a K.Vijay Anandh review
ஒரு மிதவாத ஆக்சன் கிரைம் திரில்லர் பார்த்த திருப்தி சைரன் படத்தில் கிடைத்தது.
வாரிசு அரசியலுக்கு எதிரான & தலைமை பதவியை கைப்பற்ற திட்டமிடப்படும் அரசியல் படுகொலையில் ஆரம்பித்து தந்தை மகள் பாசப் போராட்டத்தில் பயணித்து, குடும்ப கௌரவத்தை காலி செய்த கௌரவக்கொலையாளிகளின் கோர முகத்தை தோலுரித்து படம் நிறைவடைகிறது.
மோகன்லாலும் மம்முட்டியும் ஒரு சேர புகுந்து விட்ட திலகன் ஆக ஜெயம் ரவி, ஒரு முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். பருவ வயதை எட்டி பிடிக்கும் குழந்தைகளுக்கு தந்தையாக நடிக்க தயாரானதில் இருந்தே, இன்றைய நமது நாயகர்கள் குறிப்பாக இந்த படத்தில் ஜெயம் ரவி நாங்கள் சிறந்த கதைக்கு எந்த தியாகம் வேண்டுமானாலும் செய்து ரசிகர்களை மகிழ்விப்போம் என்கிற உறுதியான செய்தியை சொல்லி இருக்கிறார்கள். அஜித்குமார் ஆரம்பித்து வைத்தது. ஜெயம் ரவி வரை தொடர்வது ஆரோக்கியமாக இருக்கிறது.
சால்ட் அண்ட் பெப்பருடன் கூடிய, கதாபாத்திர வயது முதிர்வுக்கு ஏற்ற தோற்றம், அதற்கேற்றார் போல காட்டன் கலர் வேஷ்டிகள் மற்றும் பிட் ஆன குர்தாக்கள் என்று வசீகரித்து இருக்கிறார் ஜெயம் ரவி. முற்பகுதியிலும் அவருக்கு ஒரே ஒரு சீருடை தான், ஆம்புலன்ஸ் டிரைவர் சீருடை . ஒப்பனை கலைஞருக்கும் ஆடைகளை வடிவமைத்த அனு பார்த்தசாரதிக்கும் பாராட்டுக்கள்.
சமூகத்தில் நடப்பது தான், இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் கூட இந்தப் படத்தை நீண்ட காலமாக சிறைக்குள் இருக்கும் அப்படிப்பட்ட பல நிரபராதிகளுக்கு சமர்ப்பித்துள்ளார். தாய் தந்தை சகோதரர்கள் மனைவி மற்றும் குழந்தைகள் என்று நெருங்கிய ரத்த பந்தங்களை பிரிந்து சிறைக்குள் வாழும் அந்த ரணம் யாருக்கும் கிடைத்து விடக்கூடாது என்பதுதான் இந்த படம் பார்க்கும் ஒவ்வொருவரின் பிரார்த்தனைகளாக இருக்கக்கூடும். அதற்காக நிஜமான குற்றவாளிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பது அல்ல, நிஜமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்.
பரோலில் வெளிவந்து ஜாதி அரசியல் செய்து கொண்டிருக்கும் ஜாதி அடிப்படையில் நிர்வாகம் செய்து கொண்டிருக்கும் வில்லன்களை பரலோகத்திற்கு அனுப்பி வைக்கும் சைரன் ஒரு வித்தியாசமான திரைக்கதை அனுபவத்தை தந்திருக்கிறது எனலாம்.
வாய் பேச முடியாத காது கேட்காத மாற்றுத்திறனாளிகளை உயிர்காக்கும் செவிலியர்களாக நியமிப்பார்களா என்கிற கேள்வி எழும்போதே, இது அந்த மருத்துவமனையை நிர்வகிக்கும் பங்குத்தந்தையின் சிறப்பு அனுமதி என்பதாக வசனம் வைத்து நியாயம் வழங்கி விடுகிறார்கள். பார்த்திபன் பாணியில் செல்வதாக இருந்தால் செவிலியர்கள் என்றாலே அவர்கள் சேவையால் பேரழகிகள் தான் ஆனால் இந்த அனுபவம் பரமேஸ்வரன் பேரழகிகளுக்கு எல்லாம் பேரழகு என்று சொல்லலாம். கொஞ்சமே வந்தாலும், நீக்கமற நிறைந்து விடுகிறார் ரசிகர்கள் மனதில். அவரது மகளாக தந்தை மீது இறுதிவரை பெருங்ககோபத்துடன் வலம் வரும் மகள் கதாபாத்திரத்தில் நடித்தவரும் அழகாக நடித்திருக்கிறார்.
ஜெயம் ரவியின் தங்கையாகவும் அவர் சிறைக்குச் சென்ற பிறகு அவரது மனைவியும் இறந்த பிறகு அவரது குழந்தையை அத்தை உறவு என்றாலும் அம்மா ஸ்தானத்தில் வளர்க்கும் அவரது தங்கையாக நடித்திருக்கும் சாந்தினி தமிழரசன் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.
நல்லவேளை, சமுத்திரக்கனியை நல்லவராக காட்டவில்லை. அழகம்பெருமாள் உள்ளிட்ட கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு அவர் செய்து வில்லத்தனம், இன்னும் அரசியலிலும் அரசு நிர்வாகங்களிலும் ஜாதி வெறி தலை விரித்து ஆடுகிறது என்பதை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
ஜெயம் ரவியுடனான யோகி பாபு காம்பினேஷன் எல்கேஜி அளவில் இருந்தாலும் தொடர்ந்து ஒரு சில படங்கள் வந்தால் இன்னும் அதிக சுவாரசியத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
கீர்த்தி சுரேஷ், மகா நடிகை கதாபாத்திரத்திற்கு பிறகு இந்த கதாபாத்திரம் அவருக்கு நிச்சயம் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் எனும் அளவிற்கு படம் முழுவதும் இறுக்கமான முகத்தோடு கண்டிப்பாக காவல்துறை அதிகாரியாக சிறப்பாக நடித்திருக்கிறார். யோகி பாபு முதல் சக காவலர்கள், ஜெயம் ரவி வரை யார் என்று பார்க்காமல் அவரது கைகள் பேசும் விதம் அருமை.
ஜிவி பிரகாஷின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசை ஆகியவை படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றன.
சண்டைக்காட்சியில் அடி வாங்கும் ஒவ்வொரு வில்லன்களுக்கும் அதற்கான வலி நிவாரணத்தையும் சொல்லிச் சொல்லி அடிக்கிறார் ஜெயம் ரவி. பொறுப்புள்ள ஆம்புலன்ஸ் டிரைவர் ஜெயம் ரவி கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அந்த சண்டைக்காட்சியை அமைத்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது, திலீட் சுப்புராயன். அதே நேரம் டீக்கடையில் நான்கு சிறுவர்களை நய்ய புடைக்கும் காட்சிகளை இன்னும் கொஞ்சம் “” மென்மையாக” அமைத்திருக்கலாம்.
தந்தை மகள் பாசப் போராட்டத்தை காட்டிய விதத்திலும், சிறை வாழ்க்கை எப்படி ஒரு தனி மனிதனை புரட்டிப் போடுகிறது என்று காட்டிய விதத்திலும் சைரன் சத்தமாகவே ஒலித்து இருக்கிறது.