தேர்தல் கமிஷனை ஒரு நொடி யோசிக்க வைத்த, ஆரி அர்ஜுனன்

ஒரு நொடி விழாவில் இரு ஐடியா

192

பி.மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நடிக்கும் படம் ஒரு நொடி. இத்திரைப்படத்தை தனது கிரியேட்டிவ் எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக வெளியிடுகிறார், வரும் ஏப்ரல் 26 அன்று பிரமாண்டமாக வெளியிடுடுகிறார் தனஞ்செயன். இப்படத்திற்காக அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம் இசையில் உருவான பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தமனின் நண்பரும் நடிகருமான ஆரி அர்ஜுன் வழக்கம் போல சமூக சிந்தனை கருத்துக்களை வெளிப்படுத்தினார்.  அவரது பேச்சில் திரைப்படத்துறைக்கும் தேர்தல் கமிஷனுக்குமாக இரண்டு முக்கியமான ஆலோசனைகளை வழங்கினார். மேடையில் வீற்றிருந்த வேல ராமூர்த்தி, பழ கருப்பையா, கேபிள் சங்கர் மற்றும் ஈரோடு மகேஷ் உள்ளிட்ட ஜாம்பவான்கள் அதனை ஆமோதித்தனர்.

நடிகர் ஆரி அர்ஜுனன் பேசுகையில், ”நாளைக்கு தேர்தல் என்பதால்.. பேச்சாளர் பழ. கருப்பையா பேசும்போது, ‘இங்கு கரப்சனும் இருக்கும். அடாவடித்தனமும் இருக்கும். எதுவும் மாறாது’ என்பதை சொல்லியிருக்கிறார். ஆனால் ஓட்டு போடும் நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை மாற்றம் ஏற்படும் என்பது தான். ஓட்டு போட்டால் மாற்றம் வரும் என்று நம்பி தான் ஓட்டு போடுகிறோம்.

சி. வி. குமார் தனஞ்ஜெயன் என தமிழ் சினிமாவின் ட்ரென்ட் செட்டர்ஸ் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். நான் சினிமாவில் நுழைந்து போராடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நான் பார்த்து வியந்த சில தயாரிப்பாளர்களில் இவர்களும் உண்டு. குறிப்பாக இவர்கள் நல்ல படைப்புகளை உருவாக்கி திரையரங்கத்திற்கு கொண்டு செல்லும் தயாரிப்பாளர்கள். இவர்களுடைய நிறுவனத்திலிருந்து அழைப்பு வராதா..? என ஏங்கி இருக்கிறேன்.

என்னைவிட.. சினிமா கனவுகளுடன் கடுமையாக உழைத்து சிறந்த படைப்பை உருவாக்கும் கலைஞர்களை தேடி கண்டறிந்து, அவர்களுக்கு வாய்ப்பளித்து படத்தை உருவாக்கி திரையரங்கத்திற்கு கொண்டு வரும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதே.. இதற்கு மிகப்பெரிய பாராட்டை அளிக்க வேண்டும்.

தமன்- ஈரோடு மகேஷ்- நான் நெருங்கிய நண்பர்கள். இருந்தாலும் ஒரு கதாநாயகனின் வெற்றி என்பது ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் பெரிய போராட்டத்தை போன்றது. ஏனெனில் நடிகர்கள் உடம்பை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். சாப்பிட வேண்டும். வாய்ப்புகளை தேடி ஓட வேண்டும். நல்ல படைப்புகள் வெளியாக வேண்டும். எனக்கும்.. தமனுக்கும்.. எங்களைப் போன்றவர்களுக்கும் என்ன பிரச்சனை என்றால்… கடைசி நிமிடம் வரை வேலை செய்ய வேண்டிய சூழல் உண்டு.‌ படத்தின் போஸ்டர் ஒட்டும் வேலையை கூட தயாரிப்பாளர், இயக்குநர் என அனைவரும் செய்வார்கள். ஆனால் நாயகன் என்பவர் திரையரங்கில் படம் ஓடும் கடைசி நாள் வரை வேலை செய்து கொண்டிருப்பார்.

தயாரிப்பாளர் அழகர்,  இவர் மனது வைத்ததால் தான் ஒரு நொடி தயாராகி இருக்கிறது. நல்ல சினிமாவாக தயாராகி தனஞ்ஜெயன் கைகளுக்கு வந்திருக்கிறது. நிறைய நபர்களின் கனவுகளை நனவாக்க க்கூடிய இந்த தயாரிப்பாளர் போன்றவர்கள் தான் சினிமாவுக்கு தேவை.

‘சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்காதீர்கள்’ என்று விஷால் நல்ல நோக்கத்தில் தான் சொன்னார். ஆனால் பலரும் அதனை வேறு விதமாக புரிந்து கொண்டார்கள். ஆனால் ஒரு விசயத்தை புரிந்து கொள்ளுங்கள். சின்ன பட்ஜெட் படம் …பெரிய பட்ஜெட் படம்.. என்றில்லை. நல்ல கன்டென்ட் உள்ள படத்திற்கு மக்கள் எப்போது ஆதரவு தர தயாராகவே இருக்கிறார்கள்.

‘மஞ்சுமல் பாய்ஸ்’, ‘காந்தாரா’ போன்ற படங்கள் பெரிய வசூலை தமிழில் பெற்றிருக்கிறது. நிறைய நல்ல படங்கள் இங்கு ஓடுவதற்கு மிக முக்கியமான காரணம் நல்ல கன்டென்ட் தான். நல்ல கதை… நல்ல திரைக்கதை… நேர்மையான உழைப்பு… இவையெல்லாம் ஒன்றிணைந்தால்.. அதுதான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்.

இப்படத்தின் இயக்குநர் மணிவர்மன் ஐ – புதிய தயாரிப்பாளர்கள் நம்பி முதலீடு செய்து படத்தை தயாரிக்கலாம். உங்கள் பணத்திற்கு அவர் பாதுகாப்பாக இருப்பார். இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் அனைவரும் பணத்தை எதிர்பார்த்து பணியாற்றவில்லை. இப்படத்தின் கதைதான் அனைவரையும் ஒன்றிணைந்து, எதையும் எதிர்பார்க்காமல் பணியாற்ற வைத்து. இந்த படம் வெளியான பிறகு ஹீரோ தமன் குமார் உள்ளிட்ட அனைவருக்கும் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என நம்புகிறேன்.

இந்த படத்தின் வணிகத்திற்கும், வெளியீட்டிற்கும் கேபிள் சங்கரும் ஒரு காரணம். இந்த விழா முடிவடைந்த பிறகு அவரை சந்தித்து, எங்களது படத்தைப் பார்த்து ஆதரவு தருமாறும் வணிகத்திற்கு வழிகாட்டுமாறும் ஏராளமானவர்கள் தொடர்பு கொள்வார்கள்.

‘தங்கலான்’, ‘கங்குவா’ என பெரிய பட்ஜெட் படங்களுக்கு பணியாற்றி வரும் தனஞ்ஜெயன் எப்போதும் பரபரப்பாகவே இருக்கிறார். இது மட்டும் இல்லாமல் திரையுலகில் ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக அது பற்றிய தனது எண்ணங்களை டிவீட் செய்கிறார்.

தனஞ்ஜெயன் மீது திரையுலகினருக்கு குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு பெரிய மரியாதை இருக்கிறது. ஏனெனில் அவரிடம் உள்ள ஃபினான்சியல் டிசிப்ளின். ஒரு நொடி படத்திற்காக தனஞ்ஜெயன் அனைவரையும் பணிவுடன் அணுகி படத்தைப் பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறும், அதை வீடியோவாக வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக என்னை அணுகும் போது நான் செய்த தவறை சுட்டிக்காட்டி இருந்தேன். நான் முதன் முதலாக வாக்களிக்க சென்று இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் நின்று அதற்கு மேல் பொறுமை இல்லாமல் வாக்களிக்காமல் திரும்பி வந்த விசயத்தை பகிர்ந்து கொண்டேன். காலப்போக்கில் நான் செய்த தவறை உணர்ந்தேன். ஓட்டு போடுவது நமக்காக. நாம் யாரையோ தேர்வு செய்கிறோம் என்பதற்காக அல்ல. நமக்காகத்தான் ஒருவரை தேர்வு செய்கிறோம் என்ற பொறுப்புணர்வை வீடியோவாக பதிவு செய்து அனுப்பினேன். இதற்கும் ஒரு காரணம் உண்டு. இதற்கும் இப்படத்தில் கிளைமாக்ஸிக்கும் ஒரு தொடர்பு உண்டு.

கோவிட் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டது போல, வாக்களித்தற்கான சான்றிதழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்படவேண்டும். அச்சான்றிதழுடன் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் போதோ அவர்களது உரிமைக்காக குரல் எழுப்பும் பொழுதோ அவர்களது குரல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்…

நாம் நமது தவறுகளை எப்போது ஒப்புக்கொள்கிறோம்…. நாம் செய்யும் தவறுகளை எப்போது திருத்திக் கொள்கிறோம்… என்பது மிகவும் முக்கியமானது. தவறு என்று தெரிந்த பிறகு அதனை திருத்திக் கொள்ளாமல் இருப்பது தான் தவறு. இதை உணர்த்தும் வகையில் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த திரைப்படம் மாற்றத்திற்கான ஒரு படம்.

மலையாள திரைப்படங்கள் வெற்றி பெறுகிறது. வேறு மொழி திரைப்படங்கள் வெற்றி பெறுகிறது. ஆனால் இதற்கு எல்லாம் முன்னோடி தமிழ் சினிமா தான். இங்குதான் சிறந்த கன்டென்ட்டிற்கு எப்போதும் ஆதரவு உண்டு. தமிழ் சினிமாவில் அதற்கு தற்போது ஒரு தேக்க நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் நாம் கதாசிரியர்களுடன் இணைந்து பணியாற்றுவதில்லை. இங்கு இரண்டு எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் நடிக்க வந்து விட்டார்கள். எழுதுவதை குறைத்து கொண்டு விட்டார்கள். அதனால் இவரைப் போன்ற எழுத்தாளர்களை நாம் உருவாக்க வேண்டும். இதற்காக ரைட்டர்ஸ் மேளா என்ற ஒரு விசயத்தை தொடங்க வேண்டும். எழுத்தாளரிடம் கதையை வாங்கி படத்தை தயாரிக்கும் போக்கு நம்மிடம் குறைந்து வருகிறது. இயக்குநர் கதையை கொண்டு வந்தால் அதனை ஏற்றுக் கொள்கிறோமே தவிர.. ஒரு எழுத்தாளிடமிருந்து கதையை வாங்கி அதை இயக்குவதற்கு மற்றொரு இயக்குநரை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. எழுத்தாளர்களையும், இயக்குநர்களையும் ஒன்றிணைக்க  கதாசிரியர் மேளா என்று ஒன்று நடத்தலாம் என்று இருக்கிறேன். இதற்கான தொடக்கமாக இந்த மேடை அமையும் என நான் நம்புகிறேன். ” என்றார்.