-K.Vijay Anandh
அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன் என்பது இந்த ஊரைச் சேர்ந்த இன்னாரின் மகனின் மகன் என்று தன்னை அறிமுகப்படுத்த இயக்குனர் சிகரம் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளியான தில்லு முல்லு படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும் வசனம்.
கிட்டத்தட்ட அதே போன்று ஒரு அறிமுகத்துடன் அதாவது அய்யம்பேட்டை கந்தசாமி அம்பிகாபதி மகன் திருநாவுக்கரசு என்று சொல்லி திரைப்படத்துறைக்குள், தயாரிப்பு மேற்பார்வையாளராக அடி எடுத்து வைக்கிறார் அனைவராலும் அரசு என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு.
சங்கிலி முருகன் தயாரிப்பில் உருவான கரிமேடு கருவாயன் படத்தில் ஆரம்பித்து பஞ்சு அருணாசலம் சிவி ராஜேந்திரன் போன்ற ஜாம்பவான்களுடன் பயணித்து ராஜாதி ராஜா தளபதி போன்ற ரஜினிகாந்த் படங்களிலும் சிங்காரவேலன் உள்ளிட்ட ஒரு சில கமல்ஹாசன் படங்களிலும் ஒன்ஸ்மோர் மற்றும் கீதை உள்ளிட்ட விஜய் படங்களிலுமாக நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் பணியாற்றிய அனுபவிக்க தயாரிப்பு நிர்வாகியாக வலம் வந்தவர் திருநாவுக்கரசு.
திரைப்படத்துறையிலும் சரி பிற துறைகளிலும் சரி நேர்மையாக பணியாற்றுபவர்களுக்கு பிழைக்கத் தெரியாதவர்கள் என்கிற பட்டம் கொடுக்கப்படும். அந்த வகையில் இறுதிவரை நண்பர்களுக்காக நேர்மையாக எல்லாவற்றிற்கும் மேலாக தான் மிகவும் நேசித்த திரைப்படத்துறைக்காக நேர்மையாக பணியாற்றி கடந்த செப்டம்பர் மாதம் மறைந்து விட்ட திருநாவுக்கரசு இறுதியாக பணியாற்றிய படம் லால் சலாம்.
கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் திரைத்துறையில் பயணித்திருந்தாலும் கேமராவிற்கு முன் அவர் வந்தது இல்லை எனலாம், ஆனால் லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் காதலிக்கும் பெண்ணின் தந்தையாக ஒரே ஒரு காட்சியில் நடித்திருப்பார். ஒரு வாரத்தில் இவளுக்கு கல்யாணம் இன்று விவேக் பிரசன்னா மிரட்டல் தொனியில் கட்டளையிட மிகவும் அமைதியாக நின்று கொண்டு சரி என்கிற ஒரே ஒரு வார்த்தையை வசனமாக உச்சரிப்பார். அவர் காதில் உனது வாழ்க்கை முடிய போகிறது கிளம்பத் தயாராக இரு என்று காலன் உச்சரித்ததற்கு சரி என்று சொன்னாரா என்று நினைக்கும் வகையில் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அந்தப் படம் திரைக்கு வருவதற்கு முன்னரே காலன் அவரை அழைத்துக் கொண்டார்.
அப்படி ஒரு காட்சியில் தான் நடித்திருப்பதை தனது குடும்பத்தாரிடம் கூட எழுத்து மற்றும் ஊடக துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நன்மாறன் மற்றும் மணிமாறன் ஆகிய தனது இரு மகன்களுக்கும் கூட சொல்லாமல் இருந்திருக்கிறார். படம் பார்த்து அவரை அடையாளம் கண்டு கொண்டவர்கள் அவரது மகன்களை அழைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இதுவரை நடிக்காதவர் திரைப்படத்துறைக்காக கேமராவிற்குப் பின் உழைத்தவரை தெரிந்தோ தெரியாமலோ ரசிகர்களுக்கு அடையாளம் காட்டிய பெருமைக்கு அந்த படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொந்தக்காரர் ஆகிவிட்டார் என்றால் மிகை ஆகாது.
அதற்கும் ஒரு படி மேல் யோசித்துப் பார்த்தால் அந்த படத்தின் கதாநாயகன் விஷ்ணு விஷாலின் பெயர் திருநாவுக்கரசு என்று அமைந்திருப்பது இயற்கையின் வினோதம் என்றே சொல்ல வேண்டும்.
கலையை ஆத்மார்த்தமாக நேசித்தால் அது பணம் சம்பாதித்து கொடுக்கிறதோ இல்லையோ உரிய அங்கீகாரத்தை உரிய நேரத்தில் வழங்கி விடும் என்பது இதுதானோ !