– K Vijay Anandh
பொதுவாக திரைப்படங்கள் சார்ந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், சம்பந்தப்பட்ட படக்குழுவினரை, சார் மேடம் என்று அழைத்து தான் படக்குழுவினர்களுக்குள்ளும் பேசிக்கொள்வார்கள் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்பதாக இருந்தாலும் தங்களை விட இளவயது நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆக இருந்தாலும் சார் மேடம் என்று அழைத்து கேள்விகள் கேட்பார்கள்.
சுயமரியாதை சமூகநீதி சம உரிமை என்று பொதுவெளியில் பேசும் திரை கலைஞர்களாக இருந்தாலும் தங்களை பெயரைச் சொல்லி அழைப்பதை விரும்பாமல் சார் மேடம் என்று மற்றவர்களை அழைக்க வைத்து புளாங்கிதம் அடைவார்கள்.
குறைந்தபட்சம் சார் என்கிற ஆங்கில வார்த்தைக்கு பதிலாக, ஐயா என்று அழைத்தால் அட நம்மளை முதியவர்கள் ஆக்கி விடுவார்களோ என்கிற பயத்தில் அதனையும் தவிர்த்து விடுவார்கள்.
இப்படிப்பட்ட நிலையில், சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியன் இணைந்து தயாரித்த வித் லவ் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு முற்றிலும் வித்தியாசமாக அமைந்தது என்றால் மிகை அல்ல.
அதில் பங்கு கொண்ட நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் என்று அனைவருமே 20 முதல் 40 வயதுக்குள் இருப்பவர்களே. ஆயினும், ஒவ்வொருவரும் மேடையில் பேச வரும் பொழுது மற்றவர்களை ஐயா என்று குறிப்பிட்டு பேசினார்கள். தயாரிப்பாளரை பற்றி குறிப்பிடும் பொழுது மகேஷ் ஐயா, இசையமைப்பாளர் பற்றி குறிப்பிடும் பொழுது ஷான் ஐயா என்று குறிப்பிட்டு பேசியது மிகவும் இயல்பாக இருந்தது.
கடைசியில் பேச வந்த தயாரிப்பாளர் மகேஷ் ராஜ், இதுவரை இல்லாத அளவிற்கு, சக தயாரிப்பாளர் சௌந்தர்யாவை பற்றி குறிப்பிடும் பொழுது, சௌந்தர்யா அக்கா சௌந்தர்யா அக்கா என்றே பலமுறை , குறிப்பிட்டார்.
ஒருவேளை இவர் முதலிலேயே பேச அழைக்கப்பட்டிருந்தால், தொடர்ந்து பேசிய படக்குழுவினர்கள் அனைவரும், சௌந்தர்யா அக்கா சௌந்தர்யா அக்கா என்று அழைத்திருப்பார்கள்.
ஐயா மற்றும் அக்கா கலாச்சாரத்தை பறைசாற்றிய இந்த மேடையை உணர்ந்து இறுதியாக பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த், ” அனைவரும் ஒருவரை ஒருவர் ஐயா என்று அழைத்துக் கொள்வது வித்தியாசமாகவும் அழகாகவும் இருந்தது. அனேகமாக இது மணிகண்டனிடம் இருந்துதான் அனைவருக்கும் தொற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் அவர் அனைவரையுமே ஐயா ஐயா என்று தான் அழைப்பார். மகேஷ் ராஜ் என்னுடைய தம்பி தான் …” என்று மகிழ்ச்சியுடன் பேசினார்.
வயதில் சிறியவர்களாக இருந்தால் பெயரைச் சொல்லி அழைத்து மகிழ்வதும், பெரியவர்களாக இருந்தால் ஐயா என்று அழைத்து மகிழ்வதும் தொடர வேண்டும்.
பிகு: ஐயா என்று அழகிய தமிழில் அழைக்கும் கலாச்சாரத்தை பா ரஞ்சித் குழுவினர் தான் ஏற்படுத்த முயன்றார்கள் என்பதும், பா ரஞ்சித்தின் மக்கள் தொடர்பாளர் குணா எப்பொழுதுமே வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் சொல்லுங்கள் ஐயா நன்றி ஐயா என்று எப்பொழுதுமே ஐயா போட்டு பேசுவதும் குறிப்பிடத்தக்கது.