் மற்றும் ஒரு இணையதொடர் என்று ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கின்றது.
முன்னதாக, K. பாக்யராஜ் , 50 ஆண்டுகள் நிறைவு செய்வதை ஒட்டியும், இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டும் மக்கள் தொடர்பாளர்களான டைமன் பாபு, சிங்காரவேல் மற்றும் ரியாஸ் K அஹ்மத் ஆகியோர் கே. பாக்யராஜ் -க்கு சால்வி அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்திரிகையாளர் அனைவருடனும் K.பாக்யராஜ் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
நிகழ்வில், சாந்தனு பாக்யராஜ் தனது தந்தையுடன் கலந்துகொண்டார்.



